- by Editor
- 2 years ago
இரகசியம் - பரகசியம் (10.3.2026)
-
- by Editor,
- 6 months ago
- in இரகசியம் பரகசியம்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கு எதிராக லஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில், ஊழல், முறைகேடு குற்றச்சாட்டுகளைச் சுமத்திய தென்னிலங்கை சிவில் சமூக செயற்பாட்டாளர் சஞ்சய் மாவத்தையை அவரது முறைப்பாடுகள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு என நாளை புதன்கிழமை லஞ்ச, ஊழல் தொடர்பான ஆணைக் குழுவுக்கு வருகை தருமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டிருப்பதாக அறிய வருகின்றது.
வன்னி மாவட்டத்தில் சுமார் 1,200 ஏக்கர் அரசு காணிகளை சூரிய மின் உற்பத்தி சம்பந்தப்பட்ட மூன்று நிறுவனங்களுக்கு பெற்றுக் கொடுப்பதில் சிவஞானம் சிறிதரன ஊழல் செய்தார் என சஞ்சய் மாவத்தை தமது முறைப்பாட்டில் குற்றம் சுமத்தி இருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை சமர்ப்பிக்கும்படி கோரியே சஞ்சய் மாவத்தையை லஞ்ச, ஊழல் முறைப்பாட்டு ஆணைக்குழு நாளை மன்றுக்கு அழைத்து இருப்பதாகத் தெரிகிறது.
2024 செப்டம்பர் 21ஆம் தேதி ஜனாதிபதித் தேர்தல் நடந்தது. அதற்கு மூன்று நாள்களுக்கு முன்னர் செப்டம்பர் 18ஆம் திகதி கடைசி நேரத்தில் அவசர அவசரமாக காரியங்கள் முன்நகர்த்தப்பட்டு, அந்த மூன்று நிறுவனங்களுக்கும் அந்த 1200 ஏக்கர் நிலமும் ஜனாதிபதித் தேர்தலுக்கு மூன்று நாள்களுக்கு முன்னர் வழங்கப்பட்டுள்ளன.
கடைசி நேரத்தில் இவ்வாறு அரசு காணிகள் வாரி வழங்கியமை பற்றிய விடயங்களை விசாரித்தால் உண்மை அம்பலமாகும் என்பது சஞ்சய் மாவத்தை தரப்பின் விளக்கமாக இருக்கும் என அவருடன் தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்தன.
***************************************************
தமிழர் அரசியலோடு தொடர்புடைய மூன்று வழக்குகள் இந்த வாரத்தில் நீதிமன்றுக்கு வருகின்றமை பற்றி இரண்டொரு நாள்களுக்கு முன்னர் என் பத்தியில் குறிப்பிட்டு இருந்தேன்.
இன்னொரு வழக்கும் வரும் 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பு நீதிவான் நீதிமன்றுக்கு வருகின்றது.
தமக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் திட்டமிட்டு காரியமாற்றும் ஊடக நிறுவனங்கள், சமூக ஊடகங்கள், முகப்புத்தக கணக்குகளைப் பயன்படுத்தும் தனி நபர்கள் என ஐம்பதுக்கும் அதிகமானோருக்கு எதிராக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இணைய வழி பாதுகாப்பு சட்டங்களின் கீழ் தொடரப்பட்ட வழக்கே அது.
இந்த வழக்கில் ஐம்பதுக்கும் மேற்பட்ட எதிராளிகளுக்கும் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் வழக்காளியான இரா.சாணக்கியன் எம்.பிக்கு எதிராக அவதூறு ஏற்படுத்தும் செய்திகளை வெளியிடுவதற்கும், ஒளிபரப்புச் செய்வதற்கும், பிரசாரம் செய்வதற்கும் மேற்படி ஐம்பதுக்கும் மேற்பட்ட எதிராளிகளுக்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
தனிப்பட்ட நபர்களுக்கு எதிராகவும் இந்த வழக்கு தொடுக்கப்பட்டிருக்கின்றமையினால் அவர்களும் வரும் வெள்ளிக்கிழமையன்று இந்த வழக்குத் திகதிக்கு நீதிமன்றில் பிரசன்னமாக வேண்டியவர்களாக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.