- by Editor
- 8 months ago
ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும்: தேர்தல் ஆணையரிடம் கட்சிகள் கோரிக்கை
-
- by Editor,
- 7 months ago
- in இந்திய செய்திகள்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை நேர்மையாக, வெளிப்படைத் தன்மையுடன் ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று சென்னையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரிடம் அரசியல்கட்சிப் பிரதிநிதிகள் வலியுறுத்தி உள்ளனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தேர்தலை நேர்மையாக, வெளிப்படைத் தன்மையுடன் நடத்துவதற்கான ஆலோசனைகளைப் பெறும் வகையில் தமிழகத்தில் உள்ள 12 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்தது.
அதன்படி, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையில் சென்னையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தேசியக் கட்சிகளான பா.ஜ.க, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கொம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி, தேசிய மக்கள்கட்சி மற்றும் மாநிலக் கட்சிகளான தி.மு.க, அ.தி.மு.க, தே.மு.தி.க, வி.சி.க, நா.த.க. ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்று, பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.
இந்திய கொம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணுவின் இறுதி அஞ்சலி நிகழ்வுக்குச் சென்றதால் அக்கட்சி சார்பில் யாரும் பங்கேற்கவில்லை. அக்கட்சியின் கருத்துகளை மார்க்சிஸ்ட் கொம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்தார். தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதையே அனைத்துக் கட்சியினரும் வலியுறுத்தினர்.
இதைத் தொடர்ந்து, தேர்தலை பாதுகாப்பாக நடத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள், எஸ்.பி.க்கள், ஐ.ஜி.க்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்தினார்.
வாக்குச்சாவடிகள் மற்றும் தேர்தல் பணியாளர்களின் தயார்நிலை, வாக்கு எண்ணும் மையங்கள், தேவையான பாதுகாப்பு படையினர், பறக்கும் படைகள் அமைப்பது உள்ளிட்டவற்றில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட வாரியாக கேட்டறிந்தார்.