Sunday, October 4, 2026

கோவையில் முதல்வர் விஜய்க்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு


தாராபுரம் இடைத்தேர்தலில் பிரசாரம் மேற்கொள்ள நேற்று கோவை சென்ற தமிழக முதல்வர் விஜய்க்கு தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ளவும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளவும் தமிழக முதல்வர் விஜய், முதல்வரான பிறகு முதல்முறையாக சென்னையில் இருந்து தனி விமான மூலம் கோவை சென்றடைந்தார்.

இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகளிடம் சில நிமிடம் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு, வீதியில் சிறு தூரம் நடந்து சென்று, பிரசார வாகனத்தில் ஏறி சென்றார்.

வீதியில் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு, தொண்டர்கள் வீதியின் குறுக்கே வராதவாறு பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

கோவை விமான நிலையத்தில் இருந்து சின்னியம்பாளையம், நீலாம்பூர், கணியூர், கருமத்தம்பட்டி, சோமனூர், காரணம்பேட்டை, பல்லடம் வழியாக திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பொதுக்கூட்டம் நடக்கும் இடத்திற்கு சென்றார்.

கோவை மட்டும் இல்லாமல் கொங்கு மண்டலத்தில் இருந்து வந்த மக்கள், முதல்வர் விஜய்யை பார்ப்பதற்கு ஆர்வமாக காலை முதலே கடும் வெய்யிலைகூட பொருட்படுத்தாமல் நின்று கொண்டிருந்தனர்.

பொதுக்கூட்டத்தை முடித்துவிட்டு இரவு 7 மணிக்கு முதல்வர் விஜய் மீண்டும் தனி விமான மூலமாக சென்னைக்கு திரும்பினார்.


you may also like