- by Editor
- 2 years ago
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தீவிரவாதம் வலுவடையும்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு
-
- by Editor,
- 2 years ago
- in இந்திய செய்திகள்
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பயங்கரவாதமும், நக்சல் தீவிரவாதமும் வலுவடையும் என பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
சத்தீஸ்கரில் இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெற உள்ள சூரஜ்பூர் நகரில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதன்போது அவர் உரையாற்றுகையில்,
நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் பழங்குடி மக்களின் நலனில் காங்கிரஸ் கட்சி எவ்வித அக்கறையையும் காட்டவில்லை. பழங்குடி மக்களின் குழந்தைகளின் கல்வி குறித்த எவ்வித சிந்தனையும் அந்த கட்சிக்கு இருக்கவில்லை. ஆனால், பழங்குடி மக்களின் நலனில் பா.ஜ.க. எப்போதுமே அக்கறையுடன் இருந்து வருகிறது. பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் நாட்டின் குடியரசுத் தலைவராக வருவார் என உங்களில் யாராவது நினைத்துப் பார்த்தது உண்டா? ஆனால், பா.ஜ.க. அதனை நிகழ்த்திக் காட்டி இருக்கிறது. திரவுபதி முர்மு குடியரசுத் தலைவராக ஆகிவிடக் கூடாது என காங்கிரஸ் முயன்றது. அவர் குடியரசுத் தலைவராவதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என அது பாடுபட்டது. ஆனால், பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் நாட்டின் குடியரசுத் தலைவராக வேண்டும் என்பதை உறுதிப்படுத்திய கட்சி பா.ஜ.க.
காங்கிரஸ் கட்சி எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம், பயங்கரவாதிகள் மற்றும் நக்சல் தீவிரவாதிகளின் துணிச்சல் அதிகரிக்கிறது. நக்சல் தீவிரவாதிகளால் ஏற்படும் வன்முறையைக் கட்டுப்படுத்துவதில் காங்கிரஸ் தோல்வி அடைந்துவிட்டது. சமீப காலங்களில் நக்சல் தீவிரவாதத்துக்கு பா.ஜ.கவைச் சேர்ந்த பலர் இரையாகி இருக்கிறார்கள். சில நாட்களுக்கு முன்புகூட பா.ஜ.க. பிரமுகர் ஒருவர் நக்சல் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
அதேபோல், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மனிதர்களைக் கடத்தி பணம் பறிப்பது, போதைப் பொருள் வியாபாரம் ஆகியவை அதிகரிக்கின்றன. நமது சகோதரிகளும், மகள்களும் அதற்கு இலக்காகிறார்கள். பழங்குடி குடும்பங்களைச் சேர்ந்த பல பெண் குழந்தைகள் காணாமல் போகின்றனர். இதற்கு காங்கிரஸ் தலைவர்களிடம் எந்த பதிலும் கிடையாது என்று தெரிவித்துள்ளார்.