Saturday, October 10, 2026

சிங்கிமலை வனப்பகுதியில் வழிதவறிய நெதர்லாந்து யுவதி பாதுகாப்பாக மீட்பு


ஹட்டன் சிங்கிமலை வனப்பகுதியின் மலை உச்சியில் வழிதெரியாமல் சிக்கியிருந்த நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த யுவதியொருவர், ஹட்டன் பொலிஸாரின் விரைவான நடவடிக்கையால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.

நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய லூனா டூகாட் என்ற இந்த யுவதி, பல்கலைக்கழக மாணவியாவார். அவர் தனது பல்கலைக்கழக மாணவர்களுடன் இலங்கைக்கு வருகை தந்து, ருஹுணு பல்கலைக்கழகத்துடன் இணைந்து கல்வி பயின்று வருகிறார்.

கல்விசார் ஆய்வு நடவடிக்கைக்காக தனது நண்பர்கள் சிலருடன் இணைந்து சில நாட்களுக்கு முன்பு ஹட்டன் சிங்கிமலை மலைப்பகுதிக்குச் சென்ற அவர், நேற்று (06) காலை மலை உச்சியை நோக்கி தனியாகச் சென்றுள்ளார். ஆனால், பின்னர் திரும்பும் வழியைத் தெரியாமல் காட்டில் சிக்கியுள்ளார்.

இதையடுத்து, அவர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததைத் தொடர்ந்து, ஹட்டன் பொலிஸாரின் தேடுதல் நடவடிக்கை உடனடியாக ஆரம்பிக்கப்பட்டது.

ஹட்டன் பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் கடினமான சூழ்நிலையிலும் காட்டுப் பகுதிக்குள் சென்று, சிங்கிமலை மலை உச்சியில் உள்ள பாறையின் மீது அமர்ந்திருந்த அந்த யுவதியை கண்டுபிடித்து பாதுகாப்பாக மீட்டனர்.

மேலும், காட்டிற்குள் இருந்தபோதே அவருக்கு உணவு மற்றும் பானங்கள் வழங்கப்பட்டதுடன், பின்னர் ஹட்டன் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

you may also like