Sunday, October 11, 2026

இரகசியம் - பரகசியம் (24.08.2024)


உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நடத்தாமல் முடக்கிய ஜனாதிபதியினதும், முன்னைய தேர்தல் ஆணைக்குழுவினதும் செயற்பாடுகள் வாக்காளரின் அடிப்படை உரிமைகளை மீறும் நடவடிக்கைகள் என்று உயர் நீதிமன்றம் காட்டமாக தீர்ப்பளித்துள்ளது அல்லவா?

அந்த முன்னைய தேர்தல் ஆணைக்குழுவில், இப்போதைய வடக்கு ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் இடம் பெற்றிருந்தார் என்பது தெரிந்ததே.

அந்த ஆணைக்குழுவில் இடம் பெற்றிருந்து, உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்த விடாமல் முட்டுக்கட்டை போட்டு, பின்னர் தேர்தல் ஆணைக்குழுவிலிருந்து ராஜினாமா செய்து, அதன் மூலம் தேர்தல் ஆணைக்குழுவை பலம் இழக்க வைத்து, ஆற்றிய (நற்) சேவைக்குக்குப் பிரதியுபகாரமாகவே இந்த ஆளுநர் பதவியை அவருக்கு ஜனாதிபதி வழங்கினார் என்று ஒரு பேச்சும் உண்டு.

இப்போது உள்ளூராட்சித் தேர்தல்கள் முடக்கப்பட்டமை தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றம் தான் வழங்கிய தீர்ப்பில் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸையும் காட்டமாக விமர்சித்திருக்கின்றது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பை விடுக்கவும், வேட்பு மனுக் கோரல் தொடர்பான பிரகடனத்தை முன்வைக்கவும் தேர்தல் ஆணையம் முடிவு செய்த எந்தக் கூட்டத்திலும் தாம் பிரசன்னமாகி இருக்கவில்லை என்றும், தாம் அந்தக் கூட்டங்களில் பங்கு பற்றவில்லை என்றும் ஆணையாளர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் சத்தியக்கடுதாசி மூலம் உயர் நீதிமன்றுக்கு அறிவித்திருந்தார்.

ஆனால், அது தொடர்பாக ஆணைக்குழு நடத்திய முக்கிய கூட்டங்களில் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பங்குபற்றியிருக்கின்றார் என்பது அந்தக் கூட்டங்களின் பதிவேட்டின் மூலம் நிரூபணமாகி உள்ளது என்று குறிப்பிட்டுள்ள உயர்நீதிமன்றம், திருமதி சார்ள்ஸ் வேண்டுமென்றே உயர் நீதிமன்றத்திற்குத் தவறான தகவல்களை தமது சத்தியக் கடதாசி மூலம் வழங்கி, உயர் நீதிமன்றத்தைத் தவறாக வழிநடத்தி இருக்கிறார் என்றும் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மட்டுமல்லர், அவரது சார்பில் வடக்கை நிர்வாகிக்கும் அவரது பிரதிநிதியான ஆளுநரும் கூட நாட்டின் வாக்காளர்களின் அடிப்படை உரிமைகளை மீறி இருக்கின்றார்கள் என்பது தெளிவாகிறது

****************

மருந்துக் கொள்வனவில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் தொடர்பாக கைது செய்யப்பட்டு நீண்ட காலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் சந்தேக நபர்கள், அதன் காரணமாக மோசமான மனச் சிதைவுக்கும் தற்கொலை எண்ணத்திற்கும் தூண்டப்படக்கூடிய ஆபத்து இருப்பதாக நீதிமன்றுக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது. அதனால் அவர்களை உளநல மருத்துவ சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் நீதிமன்றத்திடம் கோரப்பட்டுள்ளது.

இதனை புதிய விண்ணப்பமாக நீதிமன்றத்தில் முன் வைத்தால் அது தொடர்பாகப் பரிசீலிக்கப்படும் என நீதிவான் தெரிவித்திருக்கின்றார் என்றும் கூறப்பட்டது.

***********************

மன்னாரில் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவின் சார்பு அலுவலகம் நகரத்தில் செபஸ்தியார் கோவில் வீதியில், நீர் வழங்கல், வடிகால் அமைப்பு சபை அலுவலகத்துக்கு முன்னால் உள்ளது.

திடீரென ஐந்தாறு பனர்கள், காஸ் சிலிண்டர் சின்னத்துடன் பல வர்ணங்களிலும் செய்யப்பட்டு அந்த அலுவலகத்தைச் சுற்றிக் கட்டப்பட்டு, அலுவலகம் இப்போது பளிச்சென்று, கமுக்காகத் தெரியக் கூடியதாக மோஸ்தர் செய்யப்பட்டிருந்தது.

என்ன, ஏது என்று விசாரித்துப் பார்த்தால் தமிழ் எம்பி. ஒருவரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலில் அந்தச் சோதனை எல்லாம் நடந்திருக்கின்றனவாம்.

250 கே.வி. சூரிய சக்தி மின் இணைப்பு ஒப்பந்தம், 'பார்' புகழும் உரிமங்களை வாரித் தந்தமை போன்றவற்றுக்கு நன்றி கடனாக இப்படி நல்ல யோசனையையாவது வழங்காவிட்டால் தப்பு என்று ஆகிவிடும் அல்லவா?

you may also like