Saturday, October 10, 2026

ஈரான் போரில் AI பயன்படுத்தியதை ஒப்புக்கொண்ட அமெரிக்க இராணுவம்


ஈரான் உடனான போரில் அமெரிக்க ராணுவம் பல்வேறு செயற்கை நுண்ணறிவு கருவிகளை பயன்படுத்துவதை உறுதிப்படுத்தியுள்ளது.

அமெரிக்க ராணுவ மத்திய கட்டளை (CENTCOM) தலைவர் பிராட் கூப்பர், தரவுகளை விரைவாக ஆய்வு செய்ய ஏஐ கருவிகள் உதவுவதாக தெரிவித்துள்ளார்.

பல மணிநேரம் அல்லது நாட்கள் எடுக்கக்கூடிய தரவு ஆய்வுகளை, ஏஐ மூலம் சில நொடிகளில் முடிக்க முடிகிறது. இது எதிரியை விட வேகமாக முடிவுகளை எடுக்க உதவுகிறது. ஆனால் இலக்குகளைத் தாக்குவது குறித்த இறுதி முடிவை எப்போதும் மனிதர்களே (ராணுவ வீரர்கள்) எடுப்பார்கள் என்று கூப்பர் தெரிவித்தார்.

பிப்ரவரி 28 முதல் தொடங்கி நடைபெற்று வரும் இந்த அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதலில் இதுவரை 1,300 பேர் ஈரானில் கொல்லப்பட்டுள்ளனர்.

இதில் தெற்கு ஈரானில் உள்ள பெண்கள் தொடக்கப் பள்ளியின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 175 சிறுமிகள் கொல்லப்பட்டனர். பள்ளியை தாக்கியது அமெரிக்காவின் டோமாஹாக் ஏவுகணை என்பதற்கான வீடியோ மற்றும் சாட்டிலைட் ஆதாரங்கள் வெளியாகி உள்ளன.

பழைய உளவு தகவல்களால் தவறுதலாக ராணுவ தளத்திற்கு பதிலாக அருகில் உள்ள பள்ளி மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து அமெரிக்க ராணுவம் உள் விசாரணை நடத்தி வருகிறது. இந்த பழைய உளவு தகவலை ஏஐ தான் வழங்கியதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஒருவேளை ஏஐ வழங்கிய தவறான தகவலால் இந்த தாக்குதல் நடந்திருந்தால் இது மனித குலத்திற்கே முக்கிய எச்சரிக்கை மணியாக இருக்கும்.

இதற்கிடையே டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் அமெரிக்க ராணுவத்தில் ஏஐ தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்த முயன்று வருகிறது.

தனது ஏஐ மாடல்களை தானியங்கி ஆயுதங்களாகவோ அல்லது உளவு வேலைகளுக்கோ பயன்படுத்தக் கூடாது என்று ஆந்த்ரோபிக் நிறுவனம் பிடிவாதம் காட்டியது. இதையடுத்து, அந்த நிறுவனத்தை Supply Chain Risk என டிரம்ப் நிர்வாகம் பட்டியலிட்டது. அந்த ஒப்பந்தத்தை ஓபன் ஏஐ கைப்பற்றியது.

இதற்கிடையே ராணுவத்தில் கட்டுப்பாடற்ற முறையில் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்துச் சீனா எச்சரித்துள்ளது.

சீனப் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜியாங் பின் கூறுகையில், மற்ற நாடுகளின் இறையாண்மையை மீற AI-ஐப் பயன்படுத்துவது, மரணத்தை தீர்மானிக்கும் அதிகாரத்தை அல்காரிதம்களிடம் கொடுப்பது தார்மீக ரீதியான சிதைவாகும்.

இந்த நிலை தொடர்ந்தால், 'டெர்மினேட்டர்' திரைப்படத்தில் வருவது போல இயந்திரங்கள் மனிதர்களுக்கு எதிராகத் திரும்பி, உலகம் அழியும் சூழல் நிஜமாகிவிடும்" என்று எச்சரித்தார். 

you may also like