- by Editor
- 5 months ago
இரகசியம் - பரகசியம் (11.01.2024)
தமிழரசுக் கட்சியின் உத்தேச தேசிய மாநாட்டை தள்ளி வைப்பதன் மூலம் கட்சித் தலைவராகத் தாமே இன்னும் கொஞ்ச நாள்களுக்குத் தொடர்ந்து நீடிப்பதற்கு அதன் தற்போதைய தலைவர் மாவை சேனாதிராசா நேற்று திருகோணமலையில் கட்சியின் அரசியல் குழு கூட்டத்தில் 'தலைகீழாக' நின்று பார்த்தார். ஆனால் யாரும் அவரது அந்தக் கோரிக்கையையோ அவரது பேச்சையோ செவிமடுத்தவர்களாகவோ - மதித்தவர்களாகவோ - சட்டை செய்தவர்களாகவோ - இல்லை.
தலைவரின் கருத்தைப் பொருட்படுத்தாமல், உத்தேச திகதியில் மாநாட்டை நடத்தும் முடிவு நேற்றைய கூட்டத்தில் இறுக்கமாக எடுக்கப்பட்டிருப்பதாகவே தெரிகின்றது.
அதேபோல, கட்சியின் திருகோணமலை மாவட்ட நிர்வாகிகள் தெரிவை இல்லாமல் செய்து, மீண்டும் புதிய நிர்வாகிகள் தெரிவை உடன் நடத்த வைப்பதற்கு சம்பந்தன், அவரது மகன் மற்றும் அந்த அணியுடன் இப்போது ஒட்டியுள்ள திருகோணமலை நவம் போன்றோரின் முயற்சிகளும் நேற்றைய கூட்டத்தில் சரிவரவில்லை. பாச்சா பலிக்கவில்லை.
இனிமேல் கட்சியின் புதிய தலைவராக தெரிவாகுபவரின் முடிவின் பிரகாரம் திருகோணமலை மாவட்ட நிர்வாகிகள் தெரிவு இந்த மாநாட்டுக்கு பின்னர் எப்போதேனும் நடக்க கூடும். நடக்காமலும் போகலாம். இதுதான் நிலைமை.
தமிழரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் மூவருக்கும் இடையில் இணக்கத்தை ஏற்படுத்துவதற்கு வழங்கப்பட்ட 24 மணி நேர கால அவகாசம், எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாமல் இன்று மாலையில் காலாவதியாகும். அதிலும் மாற்றம் இருக்காது. அதுவும் அடித்துக் கூறக்கூடிய விடயம்.
தலைவர் தெரிவுக்கான தேர்தலும் மாநாடும் இந்த ஜனவரி மாத முடிவுக்கு முன்னர் ஒப்பேறுவது உறுதி. சம்பந்தன் வீட்டில் நேற்று நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பெரிய மாற்றம் எதனையும் கொண்டு வரவில்லை என்பதுதான் நிலைமை. தேர்தல் போட்டியின்றி கட்சித் தலைவர் தெரிவாகுவதற்கான வாய்ப்பு 99.99 வீதம் இல்லவே இல்லை.
நேற்றைய கூட்டத்தில் ஒரு விடயம் சுட்டப்பட வேண்டும். தமது நிலைமை - கட்டம் - யாது என்பதை இப்போதைய கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தாமே உணரும் வாய்ப்பு நேர்ந்தமைதான் அது.
கடந்த 18ஆம் திகதி திருகோணமலையில் கட்சியின் அரசியல் குழு கடைசியாக கூடியது. அப்போது திருகோணமலை மாவட்ட நிர்வாகிகள் தெரிவு குறித்து கிளப்பப்படும் ஆட்சேபம் பற்றியும் விரிவாக பேசப்பட்டது. சர்ச்சையை சமாளிப்பதற்காக அங்கு தங்களின் பிரதிநிதித்துவம் மறுக்கப்பட்டதாக கருதும் தரப்புகளுக்கு இடமளிக்கும் விதத்தில் அந்த மாவட்டத்திற்கு மேலும் ஆறு பொதுக்குழு உறுப்பினர்கள் இடத்தை அதிகமாக வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. அப்படி ஒரு தீர்மானம் அந்தக் கூட்டத்தில் எடுக்கப்படவேயில்லை என்று ஒரே பிடிவாதமாக நின்றார் கட்சி தலைவர் மாவையர். ஆனால், கடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் அப்படி ஒரு தெளிவான முடிவு எட்டப்பட்டது, வெளிப்படையாக எடுக்கப்பட்டது என்று உறுதியாகத் தெரிவித்தனர்.
அதை மறுத்து நின்ற கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா ஒரு கட்டத்தில் 'அப்படி முடிவு எடுக்கப்பட்டு இருந்தால் எனக்கு என்ன மறதியா?' - என்று தானாகவே கேட்டாராம்.
ஒருவரும் பதில் கூறவில்லை. ஆனால், அவரைப் பார்த்து, நமுட்டுச் சிரித்துக் கொண்டனர்.
இந்தப் பத்திரிகையை - இந்தப் பத்தியை - ஒரு தடவை வாசித்து மாவை சேனாதிராஜா தன்னை புரிந்து கொள்வது நல்லது.
நேற்றைய அரசியல் குழுக் கூட்டம் தொடர்பில் இன்று ஊடகங்களில் தடல்புடலாகச் செய்திகள், விமர்சனங்கள், ஊகங்கள் எல்லாம் வெளியாகும்.
ஆனால் உறுதியான - தெளிவான - முடிவு இதுதான். தலைவர் தெரிவுக்குப் போட்டியிடும் மூவரும் ஒன்று கூடிக் கலைந்து, கதைத்து, கலந்துரையாடினாலும் மாற்றம் எதுவும் நடக்காது. தலைவர் தெரிவுக்கு தேர்தல் உறுதி. அடுத்தது வருகின்ற 21ஆம் திகதி தலைவர் தேர்வுக்கான தேர்தலும், 28ஆம் திகதி தேசிய மாநாடும் நடப்பதும் கூட உறுதியானதுதான். ஆனால் அதில் ஒரு சிறிய மாற்றம் வரக்கூடும். அது - இந்த இரண்டு நிகழ்வுகளுமக்குமான திகதி மாற்றப்பட்டு இம்மாத இறுதியில் வரும் வார இறுதியில் அடுத்தடுத்த நாள்களில் அவை இரண்டும் நடக்கக்கூடும். அது ஒன்றே நடக்கக்கூடிய உச்சபட்சமான மாற்றமாக இருக்கலாம்.