- by Editor
- 1 year ago
உரலார் கேள்வியும் உலக்கையார் பதிலும்! (20.01.2024)
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
1. உரலார் கேள்வி :-
என்ன? செருப்போடு நின்று பொங்கல் பானைக்குள் அரிசி போட்டு நன்றாக வாங்கிக் கட்டுகிறீர்கள் போல? விழுகின்ற திட்டுக்கள் பற்றி என்ன நினைக்ககிறீர்கள்? 'மீம்ஸ்' போடும் சில பேர் மரியாதை குறைந்த சொற்களால் கூட உங்களை விமர்சிக்கிறார்களே. அது உங்களைப் பாதிப்பது இல்லையா? முகம் தெரியாமால் எழுதுகின்ற இவர்களையெல்லாம் கூட விட்டு விடுங்கள். யாழ்ப்பாணத்தில் 'உதயன்' பத்திரிகைக்காரர்கள் இது பற்றி விமர்சித்து நேரடியாகவே 'பத்தி' ஒன்றை எழுதியிருக்கிறார்களே. அவர்களுக்காவது பதில் சொல்லுவீர்களா? இல்லையா?
உலக்கையார் பதில் :-
இத்தகையவர்களின் கீழ்மைச் செயல்களுக்கு நான் என்றைக்கும் பதில் சொல்ல விரும்புவதில்லை. நீங்கள் கேட்டிருப்பதால் பதில் சொல்கிறேன். ஒரு கேள்விக்குள் பல கேள்விகளை அடுக்கியிருக்கிறீர்கள். ஒவ்வொன்றாய்ப் பதில் சொல்ல முயல்கிறேன்.
முதலில் நேர்மையுடனும், கலாசார அக்கறையுடனும் இச் செயல்பற்றிக் கருத்துரைத்திருக்கும் அன்பர்களுக்கான எனது தன்னிலை விளக்கத்தைச் சொல்லிவிடுகிறேன்.
நான் 40 ஆண்டுகால 'டயபற்றிக்' நோயாளி. அந்நோயினால் என் கால்களில் 'நியுரோபதி' எனும் பாதிப்பு உண்டு. அதனால் என் கால்களில் நெருப்புச்சுட்டால் அது எனக்குத் தெரிவதில்லை. முன்பு ஒருமுறை பொங்கலின் போது காலில் நெருப்புச் சுடுவது தெரியாமல் அதிக நேரம் தணலில் கால் வைத்துக் கொண்டு நின்று பின் அதனால் பெரும் பாடுபட்டேன்.
அந்த அனுபவம் தான் நெருப்பு இருக்கும் இடங்களில் என்னைச் செருப்புப் போட வைக்கின்றது. எல்லாம் சரி, பானையில் அரிசி போடும் போதாவது கொஞ்சம் கவனித்து செருப்பைக் கழற்றி இருக்கக் கூடாதா? என்று கேட்பீர்கள். செய்திருக்கலாம்தான்! நினைப்பு வரவில்லை. அவ்வளவுதான்! யாழில் நடைபெறுகின்ற கூத்துக்களை விடவா எனது செருப்புக் கால் கலாசாரத்தைப் பாதித்து விடப் போகிறது? என்றாலும் இனி வரும் காலங்களில் இதனைத் தவிர்க்க முயல்கிறேன்.
இனி 'மீம்ஸ் குசும்பர்களுக்கான' எனது பதில் தொடர்கிறது.
எங்கே இந்த மாடு விழும்? எப்படியெல்லாம் இதற்குக் குறி சுடலாம்? என்று காத்திருக்கும் சிலபேர், இந்தச் சந்தர்ப்பத்தைச் சாட்டாக வைத்து என்னைப்பற்றித் தாழ்த்தி எழுதி, தம்மைக் கலாசாரக் காவலர்களாகக் காட்ட முயல்கிறார்கள்.
பாவம்! அவர்களை நினைக்கக் கவலையாக இருக்கிறது. இவர்களது தூற்றுதல்களையும், போற்றுதல்களையும் நான் கடந்து வந்து பல காலம் ஆகி விட்டது. அது தெரியாமல் என்னைக் கவலைப்படுத்தலாம் என நினைந்து இவர்கள் 'உழட்டிக்' கொண்டிருக்கிறார்கள். ஏதோ வகையில் என்னை விளம்பரப்படுத்தியதற்காக அவர்களுக்கு எனது நன்றிகள்!.
