- by Editor
- 1 year ago
இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் ICC டெஸ்ட் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் பாபர் அசாம்
-
- by Editor,
- 1 month ago
- in விளையாட்டு செய்திகள்
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட பாகிஸ்தான் அணித்தலைவர் பாபர் அசாம், சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் ICC ஆடவர் டெஸ்ட் துடுப்பாட்ட தரவரிசையில் மீண்டும் முதல் 10 இடங்களுக்குள் முன்னேறியுள்ளார்.
போர்ட் ஒஃப் ஸ்பெயினில் நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் பாபர் அசாம் 88 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் 24 ஓட்டங்களையும் பெற்றார்.
இதன் மூலம் அவர் தரவரிசையில் ஐந்து இடங்கள் முன்னேறி 10ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
31 வயதான பாபர் அசாம், 2024 செப்டெம்பர் மாதத்தில் முதல் 10 இடங்களிலிருந்து வெளியேறியிருந்தார். அதற்கு முன்னர் தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகள் உலகின் முன்னணி டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக அவர் இடம்பெற்றிருந்தார்.
அவரது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையின் சிறந்த தரவரிசை இரண்டாம் இடமாகும். 2022 டிசெம்பர் மாதம் இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தானில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின்போது அவர் இந்த நிலையை அடைந்திருந்தார்.
அப்துல்லா ஷபீக்கிற்கு 25 இடங்கள் முன்னேற்றம்
பாகிஸ்தான் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் அப்துல்லா ஷபீக்கும் தரவரிசையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியில் ஆட்டநாயகனாகத் தெரிவான அவர், முதல் இன்னிங்ஸில் 160 ஓட்டங்களையும் இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் 24 ஓட்டங்களையும் பெற்றார்.
இதன் மூலம் 25 இடங்கள் முன்னேறிய அப்துல்லா ஷபீக், 32ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இதன்போது மார்னஸ் லபுஷேன், கே.எல். ராகுல், சல்மான் ஆகா மற்றும் ஷான் மசூத் ஆகியோரை அவர் பின்தள்ளியுள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் துடுப்பாட்ட வீரர் பிராண்டன் கிங்கும் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார். முதல் இன்னிங்ஸில் 50 பந்துகளில் 46 ஓட்டங்களைப் பெற்ற அவர், இரண்டாவது இன்னிங்ஸில் முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக துடுப்பெடுத்தாடவில்லை. இதையடுத்து 73ஆவது இடத்திலிருந்து 69ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
பந்துவீச்சு தரவரிசையிலும் பாகிஸ்தான் வீரர்கள் முன்னேற்றம்
டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் மேற்கிந்தியத் தீவுகள் வேகப்பந்துவீச்சாளர் ஷமர் ஜோசப் ஒரு இடம் முன்னேறி 19ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். அவர் குறித்த போட்டியில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பாகிஸ்தானின் சஜித் கான் ஐந்து இடங்கள் முன்னேறி 30ஆவது இடத்தையும், மொஹமட் அலி எட்டு இடங்கள் முன்னேறி 85ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
இடதுகை சுழற்பந்து வீச்சாளர் அலி உஸ்மான் 58 இடங்கள் முன்னேறி 97ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். பந்துவீச்சு தரவரிசையில் அதிக முன்னேற்றம் கண்ட வீரராக அவர் பதிவாகியுள்ளார்.
ஒருநாள் தரவரிசையிலும் மாற்றம்
ICC ஆடவர் ஒருநாள் துடுப்பாட்ட தரவரிசையில் ஆப்கானிஸ்தான் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் மூன்று இடங்கள் முன்னேறி 11ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
அயர்லாந்துக்கு எதிரான தொடரின் இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகளில் அவர் முறையே 32 மற்றும் 71 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
ஓமானின் ஹமாத் மிர்சா இரண்டு இடங்கள் முன்னேறி 85ஆவது இடத்தையும், UAE வீரர் ராகுல் சோப்ரா 37 இடங்கள் முன்னேறி 97ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
ஸ்கொட்லாந்தின் டண்டீ நகரில் நடைபெற்ற ICC உலகக் கிண்ண லீக் 2 போட்டிகளில் அவர்கள் வெளிப்படுத்திய சிறப்பான ஆட்டத்தின் அடிப்படையில் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
ஒருநாள் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் அயர்லாந்தின் மார்க் அடேர் 17ஆவது இடத்திற்கு மீண்டும் முன்னேறியுள்ளார். ஆப்கானிஸ்தான் மற்றும் ஸ்கொட்லாந்துக்கு எதிரான போட்டிகளில் தலா இரண்டு விக்கெட்டுகளை அவர் கைப்பற்றியிருந்தார்.
ஸ்கொட்லாந்தின் பிராண்டன் மெக்முல்லன் 10 இடங்கள் முன்னேறி கூட்டு 48ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். கனடா மற்றும் UAE அணிகளுக்கு எதிரான போட்டிகளில் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தரவரிசையில் பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் கடைசி இடங்களில்
இதற்கிடையில், பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் சமநிலையில் முடிவடைந்ததையடுத்து, ICC உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தரவரிசையில் இரு அணிகளும் கடைசி நிலைகளில் உள்ளன.
அவுஸ்திரேலியா 8 போட்டிகளில் 7 வெற்றிகள் மற்றும் ஒரு தோல்வியுடன் 87.50 சதவீத புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது.
தென்னாபிரிக்கா 75.00 சதவீத புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், நியூஸிலாந்து 72.22 சதவீத புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.