- by Editor
- 1 year ago
இரகசியம் - பரகசியம் (12.03.2024)
-
- by Editor,
- 2 years ago
- in இரகசியம் பரகசியம்
சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் தொடர்பாகக் கலந்துரையாடுவதற்கு எதிர்க்கட்சிகளின் தலைவர்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைத்திருந்த போதிலும், நேற்று நான் இப்பத்தியில் குறிப்பிட்ட மாதிரி சுமந்திரன் மாத்திரமே நேற்று அக்கூட்டத்தில் பங்குபற்றினார்.
சஜித் பிரேமதாஸ, அனுரகுமார திஸநாயக்க போன்றோர் இக்கூட்டத்தைப் பகிஷ்கரிக்கும் முடிவை எடுத்திருந்தனர் என்பது நேரத்துடனேயே வெளியாகி இருந்த தகவல்தான்.
தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் சுகவீனம் காரணமாக தாம் இந்தக் கூட்டத்தில் பங்குபற்ற முடியாமல் இருக்கின்றார் என்பதைத் தமக்கு அறிவித்துள்ளார் என நேற்றைய கூட்டத்தின் ஆரம்பத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளிப்படுத்தினார்.
இந்தக் கூட்டத்திற்கான அழைப்பு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் அவர் பங்குபற்றவில்லை. தான் பங்குபற்றாவிடினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது, அவர் பங்குபற்றுவார் என்று சிறீதரன் நேற்று முன்தினம் கூறியிருந்தார். அவர் அப்படிக் கூறிய செய்தி நேற்றுக் காலைமுரசிலும் வெளியாகி இருந்தது.
ஆயினும் நேற்று அந்தச் செய்தி சிறீதரனை மேற்கோள் காட்டி வெளியாகி இருந்த சமயத்தில், எனக்குத் தெரிந்திருந்த ஒரு தகவலை நான் நேற்றுக் குறிப்பிடவில்லை, இன்று குறிப்பிடுகிறேன். அது சிறீதரனுக்கும் கூட நேரத்துடன் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
வயது மூப்பின் காரணமாக சளி தொல்லையால் அவதிப்படும் சம்பந்தன் சுமார் ஒரு வார காலம் கொழும்பு நவலோக ஆஸ்பத்திரியில் மருத்துவ தீவிர சிகிச்சை பிரிவில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வருகின்றார். அவர் ஜனாதிபதி கூட்டிய மாநாட்டுக்கு ஆஸ்பத்திரியின் தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து புறப்பட்டு வரமாட்டார் என்று நான் நம்பினேன். அதையே நேற்றைய எனது பத்தியில் கோடியும் காட்டியிருந்தேன்.
நேற்றைய கூட்டத்தில் 'தனி ஒரு படை வீரனாக' சுமந்திரன் பங்குபற்றுகின்றார் என்ற என் கருத்து மிகைப்படுத்தப்பட்டதல்ல. அப்படித்தான் நேற்று அந்தக் கூட்டத்தில் சுமந்திரன் வாதத்தைத் தனித்து முன் வைத்தார்.
ஒரு பக்கத்தில், ஜனாதிபதி, பிரதமர், சபைத் தலைவர், நிதி இராஜாங்க அமைச்சர்கள் இருவர், மத்திய வங்கியின் ஆளுநர், திறைசேரியின் செயலாளர் போன்ற அரசாங்க உயர் அதிகாரிகள் அடங்கிய கூட்டத்தில், மறுபுறம் சுமந்திரன் ஏக எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்து வாதிட்டமை குறிப்பிடத்தக்கது.
இக்கூட்டம் தொடர்பில் கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்தியின் சாராம்சம் இது:-
சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் அமுலாக்கம் தொடர்பில் வெளிப்படைத்தன்மையின்மை தொடர்பில் கணிசமான கரிசனைகளை எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியம் வழங்கிய ஒவ்வொரு பரிந்துரையும் எழுந்தமானமாக வந்ததல்ல. ஒவ்வொன்றுக்கும் புள்ளிவிவர அடிப்படையிலான பகுப்பாய்வு அறிக்கைகள் உண்டு. அவை எங்கே? அவற்றை ஏன் ஒளிக்கின்றீர்கள்? அவற்றை முன்வைத்தால்தானே அந்தப் பரிந்துரைகளின் நியாயத் தன்மை குறித்து நாம் தீர்மானிக்கலாம். விவாதிக்கலாம். முடிவெடுக்கலாம் என்று அரசுத் தரப்பைப் பார்த்து சுமந்திரன் கேள்வி எழுப்பினார்.
