Wednesday, October 7, 2026

இரகசியம் - பரகசியம் (26.08.2024)


கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஏற்பட்ட அதே நெருக்கடி இம்முறை தமிழரசுக் கட்சிக்கும் நேரும் என்றே தோன்றுகின்றது.

போன ஜனாதிபதி தேர்தலின் போது சஜித் பிரேமதாஸவை ஆதரிக்கும் முடிவை கடைசி கட்டத்தில்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்தது. அதுவரை இழுத்தடித்தது.

அதனால் தபால் மூல வாக்களிப்பில் பங்குபற்றிய அரச ஊழியர்களுக்கு வாக்களிப்புத் தொடர்பில் தனது நிலைப்பாட்டை தமிழ்க் கூட்டமைப்பினால் அப்போது வழங்க முடியவில்லை.

இப்போதும் - இந்த ஜனாதிபதித் தேர்தலிலும் - தபால் மூல வாக்களிப்பு பெரும்பாலும் வரும் 4,5,6 ஆம் திகதிகளில் முதல் கட்டமாக நடைபெறப் போகின்றது.

அதற்கு முன்னர் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்ற முடிவை தமிழரசுக் கட்சி எடுப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரியவில்லை.

மாகாண சபை தேர்தல்களை பழைய சட்டத்தின் பிரகாரம் நடத்துவதற்கு வழி செய்யும் சட்டமூலம் வரும் 3 ஆம் திகதி மூன்றாவது வாசிப்புக்கு நாடாளுமன்றத்திற்கு வருகிறது.

மூன்றாவது வாசிப்பு என்பதால் இந்தச் சட்டமூலத்தின் மீது அன்று விவாதம் நடக்காது. அதை நிறைவேற்றுவது மட்டும்தான் வேலை. அதுவும் கூட யாரும் வாக்கெடுப்புக்குக் கோரினால் மட்டுமே வாக்கெடுப்புக்கு அது விடப்படும். இல்லையேல் வாக்கெடுப்பின்றியே அந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதாக நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டு விடும்.

அப்படி அந்தச் சட்ட மூலம் உத்தியோகபூர்வமாக நிறைவேறும் வரை இந்தத் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்ற முடிவை தமிழரசுக் கட்சி எடுக்காது என்று கட்சியின் உள்வீட்டு வட்டாரங்கள் தெரிவித்தன.

3 ஆம் திகதி அந்தச் சட்டமூலம் தொடர்பான விடயம் நாடாளுமன்றத்தில் முடிந்த பின்னர், தமிழரசு கட்சி கூடி 4,5,6 ஆம் திகதிகளில் நடைபெறும் தபால் மூல வாக்களிப்பு தினத்துக்கு முன்னர் தனது முடிவை அறிவிக்க வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை.

***

'பார்' போற்றும் பெர்மிட்டுக்கள் வழங்கல், அணி மாற்றங்களுக்கான பணம் கைமாறுதல் ஆகிய ஆகியவை பற்றிய தகவல்களை எல்லாம் சூசகமாக - அதிரடியாக - அவ்வப்போது வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்துபவர் தயாசிறி ஜயசேகரா.

அவரின் கூற்றுப்படி இரத்தினபுரிப் பகுதி அம்மணி அரசு பக்கம் பாய்வதற்கு முன்னர் காலையில் சிங்கப்பூர் சென்று மாலையில் திரும்பி இருக்கின்றார். டீல் தொகை சிங்கப்பூரில் கைமாறி இருக்கின்றது என்கிறார் தயாசிறி.

நுவரெலியா எம்.பி. ஒருவரும், தேசியப் பட்டியல் எம்.பி. ஒருவரும் அணி மாறுவதற்கு முன்னர் தாய்லாந்து சென்று வந்தனராம். அங்கு டீல் இணக்கமாக முடிக்கப்பட்டதாகக் கேள்வி.

தென்னிலங்கை எம்.பிமார் வெளிநாட்டில் டீல் முடிக்க, நம்மவர்கள் மட்டும்தான் உள்நாட்டில் 'சின்ன டீலாக' முடித்துக் கொள்கின்றார்கள் போலும்.


you may also like