- by Editor
- 8 months ago
இரகசியம் - பரகசியம் (20.6.2025)
-
- by Editor,
- 1 year ago
- in இரகசியம் பரகசியம்
இதுவரை காலமும் சட்டமா அதிபர் திணைக்களத்தில் மேலதிக சிரேஷ்ட சொலிஸிட்டர் ஜெனரல் பதவியில் இருந்த நளின் ரோஹித அபேசூரிய நேற்று நேரடியாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதியரசராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
ஏற்கனவே 17 மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் பணியில் இருக்கிறார்கள். அவர்களில் ஆறு பேர் நான்கு வருடங்களுக்கு மேல் முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களாக பணியில் இருப்பவர்கள். அவர்களை எல்லோரையும் தாண்டி, சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் ஒருவரை மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதியரசராக ஜனாதிபதி நியமனம் செய்திருக்கிறார். அதற்கு அரசு தரப்பின் 'பிடி' அதிகம் இல்லாத அரசமைப்புக் கவுன்ஸிலும் அங்கீகாரம் வழங்கியிருக்கிறது.
ஏற்கனவே மேன்முறையீட்டு நீதிமனந்த் தலைமை நீதியரசராக இருந்த நிஸங்க பந்துல கருணாரத்ன பல்வேறு நீதி முரண்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பான சர்ச்சைகளுக்குள் சிக்கி இருந்தார். புதிய அரசு பதவிக்கு வந்ததும் அவரது நடவடிக்கைகள் தொடர்பில் அவருக்கு எதிராக குற்ற விசாரணை பிரேரணை கொண்டு வரப்பட இருப்பதாக அரசு தரப்பில் அவிழ்த்து விடப்பட்ட மிரட்டல் செய்தியை அடுத்து, அவர் கடந்த ஜனவரி மாதத்தோடு முற்கூட்டியே விடுமுறை ஓய்வில் சென்று விட்டார். உண்மையில் அவரது பதவிக்காலம் இந்த மாதம் வரை இருந்தது. ஆனாலும் நெருக்கடி நிலைமையை முன்னிட்டு அவர் தாமாகவே ஓய்வுக்கு முன்னான விடுமுறையில் சென்றார்.
அவர் சட்ட ரீதியாக ஓய்வு பெறாத காரணத்தினால், அந்த ஓய்வு நாள் வரை அவரது இடத்துக்கு மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைமை நீதியரசராக ஒருவர் நியமிக்கப்பட்டார்.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் வரிசையில் அடுத்த சிரேஷ்ட நிலையில் இருந்த நீதியரசர் எம்.ரி.முஹம்மட் லவ்வார் பெப்ரவரி முதல் அந்தப் பதவியில் இருந்தாராயினும், அவரும் பல்வேறு முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகி இருந்தார். குறிப்பாக வழக்கு விசாரணைகளுக்கான நீதியரசர் ஆயங்களை வேண்டுமென்று திட்டமிட்டு ஒழுங்குபடுத்தினார் (Bench Fixing) என்ற குற்றச்சாட்டு உட்பட பல விடயங்கள் அவருக்கு எதிராகப் பேசப்பட்டு வந்தன.
உயர்நீதிமன்ற நீதியரசர்களுக்கான பதவி உயர்வு வந்த போது அவரைப் பரிந்துரைக்க தற்போதைய பிரதம நீதியரசர் அடியோடு மறுத்துவிட்டார் எனத் தெரிகிறது.
அதனால் அவரது பெயரை உயர் நீதிமன்றத்திற்கு பரிந்துரைக்காத நிலையில் அவர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இருந்து ஓய்வு பெற்றுச் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டு விட்டது.
ஆயினும் கடைசியாக இரண்டொரு தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற அரசமைப்புக் கவுன்ஸில் கூட்டத்தில் சிறிய கட்சிகளின் பிரதிநிதியாக கவுன்ஸிலுக்குத் தெரிவு செய்யப்பட்டிருந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் சிறிதரன் நீதியரசர் லவ்வாருக்கு உயர் நீதிமன்ற நியமனம் வழங்கப்பட வேண்டும் என்று தனி ஒருவராக கூட்டத்தில் ஒற்றைக் காலில் நின்று வலியுறுத்தினார் எனத் தெரிய வருகிறது.
