Saturday, October 10, 2026

உரலார் கேள்வியும் உலக்கையார் பதிலும் - 69


- கம்பவாரிதி இ. ஜெயராஜ்-

1. உரலார் கேள்வி :-

​நல்லவர்களாய் இருக்கிறவர்களுக்குத் தீடீரென மரணம் வந்து விடுகிறது, கெட்டவர்கள் நீண்ட காலம் வாழ்கிறார்கள், கடவுளும் இப்போது கெட்டவர்களின் பக்கம் தானோ? கலிகாலம், கிலி காலம் என்றெல்லாம் புலம்புவதை விட்டுவிட்டு நான் ஒத்துக் கொள்கிற மாதிரி முடிந்தால் ஒரு பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்!​

உலக்கையார் பதில் :-

​'சீரியசான' கேள்வியைக் கேட்டு விட்டு, 'சீரியசாய்ப்' பதில் சொல்ல வேண்டாம் என்கிறீர்கள்? அதனால் விளையாட்டாய் ஒரு பதில் சொல்கிறேன். முன்பொரு முறை ஒரு நண்பன் இதே கேள்வியை என்னிடம் கேட்டு விட்டு நான் பதில் தெரியாதென்றதும், அவனே ஒரு சுவாரசியமான பதிலைச் சொன்னான். அதனையே உங்களுக்குச் சொல்லி விடுகிறேன்.

பாவிகள் அதிகம் செல்வதால் நரகம் எப்பொழுதும் 'ஹவுஸ்புல்'லாகத்தான் இருக்குமாம். அதனால் நரகத்திற்கான 'டிக்கெட்' அரிதாக ஓரிருவருக்குத்தான் கிடைக்குமாம். உலகில் நல்லவர்கள் தொகை மிகக் குறைவாக இருப்பதால் சொர்க்கத்திற்கு செல்வோர் மிக அரிதாகவே இருப்பார்களாம். அதனால் சொர்க்கத்தில் எப்பாழுதும் 'சீற்றுகள் பிறீயாகத்தான்' இருக்குமாம். அதனால் தான் 'சீற் பிறீயாக' இருக்கும் சொர்க்கத்தில் நல்லவர்களுக்கு உடன் 'சீற்' கிடைத்து விடுகிறதாம். 'ஹவுஸ்புல்லாக' இருக்கும் நரகத்திற்குள் பாவிகளுக்குச் 'சீற்' கிடைக்கப் பிந்துகிறதாம்.

இது எப்படி இருக்கு?

​

சல்லடையார் சலிப்பு :-

வாரிதியார், நல்லவர்களாய் இருந்தால் நாம் கெதியில் மண்டையைப் போட்டுவிடுவோம் என்கிறாரோ?

2. உரலார் கேள்வி :-

​வரவர நீங்களும் இந்தக்காலப் பொடியங்கள் போல 'வைச்சுச் செய்யிறது', 'சிறப்பு', 'ஆட்டையப்போடுதல்', 'சம்பவம் செய்தல்' போன்ற இதுவரை வழக்கத்தில் இல்லாத சொற்களை எல்லாம் போட்டும், ஆங்கில சொற்களை நிறையப் பாவித்தும் பதில் எழுதத் தொடங்கியிருக்கிறீர்கள். நீங்களே இப்படிச் செய்வது சரியாகுமா?​

உலக்கையார் பதில் :-

இதைச் சரியென்று சொல்ல மாட்டேன். தேவை கருதியே அப்படி எழுதுகிறேன். என்னைப் பொறுத்தவரை, நான் எழுதுகின்ற விடயங்களை இன்றைய இளையோரும் வாசிக்க வேண்டும். எனக்குத் தெரிந்த செந்தமிழில் பதில் எழுதினால் இன்றைய இளையவர்கள் இது 'பத்தாம்பசலி'த்தனமான விடயங்கள் என நினைத்து அவற்றைத் தாண்டிப் போய்விடுவார்கள். அதனால் தான் அவர்களுக்குப் பிடித்த பாஷையில், அவர்களுக்குப் பிடித்த பாணியில் எழுதிக் கொண்டிருக்கின்றேன்.

