Friday, October 9, 2026

காதல் தோல்வி குறித்து மனம் திறந்த அனுபமா பரமேஸ்வரன்


திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் அனுபமா பரமேஸ்வரன், தனது சமீபத்திய பேட்டியில் காதல் தோல்வி மற்றும் கடந்த இரண்டு ஆண்டுகளாக தான் எதிர்கொண்டதாகக் கூறப்படும் கடுமையான மன உளைச்சல் குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

தான் அனுபவித்த உடல் மற்றும் மன ரீதியான துயரங்களைப் பற்றி பேசிய அனுபமா, கடந்த இரண்டு ஆண்டுகளாக தான் எதிர்கொண்ட மன அழுத்தமே தனது கடந்தகால சமூக வலைத்தளப் பதிவுகளுக்கும் காரணமாக அமைந்ததாக தெரிவித்துள்ளார்.

தன்னிடம் ஏற்பட்ட மாற்றத்தை குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் தன்னுடன் பணியாற்றியவர்கள் என தன்னைச் சுற்றியிருந்த அனைவரும் உணர்ந்ததாகவும், குறிப்பிட்ட அந்த உறவிலிருந்து விலகுவது தனக்கு நல்லது என அவர்கள் தொடர்ந்து அறிவுறுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தனது முன்னாள் காதலரின் நடவடிக்கைகளை நடிகர் விக்ரம் நடித்த ‘அந்நியன்’ திரைப்படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்களுடன் ஒப்பிட்ட அனுபமா, ஒரு நாள் அவர் மிகவும் அன்பாக ‘ரெமோ’ போன்று நடந்துகொள்வார் என்றும், மறுநாள் இரக்கமற்ற ‘அந்நியன்’ போன்று மாறிவிடுவார் என்றும் தெரிவித்துள்ளார்.

பின்னர் தனது தவறை உணர்ந்து மன்னிப்புக் கேட்பதும், மீண்டும் அதேபோன்ற நடத்தையை வெளிப்படுத்துவதுமாக இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான தொடர்ச்சியான மாற்றங்கள் தனக்கு மிகப்பெரிய குழப்பத்தையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தியதாகவும் அனுபமா தெரிவித்துள்ளார்.

இந்த உறவு தனது திரைப்பட வாழ்க்கையையும் பெரிதும் பாதித்ததாக அவர் தெரிவித்துள்ளார். தனது வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை முன்னாள் காதலர் கட்டுப்படுத்தத் தொடங்கியதால், பல நல்ல திரைப்பட வாய்ப்புகளை இழக்க நேரிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், தனது திரைப்பயணத்தில் முக்கியமான வெற்றியைப் பெற்ற ‘டிராகன்’ திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கூட தன்னால் முழுமையாக கலந்துகொள்ள முடியாமல் போனதற்கு அந்த உறவில் நிலவிய கட்டுப்பாடுகளே காரணம் எனவும் அனுபமா தெரிவித்துள்ளார்.

தொடர்பை ஆரம்பித்த மூன்று மாதங்களுக்குள்ளேயே திருமணம் தொடர்பான பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டு, அதற்காக அவசரப்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

எனினும், நிலைமையை உணர்ந்து திருமணத்தை நிராகரித்ததாக தெரிவித்த அனுபமா, அந்த முடிவின் மூலம் தான் பணத்திற்காக உறவில் இருந்தவர் அல்ல என்பதை நிரூபித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சரியான நேரத்தில் தான் எடுத்த அந்த முடிவு, எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மோசமான திருமண வாழ்க்கையிலிருந்து தன்னை காப்பாற்றியதாகவும் அனுபமா பரமேஸ்வரன் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

you may also like