- by Editor
- 10 months ago
இரகசியம் - பரகசியம் (12.5.2025)
-
- by Editor,
- 1 year ago
- in இரகசியம் பரகசியம்
ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர்களுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையில் நேற்றுக் காலை யாழ்ப்பாணம் கந்தரோடையில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் புளொட் தலைவருமான சித்தார்த்தனின் இல்லத்தில் சந்திப்பு இடம் பெற்றது.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோத் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எவ். தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சமத்துவக் கட்சியின் தலைவருமான மு.சந்திரகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழர் பிரதேசங்களில் உள்ள பிரதேச சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து இதன் போது கலந்துரையாடப்பட்டது என்று கூறப்பட்டாலும், அதற்கு அப்பாலும் மிக முக்கிய முடிவுகளுக்கான அத்திவாரங்கள் நேற்றைய சந்திப்பில் போடப்பட்டு விட்டன என்று தெரிகிறது.
தமிழர் பிரதேசத்தில் தமிழ்ப் பேசும் மக்களின் கட்சிகள் முன்னிலை வகிக்கும் உள்ளூராட்சி சபைகளில் அவ்வாறு முன்னிலை வகிக்கும் தமிழ் கட்சி நிர்வாகத்தையும் தலைமையையும் பொறுப்பேற்பதற்கு மற்றைய தமிழ்க் கட்சிகள் ஆதரவளிப்பது என்று கொள்கை அளவில் இந்தச் சந்திப்பில் முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.
பெரும்பாலும் தமிழரசுக் கட்சி முன்னிலை வகிக்கும் 35 சபைகளிலும் அக்கட்சி ஆட்சி அமைப்பதற்கு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆதரவு வழங்கும்.
இந்த உள்ளூராட்சி சபைகளில் தமிழரசுக் கட்சி ஆட்சி அமைப்பதற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கும் அனைத்துத் தமிழ்த் தரப்பினரினதும் ஒத்துழைப்புகளை பெற்றுக் கொள்வதென தமிழரசு கட்சியின் அரசியல் குழு நேற்று முன்தினம் எடுத்த முடிவை நேற்றைய கூட்டத்தில் சுமந்திரன் ஏனையோருக்கு தெளிவுபடுத்தினார். ஆயினும் இந்த சபைகள் தொடர்பாக ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு இருக்கும் எதிர்பார்ப்புகளை அந்தத் தரப்பு விரைந்து தெரிவித்தால், அவற்றைச் சாதகமாகப் பரிசீலிக்க தமிழரசின் தரப்பில் சுமந்திரன் பச்சைக் கொடி காட்டினார் எனத் தெரிகிறது.
இப்போது உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பதற்கு அப்பால் அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் இந்தக் கூட்டத்தில் தீர்க்கமான முடிவு ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக அறிய வந்தது.
'உள்ளூராட்சி சபைகளில் பிரிந்து நின்று தேர்தலை எதிர்கொள்வோம், மாகாண சபை மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களை ஐக்கியமாக எதிர்கொள்வோம்' என்ற தமது முன்னைய நிலைப்பாட்டை சுமந்திரன் இந்தக் கூட்டத்தில் மீண்டும் வலியுறுத்தியமையை அடுத்து, இனி வரக்கூடிய மாகாண சபைத் தேர்தலை பொது அணியில் நின்று எதிர்கொள்வதற்கான அடித்தளம் நேற்றைய கூட்டத்தில் போடப்பட்டு விட்டதாகத் தெரிகிறது. அதாவது தலைவர்கள் மட்டத்தில் மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பாக - புது மெருகுடன் - இயங்குவதற்கான பூர்வாங்க இணக்கம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிகின்றது.
அதற்கு மேலும் ஒரு விடயம் பேசப்பட்டதாக கூட்டத்தில் பங்கு பற்றிய ஒரு தலைவர் தெரிவித்தார்.
வரும் மாகாண சபை தேர்தலில் தமிழரசுக் கட்சியின் சிறிதரன் மாகாண முதல்வர் வேட்பாளராக நிற்பார் என்று தாம் அறிவித்தபோது, அடுத்த நாள் பேட்டியளித்த சிறிதரன் தமக்கு அந்த எண்ணம் இல்லை என்று பகிரங்கப்படுத்தி இருக்கின்றார் என இந்தச் சந்திப்பில் சுமந்திரன் சுட்டிக்காட்டினாராம். அந்தக் காரணத்தின் பின்புலத்தில் தாமே வரும் மாகாண சபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் என சுமந்திரன் நேற்றைய சந்திப்பில் குறிப்பிட்டபோது 'அது எங்களுக்குத் தெரியும்' என்ற சாரப்பட சித்தார்த்தனும் செல்வமும் பதிலளித்தனர் எனக் கூறப்பட்டது.
''நீங்கள்தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று இந்தக் கூட்டத்தில் ஏனையோரிடம் நீங்கள் தெரிவித்தீர்களா?'' - என்று சுமந்திரனிடமே தொலைபேசியில் கேட்டேன். அவர் ஆம் என்றும் சொல்லாமல், இல்லை என்றும் மறுக்காமல், நழுவல் பதில் தந்து, அடுத்த விடயத்துக்குப் பாய்ந்து விட்டார்.
எது, எப்படியாயினும் நேற்றைய கூட்டம் இப்போதைய உள்ளூராட்சி சபை நிர்வாகங்களை தமிழரசும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியும் இணக்கமாகப் பொறுப்பேற்பதற்கு சாதகமான சூழலை ஏற்படுத்தி இருப்பது மாத்திரமன்றி, பழைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை புதிய கட்டமைப்பாக - கட்டுறுதியோடு - மீளக் கட்டி எழுப்புவதற்கான அடித்தளத்தையும் போட்டிருக்கின்றது எனத் திருப்திப்படலாம்.