- by Editor
- 2 months ago
இரகசியம் - பரகசியம் (23.05.2024)
2009 மேயில் யுத்தம் முடிந்த பின்னரும் படைக்கு ஆள் திரட்டி, சண்டப் பிரசண்டம் பண்ணிக் கொண்டிருந்த கொழும்பு ஆட்சி பீடம், அதுபோன்ற ஊதாரித்தனமான செலவுகளின் விளைவை பெரும் பொருளாதார வீழ்ச்சியாகப் படித்துக்கொண்டமையை அடுத்து மெல்லத் தன்னைச் சற்றுத் திருத்திக் கொள்வதற்கு முற்படுவதாகத் தெரிகிறது.
யுத்தத்தின் உச்சியில் 2 லட்சத்து ஐயாயிரம் பேரைக் கொண்டிருந்த இலங்கை இராணுவத்தினரின் எண்ணிக்கை யுத்தம் முடிந்த பின்னரும் உயர்ந்து கொண்டே சென்றது.
2020 - 21 இல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை அடுத்து, படைக்குறைப்பைத் தொடங்கியது இராணுவம்.
இப்போது அதன் எண்ணிக்கை ஒரு லட்சத்து 61 ஆயிரம். 2030 இல் இதை ஒரு லட்சமாகக் குறைக்கத் திட்டம் என்று கடந்த ஆண்டு இலங்கை அரசு அறிவித்திருந்தமை தெரிந்ததுதான்.
யுத்தத்தின் பின்னர் இராணுவத்தை விட்டு சொல்லிக் கொள்ளாமல் தப்பி ஓடிய 15 ஆயிரத்து 567 பேரை படைகளை விட்டு விலகியவர்களாக அங்கீகரித்துக் கருதும் முடிவையும் இராணுவம் கடந்த வாரம் எடுத்திருக்கின்றது.
***
தலைமைப் போட்டிப் புயலுக்குள் சிக்கி கிடக்கின்றது சிறிலங்கா சுதந்திரக் கட்சி.
அதற்கு இடையில், தாங்களே சுதந்திர கட்சியின் சட்டபூர்வமான நிர்வாகிகள் என்று கூறிக் கொள்ளும் சந்திரிகா அணியினர் - பதில் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தலைமையிலான குழுவினர் - தங்கள் எடுப்பைக் காட்டும் விதத்தில் வரும் 8 ஆம் திகதி அம்பாந்தோட்டை மாவட்டம் அம்பலாந்தோட்டையில் பெரிய பொதுக்கூட்டம் ஒன்றை நடத்திக் காட்டத் தயாராகி வருகின்றனர் என்று கூறப்படுகின்றது.
அந்த அணியில் சிரேஷ்ட உப தலைவர் பதவியில் இருக்கும் விவசாய, பெருந்தோட்டத் தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீரவே இந்தப் பொதுக்கூட்டத்துக்கான தயார்படுத்தல்களை செய்து வருகின்றார்.
அந்தத் தரப்புடன் அரசியல் கூட்டு சேரும் கட்சிகளின் பிரமுகர்களும் அந்த மேடையில் காட்சி தருவர் என்று கூறப்படுகின்றது.
இதற்குப் போட்டியாக மற்றைய தரப்பு - மைத்திரிபால சிறிசேன, விஜயதாச ராஜபக்ஷ அணி - என்ன செய்யப் போகின்றது?
நீதிமன்றத்தைக் கட்டிப்பிடித்து அல்லாட வேண்டிய இக்கட்டில் - சிக்கலில் - மாட்டியிருக்கும் அந்த அணி வேண்டுமானால் அம்பலாந்தோட்டைக் கூட்டத்துக்கு நீதிமன்றம் மூலம் ஒரு தடை உத்தரவு வாங்க எத்தனிக்கலாம். அதைக் கூட கடைசி நேரத்தில் வாங்கினால்தான், எதிர்த்தரப்பு உஷாராகி மேல்நிலை நீதிமன்றத்தில் தடை உத்தரவுக்குத் தடை வாங்காமல் பார்த்துக் கொள்ள முடியும். பார்ப்போம் என்ன செய்வார்கள் என்று.