Wednesday, October 7, 2026

இரகசியம் - பரகசியம் (10.04.2024)


தேர்தல் என்றால், தொடை நடுங்கும் ரணிலார், உள்ளூராட்சித் தேர்தலை நடத்த நிதி இல்லை என்று கைவிரித்தவர். உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் கடந்த ஓராண்டாக இன்றுவரை அதுதான் அவரின் நிலைப்பாடு.

ஆனால் ஜனாதிபதித் தேர்தல் நெருங்குவதால், நாட்டில் நாளொரு அபிவிருத்தி திட்டமும் பொழுதொரு உதவி மானியமும் குறித்து அவரது அரசு அறிவிக்கத் தவறுவதில்லை.

மக்களின் நல்வாழ்வு திட்டங்களுக்கு என்ற பெயரில் பல்லாயிரம் கோடி ரூபா மதிப்பிலான திட்டங்களை அடுத்தடுத்து அறிவிக்கும் அவரின் அரசினால் நிலுவையில் நிற்கும் உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கு சில நூறு கோடி ரூபாக்களை ஒதுக்க முடியாமல் இருப்பது விந்தைதான்.

நாட்டின் அந்நிய செலாவணிக் கையிருப்பு உயர்ந்துவிட்டது, பொருளாதார மேம்பட்டு வருகின்றது என்றெல்லாம் தேர்தலுக்கு முந்திய புளுகு மூடை அறிவிப்புக்கள் அடுத்தடுத்து வருகின்றன. அவை எதிர்பார்க்கப்பட்டவைதான்.

ஆனால், இதற்கிடையில் உலக வங்கி நாட்டின் உண்மை முகத்தை அம்பலப்படுத்திக் காட்டுகின்றது.

கடந்த இரண்டாம் திகதி அது வெளியிட்ட அறிக்கையின்படி, நாட்டில் கால்வாசி மக்கள் வறுமை கோட்டின் கீழ் விழுந்து விட்டனர். 26 வீத மக்கள் நேரடியாக வறுமையில் வாடுகின்றனர் என்பது புள்ளி விவரங்களுடன் அம்பலமாகி இருக்கின்றது.

நாட்டின் வறுமை நிலை 2019 ஆக 11 வீதமாகத்தான் இருந்தது. இப்போது அது 26 வீதமாக உயர்ந்து விட்டது என்று உலக வங்கி சுட்டிக் காட்டுகிறது.

இலங்கைக் குடும்பங்களின் வருமானம் சராசரியாக 60 வீதத்தால் விழுந்துவிட்டது.

விலைவாசி உயர்வால் 17.5 வீத இலங்கைக் குடும்பங்கள் கல்வி மற்றும் சுகாதார - மருத்துவ செலவுகளை வெட்டி முடக்கி விட்டன என்று அந்த அறிக்கை கூறுகிறது.

ஆனால், ரணிலும் அவரது அரசு தரப்பினரும் மட்டும் நாட்டின் பொருளாதாரம் சுபீட்சத்தை நோக்கி பயணிப்பதாக கயிறு விட்டுக் கொண்டிருக்கின்றனர்.

எரிபொருள், எரிவாயு உட்பட அத்தியாவசியப் பொருள்கள் தட்டுப்பாடின்றிக் கிடைக்கின்றன.

மின்வெட்டு இல்லை. புதிய ரூபா நோட்டு அச்சிடுதலும் இல்லை. ஆனால் இவையெல்லாம் பொருளாதாரம் மேம்பட்டு விட்டது என்பதற்கான அறிகுறிகள் அல்ல. வாங்கிய கடனை இன்னும் நாம் மீளச் செலுத்தத் தொடங்கவில்லை. அது இல்லாமல் நாட்டின் அந்நிய செலாவணிக் கையிருப்பு உயர்ந்து விட்டது என்று அறிவிப்பது வெறும் கப்ஸாதான்...!


you may also like