Sunday, October 11, 2026

இளைஞனின் சடலம் மீட்பு


இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹரஸ்பெத்த பகுதியில் சுமார் ஆயிரம் அடி உயரம் கொண்ட தர்பனா எல மலை அடிவார பகுதியில் உடல் பாகங்கள் சிதைந்த நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் நேற்று (02) மாலை மீட்கப்பட்டுள்ளது என இராகலை பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டவர் இராகலை ஹரஸ்பெத்த பகுதியில் வசித்த மலிந்த தில்ஷான் (வயது 24) என அடையாளம் காணப்பட்டுள்ளார் என சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் இராகலை பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்க்கப்பட்ட மலிங்க தில்ஷான் தனது வீட்டில் தாய், தந்தையரை தாக்கி சண்டையிட்டு தான் எங்காவது போய் தனது உயிரை மாய்த்துகொள்வேன் என்று கூறிவிட்டு நேற்று முன்தினம் மாலை வீட்டை விட்டு வெளியேரியுள்ளார்.

இதையடுத்து அந்த இளைஞனின் பெற்றோர் இராகலை பொலிஸ் நிலையத்திற்கு தமது மகன் மது அருந்திவிட்டு தங்களை தாக்கிவிட்டு கோபத்தில் வீட்டைவிட்டு சென்றுள்ளார் என முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று (02) மாலை இளைஞரின் வீட்டாருக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது. அந்த அழைப்பில் அடையாளம் தெரியாத நபரின் சடலம் ஒன்று தர்பனா எல மலை அடிவாரத்தில் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த தகவலை பெற்றோர் இராகலை பொலிஸ் நிலையத்திற்கு தெரிவித்துள்ளனர். பின் தர்பனா எல மலை அடிவாரத்திற்கு விரைந்த இராகலை பொலிஸார் அங்கு உடல் பாகங்கள் சிதைந்து உயிரிழந்த நிலையில் இளைஞரின் சடலத்தை மீட்டுள்ளனர்.

இந்த நிலையில், உயிரிழந்திருப்பது தமது மகன் என அந்த பெற்றோர் சடலத்தை அடையாளம் காட்டியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் வலப்பனை நீதவான் நீதிமன்றத்திற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த நபர் தன்னுயிரை மாய்த்துக்கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற சந்தேகத்தையும் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

உயிரிழந்த இளைஞரின் உடல் மரண விசாரணையின் பின் பிரேத பரிசோதணைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை இராகலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

you may also like