- by Editor
- 9 months ago
இரகசியம் - பரகசியம் (13.04.2024)
நேற்று 'மாலை முரசு' இணையத்தில் தரவேற்றம் செய்து ஒரு பத்து நிமிடத்தில் ஓர் அன்பரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.
''இரண்டாம் பக்கத்தில் வெடுக்குநாறிமலை ஆலய நிர்வாகத் தெரிவுக் கூட்டத்துக்குள் அழையா விருந்தாளியாக நுழைந்த சிவசேனை; எதிர்ப்பு தெரிவித்து வெளியேறிய மக்கள்' என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியிட்டு இருக்கின்றீர்கள். அதை ஒட்டி ஒரு பழைய விளம்பரத்தின் பிரதியை 'வட்ஸ்அப்'பில் உங்களுக்கு அனுப்பி உள்ளேன். பாருங்கள். பிறகு பேசுகிறேன்.'' - என்றார் அந்த அன்பர்.
விளம்பரத்தைப் பார்த்தேன்.
மேற்படி வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான புதிய ஆலய பரிபாலன சபை தெரிவு பற்றியது அது.
12-04-2024 அன்று காலை 10.30 மணிக்கு நெடுங்கேணி ஒலுமடு பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெறும் அக்கூட்டத்துக்கு 'அனைத்து அடியார்களையும் அழைக்கின்றோம்' என்று ஆலய பரிபாலன சபை அந்த விளம்பரத்தில் தெரிவித்திருந்தது.
சற்று நேரத்தில் அன்பர் அழைப்பு எடுத்தார். அவர் பேச முன்னரே நான் பதில் கூறத் தொடங்கி விட்டேன்.
'அழையா விருந்தாளியாக' என்று தலைப்புத் தவறுதான் என்றேன். நாளை (இன்று) அதனைத் திருத்துவேன் என்றும் கூறினேன். அதனால்தான் இந்தக் குறிப்பு.
இவ்விடயத்தை ஒட்டி மறவன்புலவு சச்சிதானந்தன் தரும் விவரமான விளக்கம் இன்னொரு பக்கத்தில் தனியாகப் பிரசுரமாகியுள்ளது.
***
சபாஷ் சரியான போட்டி....!
பொது வேட்பாளர் நிறுத்துவது தொடர்பான விடயத்தை ஒட்டி தமிழரசுக் கட்சிக்குள் நடப்பதைத்தான் இப்படிக் கூறுகிறேன்.
பொதுவேட்பாளர் விவகாரம் சரிவராது என்று கட்சியின் சிரேஷ்ட துணைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் ஏற்கனவே பகிரங்கமாக அறிவித்து விட்டார். மார்ச் 23 இலேயே தனியார் சமூக ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இதைக் குறிப்பிட்டார்.
ஓரிரு கிழமைகள் கழித்து அதே விடயத்தை சுமந்திரனும் பகிரங்கமாகக் கூறியிருக்கிறார்.
பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற தமிழரசு அணியில் அதன் முன்னாள் மட்டக்களப்பு எம்.பியான அரியநேத்திரனும் ஒருவர்.
''தமிழ்ப் பொது வேட்பாளரை எதிர்ப்பவர்கள் பெரும்பான்மையினத்தில் எந்த வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்பதை வெளிப்படையாக கூற முடியுமா?'' - என்று சவால் விடுத்துள்ளார் அரியநேத்திரன்.
இதற்கு பதில் கேள்வி ஒன்று கேட்டு இருக்கின்றார் சி.வி.கே.சிவஞானம்.
''அதற்கு முதல் நீங்கள் குறிப்பிடும் பொது வேட்பாளர் யார் என்பதைக் கூற முடியுமா?'' - என்று சிவஞானம் கேள்வி எழுப்பினார்.
'சபாஷ்... சரியான போட்டி!' என்று நான் சொல்வது சரிதானே நண்பர்களே...?
அதையும் தாண்டி இன்னொரு விடயம் கட்டவிழ்வதையும் அவதானிக்க முடிகின்றது. பொது வேட்பாளர் திட்டத்துக்கு எதிராக சுமந்திரன் கருத்து வெளியிட்டு விட்டார் அல்லவா? கட்சிக்குள் 'சுமந்திரன்போமியா' நோய் உள்ளவர்களுக்கெல்லாம் அது சூட்டைக் கிளப்பி விட்டுவிட்டது என்று தெரிகின்றது. 'பொது வேட்பாளரை நிறுத்தினால் மட்டுமே தமிழ்த் தேசியம் தப்பிப் பிழைக்கும்; இல்லையேல் பேரினவாதம் வெற்றி பெற்றுவிடும்' என்று தேசியப் புலம்பல் தொடங்கி விட்டது.
பொதுவேட்பாளரை நிறுத்தினால் பேரினவாதம் தோற்கும் என்ற நம்பிக்கையை ஒரு தடவை பரீட்சிக்க அனுமதிப்பதும் நல்லதுதான்.
சுமந்திரனை அடிப்பதாக நினைத்துக் கொண்டு குத்துவிளக்கோடும், மானோடும் அணி சேர்கின்றார்கள்.
அந்தத் திசையில் ஓடவிட்டு விட்டு, ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் பேசுவதுதான் இந்த 'சுமந்திரன்போமியா' நோய்க்கு நல்ல மருந்தாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
விட்டுப் பிடிப்பது விடியலைக் காட்டும்...!