- by Editor
- 9 months ago
இரகசியம் - பரகசியம் (15.06.2024)
அரசின் சட்ட சிக்கல் ஒன்று குறித்து மூத்த - பழைய - சட்டத்தரணி ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தேன்.
அந்தக் காலத்துப் பழுத்த சினிமா ரசிகர் அவர். எம்.ஜி.ஆர்., சிவாஜி காலப் பாடல்கள் எல்லாம் அவருக்கு அத்துபடி.
நான் சில தினங்களுக்கு முன்னர் 'புரியாமல் பேசத் தொடங்கி விட்டான். பெரிய மனிதனாகி விடுவான்!' என்ற வசனத்தை 'தங்கப்பதக்கம்' படத்தில் சோ பயன்படுத்துவதை என் பத்தியில் குறிப்பிட்டிருந்தேன். அது அவருக்கு பிடித்து போயிற்று. சிலாகித்துக் கருத்து கூறினார்.
''நீங்கள் குறிப்பிட்டது போல சரியாக 50 ஆண்டுகளுக்கு முன்னர் 1974 ஜூனில்தான் அந்தப் படம் வெளி வந்தது. அதில் ஒரு பாடல் 'சோதனை மேல் சோதனை போதுமடா சாமி' கேட்டிருக்கின்றீர்களா?'' என்று கேட்டார் அவர்.
நானும் ஓர் அந்தக் கால அரைச் சினிமாப் பைத்தியம்தான். அந்தப் பாடல் வரிகள் பாடம். அதனால் நான்கு வரிகளை எடுத்து விட்டேன். அவருக்குச் சந்தோஷம் பிய்த்துக் கொண்டு போனது.
''அந்தப் பாடலிலே இடையிலே ஒரு வசனம் வரும். அதுதான் நாங்கள் இப்போது பேசும் விடயத்துக்கு கனகச்சிதமாக பொருத்தமானது'' - என்றார் அவர்.
எனக்கு விளங்கவில்லை. நாங்கள் தமிழரான தற்போதைய சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்திற்கு ஆறு மாத காலப் பதவி நீடிப்பு வழங்குவது பற்றிய சர்ச்சை குறித்துப் பேசிக் கொண்டிருந்தோம்.
அது தொடர்பில் ஜனாதிபதி வழங்கிய பரிந்துரை குறித்து வரும் 18ஆம் திகதி செவ்வாயன்று அரசமைப்பு கவுன்ஸில் ஆராயவிருக்கின்றது. அதிலிருந்து பத்து நாள்களில் அவர் ஓய்வு பெற வேண்டிய 60 வயதை எட்டுகிறார்.
ஆனால் அரசமைப்பு கவுன்ஸில் அந்தப் பரிந்துரையை சாதகமாகப் பரிசீலிக்காது என்று விடயம் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
அது விடயத்தில் என்ன நடக்கும், ஜனாதிபதிக்கும் அரசுக்கும் யார் சட்ட ஆலோசனை கூறுவார்கள் என்று நான் கேட்டிருந்தேன்.
அதற்குத்தான் அந்தப் பாடலின் இடையே ஒலிக்கும் வாசகத்தில் பதில் இருக்கின்றது என்றார் அந்த வயதில் மூத்த சட்டத்தரணி. தாமே அந்த வாசகங்களை அதே பாடல் தொனியில் எடுத்துவிட்டார்.
''மாமா, காஞ்சுபோன பூமியெல்லாம் வத்தாத நதியைப் பார்த்து ஆறுதல் அடையும். அந்த நதியே காஞ்சி போயிட்டா.... துன்பப் படுறவங்க எல்லாம் அவங்க கவலையை தெய்வத்துக்கிட்ட முறையிடுவாங்க, ஆனா, தெய்வமே கலங்கிநின்னா - அந்த தெய்வத்துக்கு யாராலே ஆறுதல் சொல்ல முடியும்?''-என்று அந்தப் பாடிலின் இடையே ஒலிக்கும் வாசகங்களை சொல் தவறாமல் ஒப்புவித்தார் அவர்.
''அரசாங்கத்தின் சட்டப் பிரச்சனைகளை எல்லாம் கையாள வேண்டியவர் சட்டமா அதிபர். இன்று அவரது பதவி நீடிப்பே சட்டச் சிக்கலில். வழமையாக அரசின் சட்ட சிக்கலுக்கு அவரிடம் போய் முறையிடுவர். இப்போது அவரின் பதவி நீடிப்பே சிக்கலில். அவர் யாரிடம் போய் முறையிடுவார்? அவரது பதவியின் பிரச்சினை குறித்து ஜனாதிபதியும் அரசும் யாரிடம் பரிந்துரை கேட்க முடியும்? அவரது பதவி நிலைச் சிக்கல் குறித்து அவரிடமே சட்ட ஆலோசனை கேட்பது தகுமா? ஆகவே 'தங்கப்பதக்கம்' பாடல் கேள்விதான் இதுவும்'' - என்றார் அவர்.
எனக்குப் புரிந்த மாதிரியும் இருந்தது, புரியாத மாதிரியும் இருந்தது. உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது வாசகர்களே...?