- by Editor
- 2 years ago
இரகசியம் - பரகசியம் (31.3.2025)
-
- by Editor,
- 1 year ago
- in இரகசியம் பரகசியம்
புதிய ஜனாதிபதியும் புதிய அரசும் இலங்கையில் பதவியேற்ற பின்னர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி முதல் தடவையாக இலங்கை வருகிறார்.
அவருக்கு இது நாலாவது இலங்கை விஜயம். கடைசியாக 2019 ஜூன் மாதத்தில் ஒன்பது மணி நேரப் பயணமாக அவர் கொழும்பு வந்திருந்தார். மாலைத்தீவு சென்று அங்கிருந்து வரும் வழியில் கொழும்பில் சில மணி நேரம் தங்கிச் சென்றார் மோடி. ஈஸ்டர் ஞாயிறு தொடர் குண்டுத் தாக்குதல் முடிந்து இரண்டு மாதங்களுக்குள் மேற்கொள்ளப்பட்ட குறுகிய கால விஜயம் அது.
அந்த விஜயத்தின் போது விரைவில் செய்வோம் என்று கூறிச் சென்ற ஒரு பணியை இப்போது ஆறு ஆண்டுகள் கழித்தாவது அவர் நிறைவு செய்ய வாய்ப்புக் கிடைத்திருப்பதாகத் தெரிகிறது.
அந்தக் கடைசி வருகையின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களை இரா. சம்பந்தன் தலைமையில் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் - விமானத்தில் ஏறுவதற்கு சற்று நேரம் முன்பதாக - ஒரு குறுகிய நேரம் - 10 நிமிடங்கள் - சந்தித்துப் புறப்பட்டார் இந்திய பிரதமர் மோடி. 'விரைவில் புதுடில்லி வாருங்கள், அங்கு ஆறுதலாக ஆற அமர இருந்து பேசுவோம்!' என்று கூறிச் சென்றார் பிரதமர் மோடி. ஆனால் அந்த ஆறுதலான சந்திப்பு இதுவரை இடம்பெறவே இல்லை. நன்றாக ஆறிப் போய் விட்டது.
சந்திப்புக்கான ஒரு தினத்தை இரண்டு வருடங்கள் கழித்து இந்தியத் தரப்பு வழங்கிய போது, அதற்கு இணங்கிப் பிரதிபலிப்புக் காட்ட கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தன் தவறியமையால் அந்தச் சந்திப்பு இடம் பெறாமல் போயிற்று என்று ஒரு குற்றச்சாட்டு உண்டு.
ஆறு ஆண்டுகளாக இடம் பெறாமல் விடுபட்ட அந்தச் சந்திப்புக்கு இப்போது கொழும்பில் பெரும்பாலும் வரும் ஐந்தாம் திகதி காலம் கூடிவருகின்றது எனத் தெரிகிறது.
முன்னர் மோடியை தமிழ் தேசிய கூட்டமைப்பாக சந்தித்தபோது அதில் தமிழரசுக் கட்சியினர் மூவர் பெரும்பாலும் இடம்பெற்றிருந்தனர். ஒருவர் - கூட்டமைப்புத் தலைவராக சம்பந்தன். மற்றவர் - தமிழரசுக் கட்சித் தலைவராக மாவை சேனாதிராஜா. அடுத்தவர் - கூட்டமைப்பின் சர்வதேச விவகாரங்களைக் கையாளும் தொடர்பாளராக சுமந்திரன். இந்த மூவருமே தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர்கள்தான்.
