- by Editor
- 2 years ago
இரகசியம் - பரகசியம் (09.02.2025)
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வழக்கு வரும் வியாழக்கிழமை 13 ஆம் திகதி திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் மீண்டும் எடுத்துக் கொள்ளப்பட இருக்கின்றது.
இந்த வழக்கை இணக்கமாக - சுமுகமாக - தீர்த்து வைப்பதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராய்வதற்காகவே இந்த 13ஆம் திகதி இந்த வழக்கு நீதிமன்றத்தில் எடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், இணக்கத்திற்கான சாத்தியங்கள் அருகி விட்டன என்றே தோன்றுகின்றது.
இத்தகைய வழக்குத் தாக்கலாவதற்கான சூழ்நிலை தோன்றிய போதே, இப்படி வழக்குக்கு விடயம் போனால் இந்த விவகாரம் ஓரிரண்டு வருடங்கள் இழுபடும், அதனால் இவ்விடயத்தை முற்கூட்டியே சுமுகமாகத் தீர்த்துக் கொள்ளத் தரப்புகள் முன்வர வேண்டும் என்று இப்பத்தியில் திரும்பத் திரும்ப வலியுறுத்திக் குறிப்பிட்டு வந்தேன். ஆனால் தரப்புகள் கேட்கவில்லை. விவகாரம் நீதிமன்றுக்கு போய்விட்டது.
போன பின்னரும், அந்தக் கட்டத்தில் சுமுகமாக விவகாரத்தைத் தீர்ப்பதற்கு இணக்கம் காணப்படாவிட்டால் மேலும் ஓரிரண்டு வருடங்கள் விவகாரம் தள்ளிப் போவதைத் தவிர்க்க முடியாது என்றும் சுட்டிக்காட்டி வந்தேன்.
இப்போது எனது அந்தக் கருத்துத்தான் நடைமுறையில் நடக்கப் போகின்றது என்பதை மன வருத்தத்தோடு சுட்டிக் காட்ட வேண்டிய நிலைமைதான் உள்ளது.
இணக்கத்திற்கான ஏற்பாடுகள் தொடர்பில் எதிராளிகளான சிறிதரன் எம்.பி., குகதாசன் எம்.பி., முன்னால் எம்.பியான யோகேஸ்வரன் ஆகியோர் சார்பில் முன்வைக்கப்பட்டிருக்கும் திட்டம், வழக்கு இணக்கம் காணப்படாமல் நீதிமன்றத்தில் வழக்காடியே முடிவு தீர்மானிக்கப்பட வேண்டிய திசையை நோக்கி வழக்கை நகர்த்துவதாகத் தெரிகின்றது.
திருகோணமலையில் கடந்த வருடம் நடந்து முடிந்த கட்சியின் தேசிய மாநாட்டுக்கு முந்தியதான பொதுச் சபை கூட்டத்தில் 350 பேர் வரை பிரதிநிதிகளாகப் பங்கு பற்றி வாக்களித்தமை தவறு என்று தெரிவித்தே இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது என்பது தெரிந்ததே.
வழக்காளியின் அந்த நிலைப்பாட்டை முழுமையாக ஏற்று, எல்லா விடயங்களையும் ஆரம்பத்தில் இருந்தே புதிதாகச் செய்வதற்கு தயார் என்று வழக்கின் தொடக்கத்தில் குறிப்பிட்ட சிறிதரன், குகதாசன், யோகேஸ்வரன் ஆகிய மூன்று வழக்காளிகளும் இப்போது இணக்கமான தீர்வுக்கு முன்வைக்கும் யோசனை அதற்கு மாறானதாக உள்ளது.
326 பொதுச் சபை உறுப்பினர்களும் மீண்டும் வாக்களித்து தலைவர், செயலாளர் பதவிகள் உட்பட எல்லாப் பிரிவுகளையும் பழைய ஒழுங்கில் முன்னெடுக்கலாம் என்ற திட்டத்துக்கே அவர்கள் இப்போது இணக்கம் தெரிவித்து இருக்கிறார்கள்.
இந்த விடயத்தைத் தான் வழக்காளி தமது வழக்குக்கான பிரதான விவகாரமாக முன் வைத்திருந்தார்.
156 பொதுச் சபை உறுப்பினர்களே வாக்களித்து புதிய நிர்வாகிகளை தெரிவு செய்ய வேண்டிய இடத்தில் அதற்கு மாறாக சுமார் 350 பேர் பொதுச் சபை உறுப்பினர்களாக பங்கு பற்றி, புதிய தலைவரைத் தேர்ந்தெடுத்தமை தவறு என்ற அடிப்படையிலேயே இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது.
இந்தப் பின்புலத்தில் அந்தப் பிரதான விடயத்தையே வாதத்துக்குரியதாக முக்கிய எதிராளிகள் முன் வைத்திருப்பதால், இனி வழக்கு சமரசமாகத் தீர்க்கப்படுவதற்கு - இணக்கமாக முடிவுறுத்தப்படுவதற்கு - சாத்தியம் இல்லை என்றே தோன்றுகின்றது.
இரு தரப்புக்களும் சுமுகமாக - இணக்கமாக - பேசி பிரச்சினையைத் தீர்ப்பதைத் தவிர்த்து, வாதாடிப் பார்ப்போம் என்ற நிலையை நோக்கி நகர்ந்து விட்டமையையே இப்போது அவர்கள் எடுத்துள்ள நிலைப்பாடு தெளிவுபடுத்துகிறது.
எனவே தமிழரசுக் கட்சி வழக்கு நிச்சயமாக அடுத்த இரண்டொரு வருடங்களுக்கு இனிமேல் நீடித்தாலும் அதில் ஆச்சரியம் இருக்கப் போவதில்லை. இப்போதைய இடைக்கால நிலைமை மேலும் ஓரிரு வருடங்களுக்கு நீடிக்கப் போகிறது.
இதற்கிடையில் தமிழரசுக் கட்சியின் தற்போதைய மத்திய குழு வரும் 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் இல்லத்தில் கூட விருக்கின்றது.
இந்த மத்திய குழு கூட்டம் எட்டாம் தேதி நடைபெறுவதாக இருந்தது. எனினும் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் மறைவையொட்டி அது பிற்போடப் பட்டிருந்தது. அதுவே 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.