- by Editor
- 2 years ago
கல்வி டிஜிட்டல்மயமாக்கல் முன்னேற்றம் குறித்து பிரதமர் ஹரிணி அமரசூரிய கவனம்
-
- by Editor,
- 2 months ago
- in இலங்கை செய்திகள்
கல்வி டிஜிட்டல்மயமாக்கல் செயன்முறையின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பிரதமர் அலுவலகம், கல்வி அமைச்சு, டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, GovTech நிறுவனம், இலங்கை விமானப்படை, ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும் டயலொக் நிறுவனங்களின் அதிகாரிகளின் பங்கேற்புடன் ஜூலை 21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.
புதிய கல்விச் சீர்திருத்தங்களுக்கு தேவையான டிஜிட்டல் வசதிகளை வழங்கும் நோக்கில், பாடசாலைகளில் டிஜிட்டல் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துதல், ஸ்மார்ட் பலகைகள் (Smart Boards), இணைய வசதிகள் மற்றும் கணினி உபகரணங்களை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு வேலைத்திட்டங்கள் கடந்த ஆண்டில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரியின் தலைமையில் அமைக்கப்பட்ட விசேட செயலணியின் வழிகாட்டலின் கீழ் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை, இலங்கை விமானப்படையின் தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்கப்பட்ட தேசிய கல்வி முகாமைத்துவ தகவல் அமைப்பு (NEMIS) கட்டமைப்பின் மனிதவள முகாமைத்துவ (HRM) தொகுதியின் நான்கு மாகாணங்களுக்கான பணிகள் நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
எஞ்சிய ஐந்து மாகாணங்களின் தகவல்களை அடுத்த மூன்று மாதங்களுக்குள் NEMIS அமைப்பில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் ஆசிரியர் இடமாற்ற நடவடிக்கைகளுக்கும் இந்த அமைப்பு பயன்படுத்தப்படவுள்ளதாகவும் கூறப்பட்டது.
ஏற்கனவே சபரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் ஆசிரியர் இடமாற்ற செயற்பாடுகள் NEMIS அமைப்பின் ஊடாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
மேலும், பாடசாலைகளுக்கு இணைய வசதிகளை வழங்கும் நடவடிக்கையின் கீழ் ஃபைபர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் முன்னேற்றம் தொடர்பாகவும் பிரதமரின் கவனம் செலுத்தப்பட்டது.
டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் பாடசாலைகளுக்கான இணைய வசதிகளை நிறைவு செய்வதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், ஃபைபர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது சாத்தியமற்ற பாடசாலைகளுக்கு வயர்லெஸ் அல்லது செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் மூலம் இணைய வசதிகளை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அனைத்து பாடசாலைகளையும் LMS (Learning Management System) மற்றும் NEMIS அமைப்புகளுடன் இணைத்தல், ‘ஈ-தக்சலாவ’ (e-Thaksalawa) கற்றல் தளத்தை மேம்படுத்தல் மற்றும் கல்வி டிஜிட்டல்மயமாக்கல் தொடர்பாக கல்வி அமைச்சுக்கும் GovTech நிறுவனத்துக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட எதிர்கால திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில் சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் அரச உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.