Thursday, October 8, 2026

காந்தம் போன்று முதலீடுகளை ஈர்க்க வேண்டும்: விண்வெளித் துறைக்கு பிரதமர் மோடி புகழாரம்


இந்திய விண்வெளித் துறை காந்தம் போன்று முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 2023 ஓகஸ்ட் 23 ஆம் திகதி சந்திரயான்-3 விண்கலம், நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. அதன் மூலம் நிலவின் தென் துருவத்தில் கால் பதித்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. அதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் ஓகஸ்ட் 23 ஆம் திகதி, தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

அதன்படி ஓகஸ்ட் 23 ஆம் திகதி நேற்று தேசிய விண்வெளி தினம் கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு பிரதமர் மோடி தனது சமூகவலைதளப் பக்கத்தில் நேற்றுவெளியிட்ட பதிவில்,

‘‘அனைவருக்கும் தேசிய விண்வெளி தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் பெரிய கனவுகளைக் காண்போம். மேலும் புதுமைகளைப் புகுத்துவோம். புதிய எல்லைகளைத் தொடுவோம்.’’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் விண்வெளி துறை சார்ந்த 20 ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளுடன் (சி.இ.ஓ) பிரதமர் நரேந்திர மோடி கடந்த வெள்ளிக்கிழமை கலந்துரையாடினார். அந்தக் கலந்துரையாடல் காணொலி நேற்று வெளியிடப்பட்டது.

இதில் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிடுகையில்,

''விண்வெளித் துறை தனியாருக்குத் திறந்து விடப்பட்டு உள்ளது. இந்தத் துறையில் இளம் தலைமுறையினர் துணிச்சலாகக் களமிறங்கி உள்ளனர். இந்திய அரசு மீது நீங்கள் நம்பிக்கை வைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதேபோல அரசும் உங்கள் மீது முழு நம்பிக்கை வைத்திருக்கிறது. நாம் ஒன்றிணைந்து புதிய சாதனைகளைப் படைப்போம்.

இந்திய விண்வெளித் துறை, காந்தம் போன்று முதலீடுகள் மற்றும் முதலீட்டாளர்களை ஈர்க்க வேண்டும். விண்வெளித் துறை சார்ந்த நிபுணர்களையும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கவர்ந்திழுக்க வேண்டும். இத்துறையில் ஆர்வம் உள்ள இந்திய வம்சாவளி இளைஞர்கள் இந்தியாவுக்குத் திரும்பி வரலாம்.

இங்குள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் இணைந்து தங்கள் திறமையை உலகுக்கு நிரூபிக்கலாம். விண்வெளித் துறை சார்ந்தநிறுவனங்களுக்கும் பிற துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களுக்கும் இடையே ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும். விண்வெளி குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், சுற்றுச்சூழல் அமைப்புகளுடன் இணைந்து செயல்படலாம்.

வேளாண் பல்கலைக்கழகங்கள் மற்றும் வேளாண் துறைகளுடன் இணைந்து விண்வெளி ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் செயல்படலாம். விவசாயிகளுக்குத் தேவையான தகவல்களை வழங்கி, விளைச்சலை அதிகரிக்க செய்யலாம்.'' என்று குறிப்பிட்டுள்ளார்.

you may also like