இத்தகையவர்களின் நோக்கம், பிழைகளைக் கண்டிப்பதல்ல. என்னை எப்படியும் தாழ்த்திவிட வேண்டும் என்பதே. கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக நான் செய்து வரும் நல்ல விடயங்களில் ஒன்றைப் பற்றியேனும் மூச்சு விடக்கூட விரும்பாத இவர்கள், தேடிப்பிடித்து எனது பிழைகள் மேல் ஒளிபாய்ச்ச விரும்புகிறார்கள். அப்படி இவர்கள் என்மேல் பாய்ச்சும் அந்த ஒளியை, கொஞ்சம் திருப்பி, தங்கள் மேல் 'போக்கஸ்' பண்ணுவார்களே ஆனால், நான் இருக்கும் இடத்திற்கும் அவர்கள் இருக்கும் இடத்திற்குமான தூரத்தைத் தாமாக அவர்கள் அறிந்து கொள்வார்கள். பாவம்! அவர்களை விட்டு விடுங்கள்.
அடுத்து மரியாதைக் குறைவாக எழுதுவோர் பற்றிய உங்களது மற்றைய கேள்விக்கு வருகிறேன். என்னைப் பற்றி என்று இல்லை, வேறு எவரைப் பற்றி என்றாலும் ஒருவரின் தரம் அறியாமல் மரியாதைக் குறைவான வார்த்தைகளால் விமர்சிப்பது என்பது தவறு. அப்படி ஒருவர் விமர்சிக்கத் தலைப்படுகிறார் என்றால் அதைச் செய்பவர் மரியாதைக் குறைவானவராய் இருப்பார் என்பதுதான் உண்மை. 'நிலத்தின் தன்மை கால் காட்டும், காட்டும் குலத்தில் பிறந்தார் வாய்ச்சொல்' என்று, இவர்களைப் பற்றித் திருவள்ளுவர் அன்றே சொல்லிவிட்டார். அதற்கு மேல் இவர்களைப் பற்றி நான் என்னத்தைச் சொல்ல?
'உதயன்'பற்றி நீங்கள் கேட்காமல் விட்டிருக்கலாம். அவர்கள், மதிப்புக்குரியவர்களைத் தாழ்த்தி எழுதியேனும், வீழ்ந்து கொண்டிருக்கும் தங்களது வியாபாரத்தைப் பெருக்கப் பார்க்கிறார்கள். நல்ல மனம் இல்லாமல் அது எப்படி நடக்கும்? அவர்கள் எழுதியதை நினைக்கத்தான் சிரிப்பாக இருக்கிறது. எந்தத் தர்மம் பற்றியும் கவலைப்படாமல் 'ஊரைக் கொள்ளையடித்து உலையில் போட்டவர்கள்' எல்லாம், செருப்போடு உலையில் அரிசி போடுவதைப் பற்றிக் கவலைப்படத் தொடங்கியிருக்கிறார்கள். எல்லாம் காலத்தின் கோலம்.
சல்லடையார் சலிப்பு -
அவரைத் தொடுவான் ஏன்? கவலைப்படுவான் ஏன்?
2. உரலார் கேள்வி :-
நமது திருமுறைகளைப் பாடி, தமிழில்தான் ஆலயக் கும்பாபிஷேகங்களைச் செய்ய வேண்டும் என்று சிலர் வலியுறுத்தி வருகிறார்கள். அது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
உலக்கையார் பதில் :-
திருமுறைகள் மீதான அவர்களது பற்றினையும், தமிழ் மீதான பற்றினையும் பாராட்டுகிறேன். ஆனால் அவர்கள் சொல்வது சரி என்று தோன்றவில்லை. வடமொழியும், தமிழ்மொழியும் நெருக்கமான உறவு கொண்டவை. இன்றைய பிரச்சினைகளை மனதில் வைத்து அம்மொழிகளுக்கு இடையில் பகை வளர்ப்பது தவறென்றே கருதுகிறேன்.
அது மட்டும் அல்லாமல், நமது சைவ சமயத்தின், சாத்திர, தோத்திர நூல்கள் அனைத்தும் வேதத்தை முதல் நூலாகவும், ஆகமத்தைச் சிறப்பு நூலாகவும் ஏற்று வலியுறுத்தியிருக்கின்றன. இவ்விரண்டு நூல்களையும் இறைவனே படைத்தான் என்பதே அருளாளர்களின் கருத்தாய் இருக்கிறது. இறைவனால் படைக்கப்பட்ட அந்த நூல்களை நிராகரிக்கும் உரிமை நிச்சயம் எவருக்குமில்லை!
