- by Editor
- 2 years ago
இரகசியம் - பரகசியம் (30.09.2024)
தமிழ்த் தேசியம் பேசும் கட்சிகள் எல்லாம் பெரும்பாலும் இந்த பொது தேர்தலில் தனித்தனி வழி போகப் போகின்றன என்பது பெரும்பாலும் நிச்சயமாகி விட்டது.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி என்று இதுவரை குத்துவிளக்கு சின்னத்தில் தங்களை அடையாளப்படுத்தி இருக்கின்ற ஐந்து கட்சிகளும் இப்போது சங்கு மார்க் சின்னத்துடன் ஒன்றாகக் களமிறங்கப் போகின்றன.
பொதுக் கட்டமைப்பின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் இறங்குபவருக்கு தேர்தல் மூலம் கிடைக்கும் செல்வாக்கை அதற்கு பின்னர் வரும் அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தக் கூடாது என்ற இணக்கம் பொதுக் கட்டமைப்பின் அங்கத்துவத் தரப்புகளிடம் இருக்கின்ற போதிலும், ஜனநாயகத் தமிழ்த் தேசிய கூட்டணி அந்த இணக்கத்தை முறித்துக் கொண்டு கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சங்கைத் தான் கொண்டோடும் நிலையை ஏற்படுத்தி உள்ளது.
இது ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசியத்தின் பெயரில் ஜால்ரா போட்ட ஏனைய தரப்புகளுக்கு - குறிப்பாக பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கு - முதுகில் குத்தும் வேலையாகப் பார்க்கப்படுகிறது. அதனால் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மேற்படி ஐந்து கட்சிகளின் நிலைப்பாடு குறித்து கடுஞ் சீற்றத்தில்தில் இருக்கின்றனர் எனத் தெரிகிறது.
பொது வேட்பாளருக்கு பயன்படுத்திய சின்னத்தை - அதனால் கிடைத்த அரசியல் செல்வாக்கை - பெறுமதியை - ஆதரவை - தான் சுருட்டி கொள்வதற்காக மேற்படி ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் அங்கத்துவக் கட்சிகள் இழிவாக செயல்படுகின்றன என்ற சீற்றம், பொது அமைப்பினருக்கு.
தமிழரசு கட்சியின் 'ஒன்றித்து செயல்பட வாருங்கள்!' என்ற அழைப்புக்கு எந்தத் தமிழ் கட்சியும் சாதகமான நிலைப்பாட்டை பிரதிபலித்து நிற்கவில்லை.
இதேசமயம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் வ ழமை போல மற்றைய தரப்புகளுடன் சேராமல் தனி கச்சேரி நடத்தும் வழமையான போக்கில் நிலைப்பாடு எடுத்திருப்பதாக தெரிகிறது.
இந்தப் பின்புலத்தில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் கட்சிகளின் ஒன்றுபட்ட நிலைப்பாடு என்பது கானல் நீராக தொடர போகின்றது என்பது தெளிவாகிறது.