Friday, October 9, 2026

காஸாவில் ஒரு மாதத்தில் 10 ஆயிரம் பேர் பலி!


இஸ்ரேலின் தாக்குதலால் கடந்த ஒரு மாதத்தில் மாத்திரம் காஸாவில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தகவலை பாலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேல் மீது காஸா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, பாலஸ்தீன ஆதரவு பெற்ற காஸாவின் ஹமாஸ் படையினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே ஒரு மாதமாக போர் நீடித்து வருகிறது.

காஸாவில் வான்வழி, கடல் வழி தாக்குதலைத் தொடர்ந்து தற்போது தரைவழித் தாக்குதலை இஸ்ரேல் இராணுவம் நடத்தி வருகிறது.

மருத்துவமனைகள், வணிக வளாகங்கள், மருந்தகங்கள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களை இலக்கு வைத்து தாக்குதல் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 10 ஆயிரத்து 328 பேர் பலியாகியுள்ளனர் என பாலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதில், 4 ஆயிரத்து 237 பேர் குழந்தைகள்.

காஸாவில் ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் ஒரு குழந்தை கொல்லப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ரஃபா எல்லை வழியாக காஸாவிலிருந்து மக்கள் வெளியேறி வருகின்றனர்.

எகிப்தின் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் உடனான உடன்படிக்கையின் பேரில், வெளிநாட்டு கடவுச்சீட்டைக் கொண்டுள்ளவர்கள், காயமடைந்த பாலஸ்தீனர்கள் ஆகியோர் வெளியேற அனுமதிக்கப்படுகின்றனர்.

அமெரிக்கா மற்றும் பிரிட்டன் அரசுகள் காஸாவில் சிக்கியிருந்த தங்கள் நாட்டு மக்கள் ரஃபா எல்லை வழியாக வெளியேறி இருப்பதை உறுதி செய்துள்ளன.

கடந்த வார இறுதியில் அல்-ஷிபா மருத்துவமனை வளாகத்தின் முன் நோயாளிகளை ஏற்றிச்செல்லவிருந்த அவசர ஊர்திகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து வார இறுதியில் இந்த எல்லை மூடப்பட்டது.

இந்த நிலையில், மீண்டும் திறக்கப்பட்ட எல்லை வழியாக ஆயிரக்கணக்கில் மக்கள் வெளியேறும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

you may also like