வேதங்கள், ஆகமங்கள் பற்றியும் வேள்விகள் பற்றியும் எங்களது தமிழிலும், சைவத்திலும் பரவலான பதிவுகள் உண்டு
சங்க இலக்கியங்களில்
புறநானூற்றில் வரும் 'பாஅல் புளிப்பினும் பகல் இருளினும் நாஅல் வேத நெறிதிரியினும் திரியாச் சுற்றமொடு முழுது சேண் விளங்கி' போன்ற பல பாடல்களில் வேதம் பற்றிய செய்திகள் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. அது மட்டுமல்லாமல் தொல்காப்பியத்திற்குப் பாயிரம் எழுதியவரின் பெயரை 'நான்மறை முற்றிய அதங்கோட்டாசான்' என்றே குறிப்பிடுகிறார்கள். சதுர்வேத பண்டிதராகச் சங்க காலத்திலேயே ஒருவர் விளங்கியிருந்தார் என்பதையும், அவரிடமே தொல்காப்பியர் பாயிரம் பெற விரும்பியிருக்கிறார் என்பதையும் இதன் மூலம் நாம் தெரிந்து கொள்கிறோம். அது போலக் காப்பிய இலக்கியமாகிய சிலப்பதிகாரத்தில், கண்ணகியின் திருமணம் வேத முறைப்படி நடந்ததை, 'மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிட தீ வலம் வந்தது' என்ற வரிகள் நமக்கு எடுத்துரைக்கின்றன. சங்கப் புலவராகிய நக்கீரர் தனது திருமுருகாற்றுப்படை எனும் நூலில் 'ஒருமுகம் மந்திர விதியின் மரபுளி வழாஅது அந்தணர் வேள்வி ஓர்க்கும்மே' என்றும் 'நூற்றுப்பத்தடுக்கிய நாட்டத்து நூறுபல் வேள்வி முற்றிய வென்றடு கொற்றத்து' என்றும் வேதங்கள் பற்றியும், வேள்விகள் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார்.
திருமூலர்
இவர், தான் இயற்றிய திருமந்திரத்தில் 'வேதமொடு ஆகமம் மெய்யாம் இறைவன்நூல்' எனவும் 'வேதங்கள் ஆட மிகும் ஆகமம் ஆட நாதன் கொண்டாடினான் ஞானானந்தக் கூத்தே' எனவும் வேதங்கள் பற்றிக் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாது வேதத்தை விட்ட அறம் இல்லை என்றும், வேதம் பற்றித் தர்க்கவாதம் செய்தல் கூடாது என்றும் இவர் வலியுறுத்தியும் உள்ளார் ('வேதத்தை விட்ட அறம்இல்லை வேதத்தின் ஓதத் தகும் அறம் எல்லாம் உள. தர்க்க வாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற வேதத்தை ஓதியே வீடு பெற்றார்களே'). அதுமட்டுமல்லாமல் வேதம், ஆகமம் பற்றித் தனித் தலைப்பிட்டே திருமூலர் அவற்றைக் கொண்டாடியும் இருக்கிறார்.
காரைக்கால் அம்மையார்
இவர் தனது திரு இரட்டை மணிமாலையில் 'வேதியனை வேதப் பொருளானை வேதத்துக்கு ஆதியனை ஆதிரை நன்னாளானை' எனச் சிவனை வேதமாகவும் வேத முதலாகவும் குறிப்பிட்டுள்ளார்.
திருஞானசம்பந்தப் பெருமான்
இவர் தனது பதிகங்களில் 'வேதத்தில் உள்ளது நீறு'என்றும், 'வேதம் ஓதி வெண்ணூல் பூண்டு' என்றும், பல இடங்களிலும் வேதம் பற்றியும், வேள்விகள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். அது மட்டுமல்லாமல் 'வேத வேள்வியை நிந்தனை செய்து உழல் ஆதமில்லி அமனொடு தேரரை' என்று வேதாகமங்களை வெறுத்த சமண, சாக்கியர்களைப் பதிகந்தோறும் பத்தாவது பாடலில் சாடிப் பாடியதோடு, 'மாசுமெய்யர் மண்டைத்தேரர், குண்டர், குணமிலிகள் பேசும் பேச்சை மெய்யென்றெண்ணி அந்நெறி செல்லன்மின்!' என்று நமக்கு அறிவுரையும் கூறியுள்ளார்.