ஏற்கனவே நியமனங்கள் தொடர்பான விடயங்கள் எல்லாம் பேசி முடிந்த நிலையில் கூட்டத்திற்குத் தாமதமாக வந்த சிறிதரன், தமிழில் நீதியரசர் லவ்வாருக்காகக் குரல் எழுப்பிப் பேசினார் என உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
லவ்வாரின் பெயரை ஜனாதிபதி பரிந்துரைக்கவேயில்லை, அத்தோடு அவரை உயர்நீதிமன்ற நீதியரசர் பதவிக்கு பரிந்துரைக்க முடியாது என பிரதம நீதியரசர் எழுத்தில் தெரிவித்துவிட்டார் என்ற தகவல்களை அரசமைப்பு கவுன்ஸில் கூட்டத்தில் தெரிவித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய அதனால் லவ்வாரைப் பற்றி இங்கு பேசுவதில் அர்த்தம் இல்லை என்று கூறி சிறிதரனின் வாயை அடக்கினார் எனத் தெரிய வந்தது.
நீதித்துறையில் அதுவும் நீதியரசர் பதவிகளில் சர்ச்சைக்குரியவராக பல தரப்பினாலும் பேசப்படும் லவ்வாரை சிறுபான்மை இனத்தவர் என்று ஒரு காரணத்தை மட்டும் முன்னிறுத்தி சிறிதரன் எம்.பி. அவருக்காகத் தனித்து அளவுக்கு அதிகமாகக் குரல் எழுப்பியமை குறித்து அரசமைப்பு கவுன்ஸில் உறுப்பினர்கள் மட்டத்தில் கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டதாக அறிய வந்தது.
மேல் நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற இளஞ்செழியனுக்கு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் பதவி உயர்வு வழங்கப்படவில்லை என்பதையும் இந்த அரசமைப்புக் கவுன்ஸில் கூட்டத்தில் சிறிதரன் குறையாக எடுத்துப் பேசினார் என்றும் தெரிய வந்தது.
ஏதேனும் உரிய பதவிகளுக்கு ஜனாதிபதியினால் கவுன்ஸிலுக்குப் பரிந்துரைக்கப்படும் பெயர்கள் குறித்து பரிசீலித்து, அவற்றை ஏற்று அங்கீகரிப்பதா, அல்லது மறுத்து நிராகரிப்பதா என்பதை மட்டுமே அரசமைப்புக் கவுன்ஸில் முடிவெடுக்க முடியும், பரிந்துரைக்கு வராத ஒரு நபரை நியமிக்கும்படி கவுன்ஸிலில் பேசுவது அர்த்தமற்றது, அது அரசமைப்புக் கவுன்ஸிலின் பணியோ பொறுப்போ அல்ல என்று கவுன்ஸில் உறுப்பினர் ஒருவர் பின்னர் சுட்டிக் காட்டினார்.
நியமனங்களுகான பரிந்துரைகளை வழங்குவது தனித்து ஜனாதிபதியின் தற்றுணிபு அதிகாரத்துக்கு உட்பட்டது. இன்னாரைப் பரிந்துரையுங்கள் என்று ஜனாதிபதியை அரசமைப்புக் கவுன்ஸிலோ, அதன் உறுப்பினர்களோ அல்லது வேறு யாரோ வற்புறுத்தவோ, அழுத்தம் கொடுக்கவோ முடியாது. அத்தகைய உயர் பதவிகளுக்கு அவர் பரிந்துரைக்கும் பெயர்களை அங்கீகரிப்பதா, இல்லையா என்பதை மட்டுமே அரசமைப்புக் கவுன்ஸில் தீர்மானித்துக் கூறமுடியும் என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
லவ்வாரையோ, இளஞ்செழியனையோ அடுத்த பதவி நிலைக்குப் பரிந்துரைக்கவில்லை என்பது குறை என்றால், அதை ஜனாததியிடம்தான் பேச வேண்டும். அவர் பதவிக்குப் பரிந்துரைக்காத விடயம் குறித்து அரசமைப்புக் கவுன்ஸிலில் குரல் எழுப்பி அர்த்தமில்லை. அது பொதுக் கருத்துப் பரிமாறும் நாடாளுமன்றம் கூட அல்ல.