- by Editor
- 6 days ago
இரகசியம் - பரகசியம் (14.11.2023)
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை இரண்டு, மூன்று வருடங்களின் பின்னர் நேற்றுத் திடீரென கூடவிருப்பது குறித்து நேற்று இப்பத்தியில் பிரஸ்தாபித்திருந்தேன்.
அக்கிளையுடன் எனக்கு சொற்ப காலம் நெருங்கிய ஊடாட்டம் இருந்தது. ஒரு மூன்று, மூன்றரை ஆண்டு காலம். அதுவும் கூட பத்து வருடத்திற்கு முந்திய கதை.
எனினும், அதன் பழைய உறுப்பினர்கள் பலரை எனக்கு நன்கு தெரியும். குறைந்தது மூன்று டசின் பேரையாவது நான் நன்கு அறிவேன். அவர்களில் சிலரை நேற்றிரவு தொடர்பு கொண்டேன். அவர்கள் யாருக்கும் கூட்டம் குறித்து தகவலே இல்லை. ஒருவர் மட்டும் 'முதல் நாள்தான் தகவல் கிடைத்தது, அப்படிக் கூட்டுவது முறையற்றது எனக் கட்சியின் பதில் பொதுச் செயலாளருக்கு எழுத்தில் அறிவித்துள்ளேன், அதனால் கூட்டத்தில் பங்குபற்றவில்லை' என்றார்.
இன்னொருவரோ ''உங்கள் பத்தியை பார்த்து, அறிந்து,கூட்டத்துக்கு போயிருந்தேன். பழைய முகங்கள், நீண்ட கால உறுப்பினர்கள் எவரையும் காணவில்லை. இப்படிக் கூட்டுவது முறையற்றது என்று ஆரம்பத்திலேயே எடுத்துரைத்தேன். பழைய உறுப்பினர்கள் பலருக்கு விடயமே தெரியாது என்றேன். எனினும் என் கோரிக்கை ஏற்கப்படவில்லை. அதனால் எழுந்து வந்து விட்டேன்'' - என்றார்.
''கூட்டத்துக்கு சுமார் ஒன்றரை டசின் பேர் வந்திருப்பார்கள். எல்லோரும் புதிய முகங்கள். அவர்களில் 7, 8 பேரிடம் அப்போதுதான் கட்சி அங்கத்துவப் பத்திரம் வழங்கி நிரப்பி கொண்டு இருந்தார்கள்'' - என்றும் அவர் கூறினார்.
இதற்கு மேல் எனக்கு விவரம் தெரியவரவில்லை.
எது, எப்படி என்றாலும் கட்சியின் ஒரு கிளையின் உறுப்பினர்களின் பெயர் பட்டியல் மற்றும் விலாசம், தொடர்பாடல் விவரங்கள் ஒழுங்காகப் பேணப்பட்டு இருந்தால்தான் அவர்களுக்குக் கூட்டம் குறித்து நேர்த்தியாக அறிவித்திருக்க முடியும். அதுவே சம்பந்தப்பட்டோரிடம் இருக்கின்றதோ, என்னவோ...!
ஆயினும் உறுப்புரிமை பெற்ற ஒவ்வொருவரினதும் விவரமும் கட்சியின் நிர்வாக செயலாளரிடம் கட்டாயம் இருக்கும். அதை ஒழுங்காகப் பேணுவதில் தற்போதைய நிர்வாகச் செயலாளர் குலநாயகம் ஒரு சூரர். கொழும்புக் கிளையின் முழு அங்கத்தவர் பட்டியல் நிச்சயம் அவரிடம் இருக்கும். அவர் தலையிட்டால் ஒழுங்காகக் கூட்டம் நடைபெறும் என்பதும் உறுதி.
ஆயினும் ஒன்று. எண்பதுகளின் ஆரம்பத்தின் பின்னர் 2010 இல் தான் தமிழரசின் கொழும்புக் கிளை மறுசீரமைக்கப்பட்டது. மீண்டும் ஒரு தடவை அது செய்யப்பட வேண்டும் என்றே எனக்குத் தோன்றுகின்றது.
