- by Editor
- 2 years ago
இரகசியம் - பரகசியம் (09.11.2023)
-
- by Editor,
- 2 years ago
- in இரகசியம் பரகசியம்
நேற்று நாடாளுமன்றத்தில், நீதிமன்ற அவமதிப்புத் தொடர்பான சட்டமூலத்தின் மீது ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆற்றிய சட்ட நிபுணத்துவ உரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று எண்ணுகிறேன்.
சட்ட வியாக்கியானங்கள், விளக்கங்கள் மிகுந்த அந்த உரை சாதாரண பொது மகனுக்கு விளங்கிக் கொள்வதற்கு சிரமமாக இருக்கலாம். ஆனால் நீதித்துறையைச் சார்ந்தோருக்கு - குறிப்பாக உயர்நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம் போன்றவற்றில் நீதியரசர்களாக இருப்போருக்கு - அவர்களின் பொறுப்பையும், கடமையையும் சாட்டை அடியாக உறைக்க உணர்த்துவது போல அது அமைந்தது .
நீதியரசர்கள் என்றாலும் மக்கள் ஒப்புவித்த நீதித்துறை அதிகாரத்தை, மக்களின் சார்பிலான கடப்பாட்டில் அவர்கள் ஆற்றுகின்றார்கள், எனவே மக்களுக்குப் பொறுப்புக் கூட அவர்கள் கடமைப்பட்டவர்கள் என்பதை விலாவாரியாக அவர் விளக்கினார்.
கீழ்நிலை நீதிமன்றங்கள் ஒரு வழக்கில் தீர்ப்புக்கான காரணங்களை கூறவில்லை என்றால், அது ஒன்றே அத்தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீட்டு விசாரணைக்கும், மேன்முறையீட்டுத் தீர்ப்புக்கும் போதுமாகி விடுவதை சுமந்திரன் சுட்டிக்காட்டினார். கீழ்நிலை நீதிமன்றத்தின் தீர்ப்புகளை அந்த காரணத்துக்காகவே மாற்றும் மேனிலை நீதிமன்றங்களின் நீதியரசர்கள்,தமது தீர்ப்புகளில் அதை செய்வதில்லை என்று அவர் விசனம் தெரிவித்தார்.
அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு ஏற்பதா என்பதைப் பத்து நாள்களாகத் தொடர்ந்து விசாரணை செய்த உயர் நீதிமன்றத்தின் முழு ஆயம், காரணம் எதுவும் விவரிக்காமல், அந்த மனுக்களை விசாரணைக்கு ஏற்பதில்லை என்று ஒரு வரியில் தீர்ப்பு கூறுகின்றது. அப்படியானால் பத்து நாள்கள் என்ன விசாரித்தீர்கள்? அந்த முடிவுக்கு நீதிமன்றம் வந்தமைக்கான காரணத்தை அறியும் உரிமை மனுதாரருக்கு இல்லையா? தமது முடிவுக்குக் காரணம் கூறும் - பொறுப்புக் கூறும் - கடப்பாடு நீதியரசர்களுக்குக் கிடையாதா? - என்று கேட்டார் சுமந்திரன்.
நீதித்துறையும் பொறுப்புக் கூறலுக்குக் கடப்பாடு உடையது என்று சுட்டிக் காட்டினார் அவர். பிரதம நீதியரசர் பதவியில் இருந்தோர் எப்படி கீழ்த்தரமாகச் செயற்பட்டார்கள் என்பதை சில உதாரணங்களுடன் விவரித்த அவர், இத்தவறுகளைப் புரிந்த நீதித்துறையினர் தண்டிக்கப்படவே இல்லை, ஆனால் சாதாரண பிரஜைகள் மட்டும் நீதிமன்ற அவமதிப்பு என்ற பெயரில் தண்டிக்கப்பட வாய்ப்பளிப்பது எங்ஙனம் நியாயம் என்று கேள்வி எழுப்பினார்.
தீர்ப்புகள் நேர்மையான முறையில் விமர்சிக்கப்பட இடமளிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்திய அவர், அண்மையில் கொண்டுவரப்பட்ட சட்டங்கள் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் முடிவுகள், வழிகாட்டல்கள், பொறுப்புக் கூறும் கடப்பாட்டில் அமையவில்லை என்பதையும் சுட்டினார்.
கிரிமினல் குற்றம் ஒன்றுக்கான விடயம் விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்படுவதற்கு சட்டத்தில் கால அவகாசம் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இருபது ஆண்டுகளுக்கு பின்னர் பழைய கிரிமினல் குற்றம் ஒன்றுக்காக ஒருவரைத் தண்டிக்கவோ அல்லது விசாரிக்கவோ முடியாது என்று சுட்டிய அவர், ஆனால் நீதிமன்ற அவமதிப்புக் குற்றங்கள் விடயத்தில் மூலச் சட்டத்தில் வழங்கப்பட்ட காலவரையறையை நீக்கியதன் மூலம், பெரும் தவறுக்கு உயர் நீதிமன்றம் வழி செய்திருப்பதாக விமர்சித்தார். முப்பது வருடத்துக்கு முன்னர் நிகழ்ந்த நீதிமன்ற அவமதிப்புக்கு, இப்போது விசாரித்துத் தண்டனை வழங்கவும் வழி செய்யும் விதத்தில் சட்டத்தை உயர்நீதிமன்ற மாற்ற வழி செய்திருப்பதை அவர் குறை கூறினார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் தண்டனை இதுதான் என்று சட்டத்தில் வரையறை செய்யப்படவில்லை. நீதிமன்றம் தனக்கு உசிதமான தண்டனையை வழங்கலாம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படி வரையறை செய்யப்படாமல் இருப்பது ஆபத்தானது என்பதை சுமந்திரன் சுட்டினார்.
தண்டனையை வரையறை செய்யும் விடயம் இப்போது சமர்ப்பிக்கப்பட்ட சட்ட மூலத்தில் இருந்தது. ஆனால் அதை நிறைவேற்றுவதானால் மக்களிடம் சர்வஜன வாக்கெடுப்பு மூலம் அனுமதி பெற வேண்டும் என்று தீர்ப்பளித்ததன் மூலம், அந்த வரையறை செய்யும் வாய்ப்பை உயர் நீதிமன்றம் இல்லாமல் செய்து விட்டது. இன்றைய சூழலில் நீதிமன்றங்கள் தங்களுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு விடயங்களை உணர்ச்சி நிலையில் அணுகக் கூடிய சூழலில், இவ்வாறு தண்டனை வரையறை செய்யப்படாவிட்டால், சில சமயங்களில் நீதிமன்ற அவமதிப்புக்காக அந்த நீதிமன்றம் தன்னிச்சைப்படி மரண தண்டனை கூட வழங்க முடியும் என்பதை விசனத்துடன் சுட்டிக்காட்டினார் சுமந்திரன்.
அவரது நேற்றைய பேச்சின் காணொலியை உயர்நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம் ஆகியவற்றின் முன்னாள், இந்நாள் நீதியரசர்களுக்கு ஒரு தடவை அனுப்பிப் பார்க்கவும் செவிமடுக்கவும் செய்தால் நல்லது என்பது எனது பரிந்துரை. யார் செய்வார்கள்?