Sunday, October 4, 2026

எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரம் - நாமல் ராஜபக்ஷ கைது


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ இன்று (04) இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சர்ச்சைக்குரிய எயார்பஸ் விமான கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக நாமல் ராஜபக்ஷ இன்று முற்பகல் இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

இதன்படி, அவரிடம் சில மணிநேரம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர், ஆணைக்குழுவின் அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் விசாரணை

2013ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் விமான சேவைக்காக 6 A-330 ரக விமானங்களையும் 8 A-350 ரக விமானங்களையும் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகளின்போது 2 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்சமாகப் பெற்றதாக அப்போதைய ஸ்ரீலங்கன் விமான சேவையின் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க ஆகியோருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இந்த விவகாரம் தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழு ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.


இதன் அடிப்படையில், ஸ்ரீலங்கன் விமான சேவையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன கடந்த மார்ச் 12ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், கடந்த மே 8ஆம் திகதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.

அவரது மரணம் தற்கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டிருந்தனர்.

இருவருக்கு திறந்த பிடியாணை

இதனிடையே, எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் இரண்டாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க மற்றும் மூன்றாவது சந்தேகநபராக குறிப்பிடப்பட்டுள்ள ஷமீந்திர ராஜபக்ஷ ஆகியோரை கைது செய்வதற்காக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில், பிரான்ஸை தளமாகக் கொண்ட எயார்பஸ் நிறுவனத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் இலங்கைக்கு வருகை தந்து இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்கியிருந்தது.

இவ்வாறான பின்னணியிலேயே, எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக வாக்குமூலம் வழங்குவதற்காக நாமல் ராஜபக்ஷ இன்று ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில், வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

you may also like