***
நாட்டில் பல விடயங்கள் இப்போது 'டீல்' அடிப்படையிலே அமைகின்றன. ஏன் கடவுளுக்கு நேர்த்தி வைப்பது கூட ஒரு டீல்தானே...? நீ இன்ன விடயத்தை எனக்கு அருளினால் நான் இன்ன விடயத்தைச் நேர்த்தியாகச் செய்வேன் என்பது கடவுளுடன் செய்யும் டீல்தானே..? நமது நாட்டில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் ஒரு டீல் மன்னர்தான்.
இப்போதும் கூட, நேற்றுத் தான் சமர்ப்பித்த வரவு - செலவுத் திட்டத்திலும் அவர் ஒரு டீல் போட்டு இருக்கின்றார் - பதினைந்து லட்சம் அரச ஊழியர்களுடனும்.
அவர் சமர்ப்பித்த வரவு - செலவுத் திட்டத்தின் பிரதான பேசுபொருள் அரச ஊழியர்களுக்கு அவர் வழங்க முன் வந்திருக்கும் தலா பத்தாயிரம் ரூபா வாழ்க்கைச் செலவுப்படி தொடர்பான அலவன்ஸ் அதிகரிப்புத்தான்.
அது வரும் ஜனவரியில் இருந்து நடைமுறைக்கு வரும் என்றாலும், வரும் ஏப்ரல் வரை அந்தந்த மாதத்தில் அது வழங்கப்பட மாட்டாது. மூன்று, நான்கு மாத நிலுவையும் ஏப்ரலுக்குப் பின்னர் சேர்த்தோ, பகுதி பகுதியாகவோ வழங்கப்படும்.
அதன்படி அவரின் டீல் விடயம் தெளிவானது.
மார்ச் 24 இல் பிறந்தவர் ரணில். அடுத்த மார்ச் 24 இல் அவருக்கு 75 வயது. அச்சமயத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அடுத்த ஜனாதிபதியாகப் பதவியேற்ற அவர் விரும்புகின்றார். அதற்காக அடுத்த ஜனாதிபதித் தேர்தலை ஆறு, ஏழு மாதங்கள் முற்கூட்டியே நடத்த அவர் விரும்புகின்றார் என்ற ஒரு செய்தியை ஏற்கனவே நாம் வெளியிட்டிருந்தோம்.
அப்படித் தேர்தலை முற்கூட்டியே நடத்தும் திட்டத்தை ஒட்டித்தான் இந்த பத்தாயிரம் ரூபா மேலதிக கொடுப்பனவு டீலை அவர் பிரஸ்தாபித்திருக்கின்றார் என்கின்றார் கொழும்பு அரசியல் விமர்சகர் ஒருவர். மக்களுடனான அவரது டீல் இரண்டு வகையில் ஒன்றாக இருக்கலாம் என்கிறார் அவர்.
முதலாவது - ஜனாதிபதி தேர்தலுக்கு சற்று முன்னர் மேற்படி அலவன்ஸின் மூன்று மாத நிலுவைக் கொடுப்பனவுடன் சேர்த்து ஒவ்வொரு அரசு ஊழியருக்கும் தலா 40,000 ரூபாவைக் கையில் வழங்கிவிட்டு, அடுத்த சில நாள்களில் ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பை நடத்துவது.
அடுத்தது - எல்லா அரசு ஊழியர்களின் கணக்கிலும் மேற்படி மேலதிக கொடுப்பனவுக்கான வழங்கலான சுமார் 40 ஆயிரம் ரூபாவை அவர்கள் வழங்கப்பட வேண்டிய நிலுவையாகக் காட்டிக்கொண்டு, தேர்தலை நடத்துவது. இந்தத் தேர்தலில் நான் வென்று, மீண்டும் அதிகாரத்துக்கு வந்தால்தான் இந்த 40 ஆயிரம் ரூபா நிலுவையும் தப்பாமல், உறுதியாக உங்களுக்கு கிடைக்கும் என்ற செய்தியை அரச ஊழியர்களுக்கு உணர்த்தியபடி தேர்தலை நடத்துவது.
எந்த வகையில் டீல் அமைந்தாலும் ரணிலுக்கு வாசியான நிலைமைதான் என்றார் அந்த விமர்சகர்.
மனிதன் ஒன்று நினைக்க, கடவுள் வேறு ஒன்றை நிறைவேற்றுவது போல, ரணில் தாம் ஒரு கணக்கில் டீல் போட, மக்கள் வேறு விதத்தில் கணக்கிட்டு விட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை....!