​ஆங்கிலச் சொற்களை அதிகம் சேர்த்துக் கொள்வதும் அதற்காகத்தான். உண்மையைச் சொல்லப் போனால், என்னுடைய ஆங்கில அறிவு என்பது பூச்சியத்தை அண்மித்தது. ஆனாலும் நான் இடையிடையே ஆங்கிலச் சொற்களை எடுத்து விடுவது இளையோரை ஈர்ப்பதற்காகவேயாம்.

சொல்லுகிற சொற்களை விட பொருள் முக்கியமானது. பொருளைக் கொண்டுசேர்ப்பிக்க மொழியைக் காலத்திற்கேற்பப் பயன்படுத்துவதில் தவறில்லை என்றே கருதுகிறேன். என்னுடைய மொழியறிவைக் காட்டுவதற்காக எழுதுவதை விட இளையவர்களின் பொருள் அறிவை வளர்ப்பதற்காக எழுதுவதே சிறந்தது என்பதுவே எனது முடிவு.

​இன்றைய இளையவர்களுக்கு மூத்தவர்களாகிய நாங்கள் நிறையச் சொல்ல வேண்டியிருக்கிறது. பழையகாலத்தில் வேடர்கள், தாம் பழக்கப்படுத்திய யானைகளை விட்டுக் காட்டு யானைகளை வரவழைத்துப் பிடிப்பார்களாம் . இதனை உமாபதி சிவாச்சாரியார் தன்னுடைய திருவருட்பயன் எனும் நூலில் பதிவு செய்திருக்கிறார்.

'பார்வை என மாக்களை முன் பற்றிப் பிடித்தற்காம் போர்வை எனக் காணார் புவி.' என்பது அவர் சொல்லி இருக்கும் குறள். இறைவன் பக்குவப்பட்ட மனிதர்களைத் தன் வயப்படுத்துவதற்காக மனித வடிவேற்றுக் குருவாக வருவானாம், இதனைச் சொல்லவே மேற்படி உதாரணத்தை உமாபதியார் பயன்படுத்தியிருக்கிறார்.

​இவையெல்லாவற்றுக்கும் மேலாக நம் திருவள்ளுவப் பெருமான் 'எவ்வது உறைவது உலகு உலகத்தோடு அவ்வது உறைவது அறிவு' என்று வேறு, எனது முயற்சிக்கு வழிகாட்டியிருக்கிறார். செய்வது பிழைதான், நல்ல நோக்கத்திற்காகச் செய்யப்படுவதால் அதுவும் சரியாகிறது. 'பிளீஸ்' கொஞ்சம் பெறுத்துக் கொள்ளுங்களேன். இளையவர்களிடம் நான் நினைக்கும் செய்திகள் போய்ச் சேர்ந்ததும் உங்கள் மனம் குளிரச் செந்தமிழிலேயே பதில் எழுதத் தொடங்குகிறேன் . அதுவரை 'குட்பாய்'!

சல்லடையார் சலிப்பு :-

​இந்தக் குசும்பு தானே வேணாம் என்கிறது..!

3. உரலார் கேள்வி :-

கடும் கோடையில் விளாசித் தள்ளும் மழையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

உலக்கையார் பதில் :-

​மனிதர்கள் எந்தக் கவலையுமின்றி ஒழுக்கம் கெட்டு நடப்பதைப்பாரத்து, இயற்கையும் அப்படி நடக்கத் தொடங்கி விட்டது. ஒழுக்கத்தின் அவசியத்தை இனித்தான் உலக மக்கள் உணரப் போகிறார்கள்.

இக்காலநிலைக் குழப்பத்திற்கான காரணத்தை விஞ்ஞானிகளும் விளக்கி இருக்கிறார்கள். இந்த ஆண்டில் 'எல்நீனோ' எனும் காலநிலை மாற்றம் ஏற்படப்போகிறதாம். இந்த 'எல்நீனோ' மாற்றம் பற்றி 1923 ஆம் ஆண்டில் 'சேர். கில்பர்ட் தாமஸ் வாக்கர்' என்பவர் முதன் முதலாக விளக்கினாராம்.

