- by Editor
- 10 months ago
சினிமா பிம்பத்தை நம்பி வாக்களித்த மக்கள் - விஜய்யின் அரசியல் உத்திக்கு ரோஜா சந்தேகம்
-
- by Editor,
- 2 weeks ago
- in இலங்கை செய்திகள்
திரையுலகில் உச்சத்தில் இருந்த பல நடிகர்கள் அரசியலில் களமிறங்கியபோது, தமிழக மக்களின் ஆதரவைப் பெற முடியாமல் தோல்வியைச் சந்தித்துள்ளனர். ஆனால், எம்.ஜி.ஆருக்குப் பிறகு கட்சி தொடங்கி, தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே முதலமைச்சரான நடிகர் விஜய்யின் அரசியல் பயணம் தற்போது கவனம் பெற்றுள்ளது.
விஜய்யின் ரசிகர்கள் அவரது வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்ததாக கூறப்படும் நிலையில், அரசியல் மாற்றத்தை விரும்பிய பலரும் ஏற்கனவே தமிழகத்தில் செயல்பட்டு வந்த கட்சிகளைத் தவிர்த்து, தமிழக வெற்றிக் கழகத்தை (த.வெ.க.) தேர்வு செய்ததாகவும் கூறப்படுகிறது.
அதேவேளையில், த.வெ.க. மீது பல்வேறு விமர்சனங்களும் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, அரசியல் அனுபவம் தொடர்பான கேள்விகள் அக்கட்சியைச் சுற்றி எழுந்துள்ளன.
இந்த நிலையில், நடிகர் விஜய்யின் அரசியல் வெற்றி குறித்து நடிகை ரோஜா சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார்.
அப்போது விஜய்யின் வெற்றி குறித்து கருத்து தெரிவித்த ரோஜா, “அதிர்ஷ்டத்தால் நடிகர் விஜய் முதல் முறையிலேயே முதலமைச்சராகிவிட்டார். ஒருவேளை இந்தத் தேர்தலில் அவர் தோல்வியடைந்திருந்தால், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு கட்சியை நடத்துவது அவருக்கு மிகவும் கடினமாக இருந்திருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், விஜய் கட்சிக்காக போதுமான அளவு உழைக்கவில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
“தமிழ்நாட்டின் அனைத்து தொகுதிகளிலும் விஜய் களப்பணி மேற்கொள்ளவில்லை. அந்தந்த பகுதிகளில் உள்ள மக்களின் பிரச்சினைகளை நேரடியாகக் கேட்டுத் தெரிந்துகொள்ளவில்லை. அவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான காலக்கெடு குறித்தும் தெளிவாகக் கூற முடியவில்லை” என ரோஜா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் பெரும்பாலான தொகுதிகளுக்கு விஜய் பிரசாரத்திற்குச் செல்லவில்லை என்றும், அனைத்து பகுதிகளிலும் கட்சியை வளர்ப்பது மட்டுமே போதுமான அரசியல் அணுகுமுறையாக இருக்குமா என்பது குறித்து தனக்கு சந்தேகம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
“சினிமா பிம்பத்தை வைத்து வாக்களித்துள்ளனர்”
விஜய்க்கு கிடைத்த வாக்குகள் குறித்துப் பேசிய ரோஜா, சினிமாவில் ஏழைகளுக்கு உதவுவது போன்ற கதாபாத்திரங்களில் அவர் நடித்திருப்பதைப் பார்த்த மக்கள், நிஜ வாழ்க்கையிலும் விஜய் அதேபோல் இருப்பார் என்ற எண்ணத்தில் வாக்களித்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
“சினிமாவில் ஏழைகளுக்கு உதவுவது போன்ற காட்சிகள் இடம்பெறும். அதேபோல் விஜய் நிஜ வாழ்க்கையிலும் இருப்பார் என்ற கற்பனையில் சிலர் வாக்களித்துள்ளனர். ஆனால், உண்மையில் அவர் அப்படி செய்வாரா என்பது அவர்களுக்குத் தெரியாது” என ரோஜா குறிப்பிட்டுள்ளார்.
விஜய் அரசியல் கட்சியைத் தொடங்கியபோதே தனக்கு ஆச்சரியமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
“விஜய் அதிகம் பேசக்கூடியவர் கிடையாது. அரசியலில் இருந்தால் நிறைய ஊர்களுக்குச் செல்ல வேண்டும்; மக்களிடம் நிறைய பேச வேண்டும். அவருக்கு இதெல்லாம் பிடிக்காதே, எப்படி செய்வார் என்று நானே ஆச்சரியப்பட்டேன்” என்று ரோஜா கூறியுள்ளார்.
“5 ஆண்டுகளுக்குப் பிறகுதான் தெரியவரும்”
சினிமாவுக்கும் அரசியலுக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பதாகக் கூறிய ரோஜா, விஜய்யின் ஆட்சி முடிந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகுதான் மக்கள் தாங்கள் அவரை சரியாகக் கணித்தார்களா என்பதை உணர்வார்கள் என்று தெரிவித்துள்ளார்.
“விஜய்யின் ஆட்சி முடிந்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகுதான் மக்கள் அவரை சரியாகக் கணித்தார்களா என்பது தெரியவரும். விஜய்க்கும் அப்போது சினிமாவுக்கும் அரசியலுக்கும் உள்ள வித்தியாசம் புரியும்.
சினிமாவில் நாம் எதுவும் செய்யாவிட்டாலும் மக்கள் நம்மை வாழ்த்துவார்கள், கொண்டாடுவார்கள். ஆனால், அரசியல் அப்படி கிடையாது. மக்களின் தேவைகள் அதிகமாக இருக்கும். அவர்களின் தேவைகளை நம்மால் பூர்த்தி செய்ய முடியவில்லை என்றால், ‘நாங்கள் என்னவோ நினைத்தோம்; இவர் இப்படி செய்துவிட்டார்’ என்று மக்கள் நினைக்கத் தொடங்குவார்கள்” என நடிகை ரோஜா தெரிவித்துள்ளார்.