Saturday, October 10, 2026

சின்னாபின்னமானது இலங்கை ; அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா! (புள்ளிப்பட்டியல் இணைப்பு)


உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் இலங்கையை 302 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா, முதல் அணியாக அரையிறுக்குள் நுழைந்தது.

நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்தியா முதலில் துடுப்பெடுத்தாடியது.

அந்த அணியின் சுப்மன் கில், (92) விராட்கோஹ்லி (88), ஸ்ரேயாஸ் ஐயர் (82) ஆகியோரின் அபார ஆட்டம் கைகொடுக்க, 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 357 ஓட்டங்களைக் குவித்தது.

பின்னர் 358 ஓட்டங்கள் சேர்த்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது.

இலங்கை அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சாய்க்கப்பட, இலங்கை அணி 19.4 ஓவர்களில் 55 ஓட்டங்களுக்குள் சுருண்டது.

இதன் மூலம் இந்திய அணி 302 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்தது.

இலங்கை அணி சார்பாக துடுப்பாட்டத்தில், அஞ்சலோ மத்யூஸ் (12) மஹேஸ் தீக்ஷன (12 - ஆட்டமிழக்காமல் ), கசுன் ராஜித (14) ஆகியோர் தவிர வேறெவரும் இரட்டை இலக்கை எட்டவில்லை.

இந்திய அணி சார்பாக பந்துவீச்சில் முகமது ஷமி 5 விக்கெட்டுகளையும் சிராஜ் 3 விக்கெட்டுகளையும், பும்ரா, ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும வீழ்த்தினர்.

ஆட்டநாயகனாக இந்தியாவின் முகமது ஷமி தெரிவானார்.

இந்த வெற்றியின் மூலம் தொடர்ச்சியாக 7ஆவது வெற்றியைப் பதிவு செய்த இந்தியா, முதல் அணியாக அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது.


you may also like