அரசாங்கத்திற்கு சர்வதேச நாணய நிதியம் வழங்கிய தொழில்நுட்ப உதவி அறிக்கைகளை எதிர்க்கட்சி உறுப்பினர்களால் அணுக முடியாதமை குறித்து சுமந்திரன் கண்டனம் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், அவரது விசாரணை, கேள்விக் கணைகள் மற்றும் ஆட்சேபனையைத் தொடர்ந்து, ஜனாதிபதி மற்றும் பிரதமர் இருவரும் எதிர்க்கட்சித் தலைவர்களின் கோரிக்கையின் பேரில் இந்த அறிக்கைகளை வழங்க ஒப்புக்கொண்டனர்.
இது, சர்வதேச நாணய நிதிய திட்டத்தின் பரிந்துரைகளை மேலும் தகவலறிந்து மதிப்பீடு செய்ய வாய்ப்பையும் அனுமதியையும் அளிக்கிறது.
வரி மூலம் உடனடி வருவாய் ஈட்டுவதில் உடனடித் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டுமானால் நிறுத்தி வைக்கும் வரி விகிதத்தை (withholding tax rate) உயர்த்துவதற்குப் பதிலாக, மதிப்பு கூட்டப்பட்ட வரியை (வற் வரியை) 18 வீதமாக உயர்த்துவதற்கான முடிவு போன்ற சில வருவாய் உயர்த்தும் நடவடிக்கைகளுக்குப் பின்னால் உள்ள நியாயம் குறித்து சுமந்திரன் கேள்வி எழுப்பினார்.
மேலும், 2024 பெப்ரவரிக்குள் முடிக்கப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தில் அடையாளம் காணப்பட்ட 15 முன் நடவடிக்கை விடயங்களை அரசாங்கம் செய்யத் தவறியதை சுமந்திரன் விவரமாக எடுத்துரைத்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் தொடர்பில் போதுமான வெளிப்படைத்தன்மை இல்லை. சமூகத்தின் ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினர் மீதான தாக்கத்தைக் கருத்தில் கொள்ளாமல், இத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அத்தகைய சூழ்நிலையில் எதிர்க்கட்சிகள் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திற்கு ஆதரவளிக்க முடியாது என்று சுமந்திரன் தனது நிலைப்பாட்டைத் தெளிவாக மீண்டும் வலியுறுத்தினார்.
- இவ்வாறு அந்தச் செய்தியின் சாராம்சம் அமைந்திருந்தது.
இந்தக் கூட்டத்தின் பின்னர் நேற்றிரவு கொழும்பின் மூத்த ஆங்கில ஊடகவியலாளர் ஒருவருடன் பேசினேன். நேற்றைய கூட்டம் குறித்து அதிகம் உள் வீட்டுத் தகவல்களை அவர் அறிந்திருந்தார் என்று நினைக்கிறேன்.
''சட்டத்துறையில் மட்டுமல்ல, பொருளாதார விவகாரங்களிலும் தனது ஆளுமையை நேற்றைய கூட்டத்தில் சுமந்திரன் நிலை நிறுத்தினார்''- என்பது அவரது கருத்தாக இருந்தது.
''தென்னிலங்கை எதிர்க்கட்சிகள் செய்யத் தவறியதை தனி மனிதராக சுமந்திரன் நின்று வாதாடிச் சுட்டிக் காட்டியிருக்கின்றார்'' என்றார் அவர்.
''அது சரிதான். தென்னிலங்கை எதிர்க்கட்சிகள் கூட்டத்தை பஷ்கரித்துப் புறமொதுக்கும் போது, இவருக்கு மட்டும் ஏன் இந்த வேலை என்றுதான் தமிழ் கட்சிகளும் மக்களும் நினைக்கின்றார்கள்'' - என்றேன் நான்.
''பாவம் சுமந்திரன்!'' - என்ற பாணியில் அவர் ஆங்கிலத்தில் ஒரு குறிப்புடன் தொலைபேசி உரையாடலை முடித்துக் கொண்டார்.
எனக்கும் அப்படித்தான் தோன்றியது. தேவையில்லாத வேலை சுமந்திரனுக்கு...!
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் வாசகர்களே...?