திருநாவுக்கரசர்
'வேதங்கள் நான்கும் கொண்டு விண்ணவர் பரவி ஏத்த, பூதங்கள் பாடி ஆடல் உடையவன் புனிதன் எந்தை' எனவும், 'வேதியா! வேதகீதா! விண்ணவர் அண்ணா!' எனவும், 'வேதம் ஓதி வந்து இல் புகுந்தார் அவர்' எனவும், 'வேத நாயகன் வேதியர் நாயகன்'எனவும், 'வேதம் ஓர் நான்காய், ஆறு அங்கம் ஆகி' எனவும் தனது தேவாரங்களில் பல இடங்களில் வேதங்களை அங்கீகரித்துப் பாடுகிறார்.
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
'வேதம் ஓதி, வெண்நீறு பூசி, வெண் கோவணம் தற்று' எனவும், 'வேத வேதியர், வேட நீதியர்'எனவும், 'வேதியர் விண்ணவரும் மண்ணவரும்தொழ' எனவும் பல இடங்களில் வேதத்தை அங்கீகரித்து இவரும் பாடுகிறார்.
மாணிக்க வாசகர்
இவர் தனது திருவாசக நூலில், 'வேத மொழியர், வெண் நீற்றர், செம் மேனியர்' என்றும், 'வேதமும், வேள்வியும், ஆயினார்க்கு' என்றும், 'வேதி, போற்றி! விமலா, போற்றி!' என்றும், 'ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க' என்றும், 'இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்' என்றும் பல இடங்களில் வேத ஆகமங்களைப் போற்றிப் பாடியுள்ளார்.
சேக்கிழார்
இவரும்'வேத நெறியின் முறைபிறழா மிக்க ஒழுக்கம் தலைநின்ற சாதி நான்கும்' என்றும், 'வேத நெறி தழைத்தோங்க! மிகு சைவத் துறை விளங்க' என்றும், 'வேதங்கள் மொழிந்தபிரான்'என்றும் வேதங்களைப் பல இடங்களிலும் பாராட்டிப் பாடியுள்ளார்.
இப்படியாக நம் தமிழின் பெரும் புலவர்களும், நயன்மார்களும் வேதங்களையும், ஆகமங்களையும் போற்றிப் பாடியிருக்க குறைமதியாளர்களின் கருத்துக்களைக் கேட்டு அந்தத் தெய்வ மறைகளைக் கைவிடுவது என்பது நம்மினத்துக்கு நாம் செய்யும் மாபாதகம் ஆகிவிடும் என்பதை நாம் தெரிந்து கொள்ளவேண்டும்.
திருமுறைகளை ஓதித் தமிழில் தான் கும்பாபிஷேகங்களைச் செய்ய வெண்டும் என்று சொல்வோரிடம் முக்கியமான இரண்டு கேள்விகளைக் கேட்க வேண்டியிருக்கிறது.
நீங்கள் சொல்லும் திருமுறைகளைப் பாடிய அருளாளர்களே, தாம் பாடிய திருமுறைகளில்
வேதங்களையும், ஆகமங்களையும் போற்றிப் பாடியிருக்க, அவற்றைக் கைவிடச் சொல்வது எப்படி
நியாயமாகும்? உண்மையாக நீங்கள் திருமுறைகளைப் போற்றுகிறீர்கள் என்றால் அவை போற்றிப்
பாடியிருக்கும் வேத, ஆகமங்களையும் போற்ற வேண்டும் அல்லவா? - இது முதற் கேள்வி.
திருமுறைகளைப் பாடித்தான் கும்பாபிஷேகத்தைத் செய்ய வேண்டும் என்று வாதிடும் நீங்கள்,
ஆலயங்கள் கட்டும் முறைமை, விக்கிரகங்கள் அமைக்கும் முறைமை, யாகங்கள் செய்யும் முறைமை
என்பவை பற்றியதான வரையறைகள் திருமுறைகளில் எங்கேனும் சொல்லப்பட்டிருப்பதாய்க் காட்டுவீர்களா? மேற்சொன்னவற்றை எல்லாம் நாம் வேத, ஆகமங்களில் இருந்து தானே தெரிந்து கொள்கிறோம். ஆகம முறைப்படி கட்டிய ஆலயங்களின் கும்பாபிஷேகத்தை ஆகம மந்திரம் சொல்லிச் செய்யக்கூடாது என்பது எப்படி நியாயமாகும்?- இது இரண்டாவது கேள்வி.
இவர்களைப் போன்றோர் மொழிப்பற்றைப் பேசிப்பேசி மொழியை முடிந்தளவு தாழ்த்தி விட்டனர். இனி அதைச் சமயத்திலும் கொண்டு வந்து அதனையும் தாழ்த்தப் பார்க்கிறார்கள் போல. உண்மைச் சைவர்கள் இவர்களைப் புறந் தள்ளிவிட்டு வேத, ஆகம நெறிகளைப் பின்பற்ற வேண்டும் என்பதே எனது கருத்து.
