- by Editor
- 2 years ago
இரகசியம் - பரகசியம் (29.08.2024)
வடக்கில் இப்போது பெரிதும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ள தரப்பு வைத்தியத்துறை. அதுவும் பெரிதும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருபவர்கள் மருத்துவர்கள்தான்.
மருத்துவர்கள் தொடர்பாக - அதுவும் வடக்கில் பணிபுரியும் வைத்தியர்கள் சம்பந்தமாக - அதிர்ச்சி தரும் ஒரு விவரம் வெளியாகியிருக்கின்றது.
வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்திடம் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட அறிக்கைகளின்படி, வடக்கில் பணிபுரியும் கணிசமான மருத்துவர்கள் ஜீ.சி.ஈ. உயர்தரப் பரீட்சை சித்தி அடையாதவர்களாம்.
அப்படியானால் அவர்கள் எவ்வாறு டாக்டர்களானார்கள் என்ற கேள்வி எழுகின்றது.
இலங்கையில் ஜீ.சி.ஈ. உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து, மருத்துவப் படிப்புக்கு அனுமதி பெற்று, மருத்துவர்களாக இலங்கைப் பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியே வருவோர் தம் தாய் நாட்டை - கல்வி போதித்த மண்ணை - துறந்து வெளிநாடுகளுக்கு ஓடி விடுகின்றனர்.
அதனால் மருத்துவர்களுக்கு தட்டுப்பாடு. பற்றாக்குறை. வெளிநாட்டில் மருத்துவக் கல்வி பயின்று மருத்துவர்களாக சித்தி பெற்றோரை நமது வைத்தியசாலைகளில் பணிக்கு அமர்த்த வேண்டிய கட்டாயம்.
அவர்கள் எந்த நாட்டில் மருத்துவக் கல்வி பயின்றார்களோ அந்த பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெறுவதற்கான பரீட்சைப் பெறுபேறுகளைத்தான் பெற்றிருப்பார். இலங்கையின் ஜீ.சி.ஈ. உயர்தரப் பரீட்சையில் சித்தி அடைந்திருக்க வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இல்லை.
இதுகுறித்து உயர்கல்வி அமைச்சர் சுரேன் ராகவன் கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்டிருக்கின்றார்.
''ஜீ.சி.ஈ. உயர்தர பரீட்சையில் சித்தியடையாதவர்கள் வடக்கு மாகாணத்தில் மருத்துவர்களாகக் கடமையாற்றி வருகின்றனர்.
“வவுனியா, மன்னார் வைத்தியசாலைகளில் கடமையாற்றும் வைத்தியர்கள், வெளிநாடுகளில் பட்டம் பெற்றவர்கள். அவர்கள் இலங்கையில் உயர்தர கல்வியில் சித்தியடையவில்லை.
''வைத்தியர் ஒருவர் இலங்கை மருத்துவ சங்கத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அவருக்கு அனுமதி கிடைத்திருக்க வேண்டும். அவர் எங்கு படித்தார் என்பது எமக்கு கவலையில்லை. அவர் படித்த மருத்துவக் கல்லூரி சர்வதேச ரீதியில் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும்.
''உயர்தரம் இருந்ததோ, இல்லையோ என்பது இங்கே கேள்வியல்ல. இவர்கள் தரமான கல்வி கற்றார்களா என்பதே முக்கியம். உயர்தரம் என்பது எமது நாட்டில் ஒருவரின் வாழக்கையைத் திசை திருப்பும் ஒரு திருப்பு முனையாக காணப்படுகிறது.
''உயர்தரத்தில் 3 ஏ சித்தி பெற்றுள்ள கொழும்பு மாவட்ட பிள்ளைகள் பலர் மருத்துவம் படிக்க இயலாமல் காணப்படுகின்றனர்.
''அவர்களுக்கு நாம் என்ன சொல்லப்போகின்றோம்?” -என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
பல மருத்துவ சர்ச்சைகளுக்கு இப்போது காரணம் விளங்குவது போன்று தோன்றுகின்றது அல்லவா...?