Thursday, October 8, 2026

இரகசியம் - பரகசியம் (14.07.2024)


இலங்கைத் தமிழரசு கட்சியின் வழக்குத் தொடர்பான எதிராளிகள் தரப்புகள் அனைத்தும் இன்று வவுனியாவில் சந்திக்கின்றன.

கட்சியின் வழக்கு வரும் வெள்ளிக்கிழமை 19 ஆம் திகதி திருகோணமலை மாவட்ட நீதிமன்றுக்கு வருகின்றது. அதன் போது வழக்கை சுமூகமாக முடிவுக்கு கொண்டு வரும் விதத்தில் வழக்காளியுடன் ஒரு இணக்கத்துக்கு வர வேண்டிய தேவை கட்சி நிர்வாகிகளான எதிராளிகளுக்கு உள்ளது.

அப்படி வழக்காளியுடன் ஓர் இணக்கத்துக்கு வர முன்னர் அவ்விடயம் தொடர்பில் எதிராளிகளான கட்சி நிர்வாகிகள் மற்றும் இடையீட்டு எதிராளி ஆகியோர் தங்களுக்கு இடையே ஒன்றுபட்ட நிலைப்பாட்டை எட்ட வேண்டும். அந்த நிலைப்பாட்டை எட்டுவதற்காகவே இன்றைய வவுனியா சந்திப்பு என்று தெரிகிறது.

இது தொடர்பில் ஏற்கனவே எதிராளிகளின் சட்டத்தரணிகள் ஒரு சாரார் தமக்குள் கலந்துரையாடி, ஒருமுகப்பட்ட நிலைப்பாட்டை எடுத்து, ஒரு நகல் வடிவத்தைப் பிரேரித்துள்ளனர். அது தொடர்பிலேயே இன்று முடிவு செய்யப்பட இருக்கின்றது.

எதிராளிகளான சுமந்திரன், சத்தியலிங்கம், குலநாயகம், இடையிட்டு எதிராளி இரட்ணவடிவேல் ஆகியோரின் சம்மதத்துடனான ஓர் இணக்க நகலை மற்றைய எதிராளிகளின் சட்டத்தரணிகளுடன் சேர்ந்து சுமந்திரன் தயாரித்து முன் வைத்துள்ளார். ஏனைய எதிராளிகளான மாவை சேனாதிராஜா, சிறிதரன், குகதாசன், யோகேஸ்வரன் ஆகியோர் தத்தமது சட்டத்தரணிகளின் கலந்துரையாடல் மற்றும் வழிகாட்டுதலுடன் இன்றைய கூட்டத்துக்கு சமுகம் தந்து, அந்த நகல் குறித்துத் தமது கருத்துக்களை தெரிவிப்பார்கள்.

அதன் அடிப்படையில் எட்டு எதிராளிகளின் சார்பிலும் ஒன்றுபட்ட இணக்க ஏற்பாட்டு முன்மொழிவை இறுதி செய்ய வேண்டும்.

அதை அடுத்த தவணையின் போது - அதாவது வரும் வெள்ளிக்கிழமையன்று - நீதிமன்றத்தில் முன் வைத்தால் அது குறித்து பரிசீலித்து இணக்கத்துக்கு - முடிவுக்கு - வருவதற்காக வழக்காளிக்கு ஒரு கால அவகாசத்தை நீதிமன்றம் வழங்கி, வழக்கை ஒத்திவைக்கும்.

அதன் பின்னர் அடுத்த தவணையில் இருதரப்பு இணக்கத்தோடு வழக்கை முடிவுறுத்தலுக்கு கொண்டுவர முடியும்.

ஆயினும் இந்த இணக்க நிலையோடு வழக்கு முடிந்து விடாது. நீதிமன்ற சம்மதத்துடன் காணப்பட்ட இணக்கம், முழு அளவில் நடைமுறைப்படுத்தப்படும் வரை வழக்குக் கிடப்பில் இருக்கும்.

நீதிமன்றின் முன் காணப்பட்ட இணக்கம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்ற ஆதங்கம் ஏதேனும் ஒரு தரப்புக்கு வந்தால், அதன் அடிப்படையில் அந்தத் தரப்பு மீண்டும் இந்த வழக்குக்கு உயிர்ப்புக் கொடுக்கக்கூடிய விதத்தில் அது நிலுவையில் நிறுத்தப்பட்டிருக்கும் என்றே தெரிகின்றது. 

you may also like