சல்லடையார் சலிப்பு -
சிட்னி முருகன் கோயில் பிரச்சனையை வாரிதியாருக்கு யாரோ சொல்லிப் போட்டினமோ ?
3. உரலார் கேள்வி :-
இராவணன் சிவபக்தன் இல்லை என்று நீங்கள் சொன்னதை பலர் இன்றுவரை ஏற்க மறுக்கிறார்களே?
உலக்கையார் பதில் :-
அதற்கு நான் என்ன செய்ய? நான் நூல்கள் சொல்வதைச் சொல்கிறேன். அவர்கள் தாங்கள் நினைப்பதைச் சொல்கிறார்கள். அவர்களில் பலருக்கு இராமன் தன் மனைவியைத் தீக்குளிக்கச் செய்தது பெரும் குற்றமாகத் தெரிகிறது. இராவணன், மாற்றான் மனைவி என்று தெரிந்தும் சீதையை அபகரித்தது குற்றமாய்த் தெரியவில்லை. அது அவர்களின் புத்தியின் கோளாறு.
இராவணனின் தம்பி கும்பகர்ணன், விபீடணன் ஆகியோரும், மாமன் மாரீசனும் கூட இராவணனின் செயலைக் கண்டித்தார்கள். அந்த அரக்கர்களுக்குத் தெரிந்த நியாயம் கூட இந்த அரக்கர்களுக்குத் தெரியவில்லை.
இதைச் சொன்னதும் அவன் காமுகன்தான் ஆனாலும் சிவ பக்தன் என்று தொடங்குவார்கள். அதற்கான பதிலை நான் சான்றுகளோடு முன்னரே சொல்லிவிட்டேன். தேடிப்படிப்பார்களாக! (படிக்கும் வழக்கம் என்ற ஒன்று இருந்தால்)
நீங்கள் கேட்டதற்காக, நம் அடியார்கள் இருவர் இராவணன் பற்றிச் சொன்ன இரண்டு கருத்துகளை மட்டும் இங்கே பதிவு செய்கிறேன்.
ஞானசம்பந்தர் இராமேஸ்வரம் பற்றிப் பாடிய பதிகத்தில் 'மானன நோக்கியை தேவி தன்னை ஒரு மாயையால் கான் அதில் வவ்விய கார் அரக்கன் உயிர் செற்றவன் ஈனம் இலாப் பகழ் அண்ணல் செய்த இராமேச்சுரம் ஞானமும் நன்பொருள் ஆகி நின்றது ஒரு நன்மையே' என்று இராவணின் இழிவைத் தெளிவாக எடுத்துச் சொல்கிறார். மான் போன்ற மருண்ட பார்வையை உடைய சீதாப்பிராட்டியை மாயம் செய்து கானகத்தில் கவர்ந்த கரிய அரக்கனாகிய இராவணனின் உயிரை நீக்கிய குற்றமில்லாத பெரும் புகழ் உடைய அண்ணலாகிய இராமபிரானால் ஆக்கப்பட்ட இராமேஸ்வரமானது உயிர்களுக்கு சிவஞானத்தையும் முத்தியையும் தரும் என்பது இப்பாடலின் பொருள்.
மாணிக்கவாசகரும் தான் இயற்றிய 'திருவுந்தியார்' பதிகத்தில், 'தேரை நிறுத்தி மலையெடுத்தான் சிரம் ஈரைந்தும் இற்றவாறு உந்தீபற இருபதும் இற்றதென்று உந்தீபற' என்று இராவணனின் ஆணவத்தையும் அதை சிவபெருமான் அடக்கிய விதத்தையும் பாடியுள்ளார்.
சிவனடியார்களாகிய நம் நாயன்மார்கள் இன்னொரு சிவனடியாரை இழிவு செய்து பாடுவார்களா ? என்னைத் திட்டும் ' மேற்படியான்கள்' இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வார்களா ?
ஒருவேளை இராவணனை இவ்வாறு இழிவு செய்து பாடியதால் மேற் சொன்னவர்களையும் கம்பன் கழக உறுப்பினர்கள் என்று இவர்கள் சொன்னாலும் சொல்வார்கள் போல?
சல்லடையார் சலிப்பு -
'மேற்படியான்கள்' மேல் படியான்கள் போல...ஹீ..ஹீ..ஹீ..!