இப்போது தமிழர் தரப்பு வரும் ஐந்தாம் திகதி அளவில் இந்தியப் பிரதமரைக் கொழும்பில் சந்திக்கும் எனக் கூறப்பட்டுள்ள போதிலும் சந்திப்பு இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இப்போது தமிழரசுக் கட்சி சார்பில் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பதில் செயலாளர் சுமந்திரன், நாடாளுமன்றக் குழுத் தலைவர் சிறிதரன் ஆகியோர் சந்திக்கக் கூடும் எனக் கூறப்படுகின்றது. இவர்களில் மோடிக்குப் பரிச்சயமான அல்லது அவரை ஏற்கனவே சந்தித்த ஒரே நபர் சுமந்திரன்தான். சி.வி.கே.சிவஞானத்துக்கும் சிறிதரனுக்கும் இந்தச் சந்திப்பு இடம்பெற்றால் இதுதான் அவர்கள் இந்தியப் பிரதமர் மோடியை நேரில் சந்திக்கும் முதலாவது சந்தர்ப்பமாகும்.
பிரதமர் மோடிக்கு முன்னர் இலங்கைக்கு விஜயம் செய்த கடைசி இந்திய பிரதமர் ராஜீவ் காந்திதான். அவர் இலங்கைக்கு வந்து இப்போது 38 ஆண்டுகள் முடிந்துவிட்டன. அவருக்குப் பின்னர் இரண்டு தசாப்தங்கள் கழித்துப் பதவியேற்ற பிரதமர் நரேந்திர மோடி நான்காவது தடவையாக இலங்கைக்கு விஜயம் செய்கிறார்.
1987 இல் இலங்கை மீது அதீத அழுத்தம் செலுத்தி, இலங்கை - இந்திய ஒப்பந்தத்திற்குக் கொழும்பை வல்வந்தமாக இணங்கி வரப் பண்ணினார் ராஜீவ் காந்தி.
இப்போதும் அத்தகைய பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றுக்குக் கொழும்பை சத்தம் சந்தடியின்றி, அழுத்தம் - நெருக்குதல் கொடுக்காமல், இணங்கிவரப் பண்ணி இருக்கின்றது நரேந்திர மோடியின் அயல் உறவுக் கொள்கை.
***********************************
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமையை ஆட்சேபித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த தரப்புகளுக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் இடையிலான சந்திப்பு உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டல்படி நேற்று கொழும்பில் தேர்தல் ஆணையத்தில் இடம் பெற்றது.
வேட்பு மனுக்களில் இளம் வேட்பாளர்களின் வயதை உறுதிப்படுத்துவது தொடர்பான ஏற்பாடுகளில் ஏற்பட்ட குழப்பத்தினால் பல வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன.
சமர்ப்பிக்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ்களை அத்தாட்சிப்படுத்தப்படுவது தொடர்பான குழப்பமே பல வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்குக் காரணம் என்பது வெள்ளிடைமலை.
பிறப்புச் சான்றிதழின் பிரதியை அத்தாட்சி படுத்தக்கூடிய ஓர் உத்தியோகத்தரினால் இந்த பிரதி உறுதிப்படுத்தப்பட்டிருந்தால் அப்பிரதியை ஏற்றுக்கொள்வது என்ற இணக்கப்பாட்டுக்கு தேர்தல் திணைக்களம் வந்திருப்பதாகத் தெரிகிறது. இது பற்றிய தனது இணக்கத்தை நாளை இவ்விடயம் சம்பந்தமான வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்படும்போது தேர்தல் ஆணையம் தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இத்தகைய முடிவைத் தேர்தல் ஆணையம் எடுத்தால், யாழ் மாவட்டத்திலும் கிளிநொச்சியிலும், வன்னியிலும் நிராகரிக்கப்பட்ட ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் - சங்குச் சின்னக் கட்சியின் - நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் யாவும் பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்படும் எனத் தெரிகிறது.
ஏனைய காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் தொடர்பான விடயத்தில், நீதிமன்றத்தில் வாதம் நடத்தித் தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்துவதில் தேர்தல் ஆணையம் தெளிவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. அத்தகைய விடயங்கள் நீதிமன்றத்தில் வாதிக்கப்பட்ட பின்னரே தீர்வு காணப்படும் என்று ஊகிக்க முடிகின்றது.