Sunday, October 11, 2026

ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் இணைப்பு விழா: மதுரையில் ஸ்டாலின் தலைமையில் நிகழ்வு


முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தி.மு.கவில் இணைந்த நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள தன்னுடைய ஆதரவாளர்களை அக்கட்சியில் இணைக்கும் விழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மதுரை அருகே எதிர்வரும் 7ஆம் பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடுகளை செய்து வருகிறார்.

அ.தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், எவ்வித நிபந்தனையும் இன்றி அ.தி.மு.கவில் இணைய தயாராக இருக்கிறேன் என்று தொடர்ந்து தெரிவித்து வந்தார். ஆனால் கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி, எக்காரணம் கொண்டும் அவரை சேர்த்துக்கொள்ள முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். அதனால், வேறு வழியில்லாமல் அ.தி.மு.கவில் 3 முறை முதல்வராக பதவி வகித்திருந்தபோதும், ஜெயலிதாவின் விசுவாசத்துக்கு அடையாளமாக கூறப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.கவின் பரம எதிர்க்கட்சியாக கருதப்படும் தி.மு.கவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தார்.

அவருடன் அவரது மகன் ரவீந்திரநாத், உசிலம்பட்டி எம்.எல்.ஏ. ஐய்யப்பன், மதுரை முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்னண் உள்ளிட்டோரும் சேர்ந்தனர்.

ஓ.பன்னீர்செல்வத்தின் வாக்கு வங்கி, செல்வாக்கு போன்றவற்றை கருத்தில் கொண்டு தி.மு.க தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், அவரை தி.மு.கவில் இணைத்துக்கொள்ள மிகுந்த ஆர்வமாக இருந்தார். ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்த அவரது ஆதரவாளர்களுக்கு காலப்போக்கில், பதவிகள் அல்லது அடுத்து வரக்கூடிய உள்ளாட்சி தேர்தலில் உரிய அங்கீகாரமும், கட்சிப்பதவிகளும் வழங்க தி.மு.க. தலைமை உறுதி அளித்துள்ளது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள தனது ஆதரவாளர்களை தி.மு.கவில் இணைக்கும் பணிகளில் ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் ஈடுபட்டுள்ளனர். இந்த இணைப்பு விழா, தமிழகம் முழுவதும் உள்ள அவரது ஆதரவாளர்கள் எளிதாக வந்து செல்லும் வகையில் மதுரைக்கு அருகே எதிர்வரும் 7 ஆம் திகதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணியை முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணன் செய்து வருகிறார்.


you may also like