- by Editor
- 2 years ago
சந்தேகநபரைக் கைது செய்யுமாறு கோரி வவுனியாவில் போராட்டம்
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
வவுனியா, புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் பொலிஸார் முன்னிலையில் குடும்பஸ்தரைத் தாக்கிய நபரைக் கைது செய்யுமாறு கோரி வவுனியா - கண்டி வீதியில் அமைந்துள்ள சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் முன்பாக இன்று கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தாக்குதலுக்குள்ளான நபர் உட்பட 40 இற்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர், "பொலிஸார் பக்கசார்பாகச் செயற்படாது பிரான்ஸ் ராசனைக் கைது செய், பொலிஸ் நிலையத்துக்குள் வைத்து தாக்கியவருக்குப் பாதுகாப்பு கொடுக்காதே, பொது மக்கள் மீது தாக்குதல் நடத்திய பொலிஸார் மீதும் நடவடிக்கை வேண்டும்'' எனப் பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
இதனையடுத்து, வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சார்பாக 10 பேரை அழைத்துப் பேசினார். இதன்போது பொலிஸ் நிலையத்தில் வைத்து தாக்கிய வெளிநாட்டில் இருந்து வருகை தந்த நபரை 3 தினங்களுக்குள் கைது செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததுடன், குறித்த சம்பவத்துடன் சம்பந்தப்பட்ட பொலிஸார் மீதும் விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்திருந்தார். இதனையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து சென்றனர்.
இதேவேளை, கடந்த மாதம் 15 ஆம் திகதி வவுனியா, சின்னப் பூவரசன்குளம் பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையைப் புளியங்குளம் பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி உட்பட ஏனைய பொலிஸாரும் பிடித்து வைத்திருக்க வெளிநாட்டில் இருந்து வருகை தந்திருந்த நபர் ஒருவர் பொலிஸ் நிலையத்துக்குள் வைத்து தாக்கினார் என்று பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் தெரிவித்திருந்தார். அவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.