- by Editor
- 2 years ago
காரைநகர் கடற்பரப்பில் கைதான 12 இந்திய மீனவர்களும் விடுவிப்பு
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட12 இந்திய மீனவர்கள் நிபந்தனைகளுடன் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய மீனவர்கள் 12 பேரையும் ஊர்காவற்றுறை நீதிவான் ஜே.கஜநிதிபாலன் முன்னிலையில் யாழ். மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் முன்னிலைப்படுத்தினர்.
மீனவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் தலா ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை என்ற ரீதியில் ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 18 மாத சிறைத்தண்டனை விதித்து நீதிவான் உத்தரவிட்டார்.
காரைநகர் கடற்பரப்பில் 3 மீன்பிடிப் படகுகளுடன் மீனவர்கள் 12 பேரும் கடந்த 13 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தனர்.
தமிழ்நாடு, புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்களே கைது செய்யப்பட்டனர்.
குற்றம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் ஒரு படகின் உரிமையாளர் படகில் பயணித்துள்ளமையால், படகை பறிமுதல் செய்து நீதிவான் உத்தரவு பிறப்பித்தார்.
ஏனைய இரண்டு படகுகளின் உரிமையாளர்களும் படகில் இருக்காத காரணத்தால், அவர்களை முதலாவது சந்தேகநபராகக் கருதி வெளிவிவகார அமைச்சினூடாக அவர்களுக்கு அழைப்பாணை அனுப்புமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
இந்த இரண்டு மீன்பிடிப் படகுகள் தொடர்பான உரிமை கோரல் வழக்கு மார்ச் மாதம் 11 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் நீதிவான் அறிவித்துள்ளார்.