Sunday, October 11, 2026

சாமர சம்பத் எம்.பிக்கு விளக்கமறியல் நீடிப்பு


ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் கைது செய்யப்பட்ட புதிய ஜனநாயக முன்னணி கட்சியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டில் ஊவா மாகாண முதலமைச்சராகக் கடமையாற்றியபோது பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப்பை வழங்குவதற்காக மாகாண சபை ஊடாக வங்கியிலிருந்து 10 இலட்சம் ரூபாவைக் காசோலையாகப் பெற்று அதனைப் பணமாக மாற்றி தனிப்பட்ட தேவைக்காகப் பயன்படுத்தியமை உள்ளிட்ட 3 ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கடந்த மார்ச் மாதம் 27 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்

இதனையடுத்து, சாமர சம்பத் தசநாயக்க நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் ஒரு ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் 50 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் 5 மில்லியன் ரூபா இரண்டு சரீர பிணைகளில் விடுதலை செய்யப்பட்டதுடன் ஏனைய இரு ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

you may also like