Sunday, October 4, 2026

எவரையும் கைவிடாத AI தொழில்நுட்பம் புதுடில்லியில் அநுர அதிரடிப் பிரகடனம்


செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பமானது எவரையும் கைவிடாத வகையிலும், நெறிமுறைகளை அடிப்படையாகக் கொண்டும் அமைவதை உறுதிப்படுத்த இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளது என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

புதுடில்லியில் நடைபெற்று வரும் 'AI Impact 2026' மாநாட்டின் அரச தலைவர்கள் அமர்வில் நேற்று வியாழக்கிழமை கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற இந்த ஆரம்ப நிகழ்வில், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், பிரேசில் ஜனாதிபதி லூலா டி சில்வா உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

பிராந்திய ஒத்துழைப்பு

செயற்கை நுண்ணறிவுத் துறையில் இலங்கை தனித்து வெற்றியீட்டுவதை நோக்கமாகக் கொள்ளவில்லை எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இதனைப் பொருளாதார மற்றும் கலாசார ஒத்துழைப்பின் அடுத்த கட்டமாகப் பார்ப்பதாகக் குறிப்பிட்டார்.

இதற்கமைய, பின்வரும் நான்கு அடிப்படை விடயங்களை மையமாகக் கொண்ட பிராந்திய ஒத்துழைப்பை அவர் முன்மொழிந்தார்:

* றைந்த செலவில் பெறக்கூடிய மையப்படுத்தப்பட்ட மொழி தரவுத்தொகுப்புகள் (Language Datasets).

* பொதுவான மதிப்பீட்டு முறைகள்

* பாதுகாப்புக் கருவிகள்

* கூட்டுத் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள்.

கலாசார

அச்சுறுத்தல்

"AI தொழில்நுட்பம் ஒரு சில மொழிகள் மற்றும் கருத்தியல்களுக்குள் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டால், எமது தனித்துவமான கலாசாரப் பன்முகத்தன்மையை இழக்கும் அபாயம் ஏற்படும்" என்று ஜனாதிபதி எச்சரித்தார்.

இலங்கை மற்றும் இந்தியா போன்ற நாடுகளுக்கு மொழி மற்றும் கலாசாரமே நம்பிக்கையின் அடிப்படை என்பதால், உள்ளூர் மொழிகளை டிஜிட்டல் மயப்படுத்தி அவற்றை AI கட்டமைப்பிற்குள் ஒருங்கிணைக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

டிஜிட்டல் உட்கட்டமைப்பு

மற்றும் இளைஞர் சக்தி

இலங்கையிடம் தொழில்நுட்ப அறிவு கொண்ட இளம் மனித வளம் இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், தரவுப் பாதுகாப்பு மற்றும் சைபர் பாதுகாப்புக்கான சட்டக் கட்டமைப்புகள் தற்போது நவீனமயமாக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றங்களைப் பாராட்டிய ஜனாதிபதி, அத்தகைய நாடுகளுடன் இணைந்து பாதுகாப்பான பிராந்திய AI தரவு மையங்களை உருவாக்க இலங்கை தயாராக இருப்பதாகவும் உறுதிப்படத் தெரிவித்தார்.

you may also like