- by Editor
- 1 year ago
இரகசியம் - பரகசியம் (24.06.2024)
பல துறைகளில் - பல விடயங்களில் - உலக கின்னஸ் சாதனைகள் அவ்வப்போதும் நிலைநாட்டப்படுவது தெரிந்ததுதான்.
இப்போது இலங்கையில் புரியப்பட்டிருக்கும் கின்னஸ் சாதனை பற்றி ஒரு தகவல் வந்திருக்கின்றது. இது கடந்த வருடம் ஜூனில் இடம் பெற்ற சாதனை.
இரத்தச் சுற்றோட்டத்தில் சிறுநீரைப் பிரித்தெடுப்பது சிறுநீரகம். தொடர்ச்சியாக நடைபெறும் அப்பணியின் போது சிறுநீரகத்தில் கற்கள் உருவாகின்றமை பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றோம். பல சமயங்களில் வேறு வழியின்றி இறுதியாக அறுவை சிகிச்சை மூலம் அவை வெட்டி அகற்றப்படுவது வழமை.
அப்படிப்பட்ட ஒரு விடயத்தில்தான் இலங்கை சாதனை நிகழ்த்தி இருக்கின்றது.
உலகின் மிகப்பெரிய சிறுநீரகக் கல் ஒரு நோயாளியின் சிறுநீரகத்தில் இருந்து அகற்றப்பட்டது இலங்கையில்தான்...!
2004 ஆம் ஆண்டு இந்தியர் ஒருவரின் சிறுநீரகத்தில் இருந்து 13 சென்டிமீட்டர் நீளமான கல் அகற்றப்பட்டது. 2008இல் பாகிஸ்தானியர் ஒருவரின் சிறுநீரகத்தில் இருந்து 600 கிராம் எடை கொண்ட கல் வெட்டி எடுக்கப்பட்டது.
இவை இரண்டையும் முறியடிக்கும் விதத்தில், கடந்த ஆண்டு கொழும்பு நாரஹன்பிட்டிய இராணுவ ஆஸ்பத்திரியில் சிலாபத்தைச் சேர்ந்த - 62 வயதுடைய - முன்னாள் இராணுவப் படை வீரர் ஒருவரின் சிறுநீரகத்தில் இருந்து 13.37 சென்டிமீட்டர் நீளமான 800 கிராம் எடை கொண்ட பெரிய கல் ஒன்று அகற்றப்பட்டிருக்கின்றது.
சிறுநீரக சிகிச்சை நிபுணரான டாக்டர் கே.சுதர்சன் இந்த ஒன்றரை மணி நேர சிறுநீரக சத்திர சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்திருக்கின்றார்.
அகற்றப்பட்ட அந்தக் கல்லின் படத்தையும், அதை சத்திர சிகிச்சை மூலம் அகற்றிய டாக்டரின் படத்தையும், மருத்துவப் பணியாளர்கள் அணியின் படத்தையும் இணைத்துள்ளேன்.
சிறுநீரகத்தில் உருவாகும் கற்கள், சிறுநீர்க் குழாயில் உருவாகும் கற்கள், சிறுநீர் பையில் உருவாகும் கற்கள் என்று இந்த கற்கள் மூன்று வகைப்படும்.
இப்போது இலங்கை சாதனை புரிந்திருப்பது இடதுபுற சிறுநீரகத்தில் இருந்து அகற்றப்பட்ட கல் மூலம்....!