'எல்நீனோ'- தெற்கத்திய அலைவு என்பது, கடல் வளிமண்டல சுழற்சியில் ஏற்படும் வெப்பம், காற்றின் மாறுதல்கள் மற்றும் அவற்றால் எற்படும் விளைவுகளால் உலக நாடுகளில் உள்ள சில பகுதிகளில் பருவநிலைகளில் பாதிப்புக்களை உண்டாக்குமாம்.

இந்த 'எல்நீனோ' உலகின் பல பகுதிகளிலும் ஏற்படும், வெள்ளம், வறட்சி போன்ற பல இடையூறுகளுடன் தொடர்புள்ளதாய்ச் சொல்லப்படுகிறது. இக்காலத்தில் கடல்பரப்பின் வெப்பநிலையானது, சராசரி வெப்பநிலையைவிட அதிகரிக்குமாம்.​

மேலே சொன்ன 'எல்நீனோ'வின் விளைவுதான் கோடையில் நிகழ்ந்துள்ள மாரி என்கிறார்கள். சாராயம் குடித்தவன் தடுமாறுவது போல இயற்கையும் தடுமாறத் தொடங்கியிருக்கிறது. விஞ்ஞானிகள் மட்டுமன்றிப் பல நாடுகளில் வாழ்ந்த தீர்க்கதரிசிகளும் கூட இந்த ஆண்டில் இயற்கைப் பேரழிவு நடக்கப் போகிறது என்று எச்சரிக்கிறார்கள்.

என்ன நடக்கப் போகிறதோ தெரியவில்லை! எதற்கும் இந்த மாதம் வீட்டு 'பட்ஜெட்' போடுகிற பொழுது அரிசி, பருப்பு, சீனி முதலியவற்றைக் கொஞ்சம் கூடவே வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

சல்லடையார் சலிப்பு :-

கூட வாங்கக் காசுக்கு எங்க போறதென்று வாரிதியார்தான் சொல்ல வேண்டும்.

4. உரலார் கேள்வி :-

ஹெலிக்கொப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி மறைந்திருப்பது பற்றி?

உலக்கையார் பதில் :-

முதலில் அவருக்கான அஞ்சலியைச் செலுத்துகிறேன். இப்பொழுதே இணைய வெளிகளில் அவரது மரணம் பற்றிப் பல ஊகங்கள் வெளி வரத் தொடங்கிவிட்டன. அண்மையில் இஸ்ரேல் மீது நூற்றுக் கணக்கான ட்ரோன்களை ஏவி, துணிவாக இஸ்ரேலைத் தாக்க உத்தரவிட்டவர் இவர். அணு ஆயுதத்தைத் தயாரித்துவிட்டதாகச் சொல்லப்படும் ஈரானின் இருப்பு, இஸ்ரேலுக்கு மட்டுமன்றி அதனைச் செல்லப்பிள்ளையாக வளர்த்து வரும் அமெரிக்காவுக்கும் கூடத் தலையிடி தரத் தொடங்கியிருக்கிறது.

இந்நிலையில் திடீரென நிகழ்ந்திருக்கும் ஈரானிய ஜனாதிபதியின் விபத்து மரணம், நிச்சயம் பல ஊகங்களைக் கிளப்பத்தான் போகிறது. அப்படிக் கிளப்பப்படும் ஊகங்கள், உண்மையென நிரூபிக்கப்படுமானால், மூன்றாம் உலக யுத்தத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டு விட்டது என்றுதான் நினைக்க வேண்டியிருக்கும்.

சல்லடையார் சலிப்பு :-

ஊகங்கள் உண்மையாகாமல் இருக்கக்கடவது !!!

5. உரலார் கேள்வி :-

கொழும்பில் கம்பன் விழா நடக்கப் போகிறதாமே?

உலக்கையார் பதில் :-

​2020ம் ஆண்டோடு, 'கொரானா' காரணமாக நிறுத்தப்பட்ட விழா முயற்சியை இறைவனை வேண்டி இவ்வாண்டு தொடங்கியிருக்கிறோம். ஜுன் 14 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை இவ்விழா நடைபெறவுள்ளது. விழாச் சிறக்க உங்களது ஆதரவும், பிரார்த்தனையும் துணை செய்ய வேண்டும்.

சல்லடையார் சலிப்பு .-

சந்தோஷமான விசயம், பலரது கனவும் நனவாகப்போகிறது.

you may also like