Saturday, October 10, 2026

இரகசியம் - பரகசியம் (27.09.2024)


'பெர்மிட்' பெருச்சாளிகளின் பெயர்ப் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

முன்னைய அரசில் மதுபானசாலை அனுமதி பத்திரங்களைப் பெற்றுக் கொண்டவர்களின் பட்டியல் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“மூன்று கோடி ரூபா முதல் 4 கோடி ரூபாவுக்கு மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களை விற்பனை செய்தவர்கள் உள்ளனர்.

''அவர்களின் விவரங்கள் எம்மிடம் உள்ளன. அவற்றை விரைவில் வெளியிடுவோம்.

''ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்கள் முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்டமை தொடர்பான விசாரணைகள் நடத்தப்படும்.அத்துடன் அவ்வாறான சகல தரப்பினர் தொடர்பான விவரங்களும் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தப்படும்.” - என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் ஒருவரின் பெர்மிட் கிளிநொச்சியில் 10 கோடி ரூபா விலை போனதான பேச்சு வடக்கில் அடிபடுவது வசந்த சமரசிங்கவுக்கு தெரியாது போலும்.

கொழும்பு காலிமுகத் திடலில் ஜனாதிபதி செயலகப் பகுதியை அண்டி நிறுத்தி விடப்பட்டிருக்கும் வாகனங்களின் அணிவகுப்பை வேறு வாகனத்தில் அந்தப் பகுதி ஊடாகப் பயணித்த போது அவதானித்தேன்.

எனக்கு 40 வருடங்களுக்கு முன்னர் 1985 - 86 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இப்படி யாழ்ப்பாணத்தில் பார்த்த வாகனக் கண்காட்சி ஒன்று நினைவுக்கு வந்தது.

எண்பதுகளில் ஆரம்பத்தில் தமிழர் தாயகத்தில் ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டம் தீவிரம் அடையத் தொடங்கிய காலத்தில் ஒரு விடயம் அரங்கேறியமை அக்காலகட்டத்தில் அங்கு வாழ்ந்தவர்களுக்கு நன்கு நினைவில் இருக்கும்.

ஒவ்வொரு இயக்கமும் தங்கள் பாவனைக்கு என்ற பெயரில் ஊரிலிருந்த பொதுமக்களின் அல்லது பொது நிறுவனங்களின் அல்லது அரசின் வாகனங்களை கொள்ளையடிப்பது வழமையான ஒன்றாகி வந்தது.

நல்ல தரத்தில் உள்ள யாருடைய வாகனமாவது வீதியில் பயணித்தால் அல்லது வீட்டு கராஜில் நிறுத்தப்பட்டு இருந்தால் அடுத்த சில நாள்களுக்குள் அது கொள்ளை போய் விடுவது தவிர்க்க முடியாத கட்டாயமாக இருந்தது.

ஏட்டிக்கு போட்டியாக இயக்கங்கள் வாகனங்களை சூறையாடிய இந்தப் பின்புலத்தில்தான் - என் நினைவு சரியென்றால் பெரும்பாலும் 1985இல் - திடீரென்று ரெலோ இயக்கத்திற்கு தடை விதிக்கும் அறிவிப்பை புலிகள் இயக்கம் விடுத்தது.

ரெலோவுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் அதுவரை ரெலோவால் சூறையாடப்பட்டிருந்த வாகனங்கள் எல்லாம் மீட்டு எடுத்துவரப்பட்டு, புலிகளினால் யாழ் ஸ்டான்லி வீதிப் பகுதியில் இப்படித்தான் காட்சிக்கு அடுக்கப்பட்டிருந்தன. ரெலோவைக் கிண்டலடிக்கும் பதாகைகளும் அப்பகுதியில் தொங்க விடப்பட்டிருந்தன.அவற்றில் ஒன்றில் 'ஏறினால் கார்; இறங்கினால் பார்' என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்தமையை வாசித்த நினைவு எனக்கு உண்டு.

இப்படி வரலாறு திரும்புவது வழமைதான்.

***

நேற்றுப் பிற்பகலுக்குப் பின்னர் சுமந்திரனின் தொலைபேசி வேலை செய்யவில்லை. சாணக்கியனையும் தொலைபேசியில் பிடிக்க முடியவில்லை.

சுமந்திரன் டெல்லிப் பயணம் போய்விட்டார் என்று கட்டுநாயக்கா வட்டாரம் ஒன்று தகவல் வெளியிட்டது.

மலிந்தால் சந்தைக்கு வரும், பார்த்துக் கொள்ளலாம்.

எது, எப்படியென்றாலும் நாளை வவுனியாவில் நடக்கவிருக்கும் இலங்கைத் தமிழரசு கட்சியின் மத்திய குழுக் கூட்டத்திற்கு இருவரும் பிரசன்னமாகி இருப்பார்கள் என்று நம்பப்படுகின்றது.


you may also like