- by Editor
- 1 month ago
இரகசியம் - பரகசியம் (10.08.2024)
மாகாண சபைகளுக்கான தேர்தல்களை மீண்டும் நடத்துவதற்கு வழி செய்யும் மாகாண சபைகள் தேர்தல் சட்டத்தை திரும்பவும் நடைமுறைக்கு கொண்டு வரச் செய்வதற்கான சட்ட மூலத்தை நிறைவேற்றும் விவகாரம் எதிர்பார்த்தபடி முன் நகரருகின்றது.
சுமந்திரன் எம்.பி. தனிநபர் பிரேரணையாகச் சமர்ப்பித்துள்ள இந்தச் சட்டமூலத்தை உயர்நீதிமன்றம் வழங்கிய பரிந்துரைப்படி மாற்றுவதற்கான விவகாரம் சட்ட விடயங்களுக்கான நாடாளுமன்ற நிலையியல் குழுவின் முன்னால் நேற்று பிற்பகல் பரிசீலிக்கப்பட்டு முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சட்டமூலத்தில் இரண்டு மாற்றங்களை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்திருந்தது. அதற்கேற்ப சட்டமூலத்தை மாற்றி அமைக்கும் அந்தச் சிறிய வேலையை சம்பந்தப்பட்ட நிலையியல் குழு நேற்று கூடி செய்து விட்டது.
இனி அந்த வடிவம் எதிர்வரும் 21 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
அதன் பின்னர் வரும் மூன்றாம் திகதி இந்தச் சட்ட மூலம் மூன்றாம் வாசிப்புக்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
பெரும்பாலும் அன்றே விவாதம் இன்றி - வாக்கெடுப்பின்றி - இந்தச் சட்ட மூலம் மூன்றாம் வாசிப்பிலும் நிறைவேற்றப்பட்டு சட்டமாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அந்தச் சட்ட மூலம் நடைமுறைக்கு வந்தால், அடுத்துத் தாமதம் இன்றி மாகாண சபை தேர்தல் நடக்கும். அதற்கான அதிகாரம் சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவுக்கு வந்து விடுவதால் தேர்தலை ஆணைக் குழு விரைந்து நடத்த நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கலாம். நம்பலாம்.
***
இலங்கைக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கும் 'ஈ - விசா' வழங்கும் வேலையைச் செய்யும் பொறுப்பை ஒரு நபருக்கு 25 டொலர் என்ற கட்டணத்தில் வெளிநாட்டு நிறுவனம் ஒன்றுக்கு தாரை வார்த்த இலங்கை அரசியல்வாதிகளின் நடவடிக்கையை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை மூலம் தடுத்து விட்டது என்பது தெரிந்ததே.
பழைய முறைப்படி ஒரு பயணிக்கு ஒரு டொலர் என்ற கட்டணத்தில் ஈ- விஸா வழங்கும் அந்தப் பொறுப்பை மொபிட்டல் நிறுவனத்திடம் மீள ஒப்படைக்கும்படியும் உயர்நீதிமன்றம் தனது இடைக்கால உத்தரவில் வழிகாட்டி இருந்தது.
ஆனால் பத்து நாள்கள் கடந்தும் அந்த முறைமை இன்னும் மொபிட்டல் நிறுவனத்திடம் மீளக் கையளிக்கப்படவில்லை.
உயர்நீதிமன்ற உத்தரவை உதாசீனம் செய்தமையால் குடிவரவு, குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்ற எனத் தெரிகின்றது.
அரசியல்வாதிகளின் முறையற்ற உத்தரவுகளுக்கு இணங்கும் அதிகாரிகள் நீதிமன்றங்களில் குட்டு படுவது தவிர்க்க முடியாததாகவே இருக்கும்.