- by Editor
- 1 year ago
இரகசியம் - பரகசியம் (08.3.2025)
-
- by Editor,
- 1 year ago
- in இரகசியம் பரகசியம்
இது, வடக்கில் அரச நிர்வாக மட்டத்தில், வெளியே தெரியாமல் - சத்தம் சந்தடியின்றி - சிண்டைப் பிய்த்துக் கொள்ளும் விதத்தில் கட்டவிழும் ஒரு விவகாரம் பற்றிய தகவல்.
இன்றைய காலை முரசில் பிறிதொரு பக்கத்தில் 'யாழ் மாவட்டத்துக்கு வந்து சேர்ந்த மொத்த நிதியில் 2019 இல்தான் அதிக ம் திருப்பி அனுப்பப்பட்டதாம்!' என்ற தலைப்பில் ஒரு செய்தி பிரசுரமாகி உள்ளது. மேலோட்டமாகப் பார்த்தால் அதில் பெரிய விவகாரம் ஒன்றுமில்லை .ஆனால் ஊடுருவிப் பார்த்தால் சில விடயங்கள் தெரியும்.
இப்போது ஆளுநராக இருக்கும் நா.வேதநாயகன் முன்னர் யாழ்ப்பாண அரசாங்க அதிபராக இருந்தவர். அப்போது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக இருந்த அங்கஜன் எம்.பியோடு முரண்பட்டுக் கொண்டு மூன்று மாதம் முன்னதாகவே யாழ். அரச அதிபர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றுச் சென்றவர். அப்போதைய ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜனின் அரவணைப்போடு யாழ் மேலதிக அரசாங்க அதிபராக மருதலிங்கம் பிரதீபன் பதவியேற்ற சில காலத்திலேயே வேதநாயகன் அரச அதிபர் பதவியில் இருந்து விலகி முற்கூட்டியே ஓய்வில் செல்ல வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது.
இப்போது வேதநாயகன் வடக்கு மாகாண ஆளுநர். அவரின் நிர்வாகத்தின் கீழ் யாழ் அரச அதிபர் பொறுப்பில் பிரதீபன். இருவருக்கும் இடையில் வெளியே தெரியாத ஓர் அக்கப்போர் நீடிப்பதாக பிற அரச அதிகாரிகள் கூறுகிறார்கள்.
வடக்கிற்கு அனுப்பப்பட்ட நிதியில் எவ்வளவு பணம் பயன்படுத்தப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது என்பதை வருட ரீதியாகக் கணக்கெடுத்து அனுப்பும்படி நாடாளுமன்ற செயலாளர் வடக்கின் சகல மாவட்டங்களின் அரசு அதிபர்களையும் கோரியிருக்கிறார்.
அந்த வகையில் யாழ்ப்பாண மாவட்ட விவரத்தை யாழ். அரசு அதிபர் பிரதீபன் இப்போது அனுப்பி வைத்துள்ளார். அதில் கடந்த 16 ஆண்டுகளில் வேதநாயகன் யாழ். அரசு அதிபராக இருந்த 2019இல் தான் அதிகம் நிதி திருப்பி அனுப்பப்பட்டுள்ளது என்று யாழ் அரசு அதிபர் பிரதீபன் இப்போது சுட்டிக்காட்டி இருக்கிறார்.
இதன் விளைவு என்ன வடிவத்தில் பிரதிபலிக்கும் என்பதை இனித்தான் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
+++++++++++++
இலங்கைத் தமிழரசு கட்சி வரும் உள்ளூராட்சித் தேர்தலில் கொழும்பில் போட்டியிடுவதற்கான சாத்தியம் குறித்து கோடி காட்டி இருக்கிறது. அந்தத் திட்டத்திற்குக் கொழும்புப் பகுதியில் கணிசமான வரவேற்பு இருப்பதாக இலங்கைத் தமிழரசு கட்சியின் கொழும்புக் கிளை கூறுகிறது. கொழும்பில் இம்முறை போட்டியிடுவதா என்பது குறித்து நாளை வவுனியாவில் கூடவிருக்கும் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு ஆராய்ந்து முடிவு செய்யும் என்று கொழும்புக்கு கிளை தெரிவித்துள்ளது.
ஆயினும், இப்போதுள்ள நிலைமைகளின்படி கொழும்பில் உள்ளூராட்சித் தேர்தலில் தனித்தோ பிற தரப்புக்களுடன் சேர்ந்தோ தமிழரசுக் கட்சி போட்டியிடுவதற்கான வாய்ப்பு இல்லை என்றே தெரிகின்றது. பெரும்பாலும் கொழும்பில் போட்டியிடுவதில்லை என்ற முடிவையே நாளைய தமிழரசுக் கட்சியின் மத்திய குழு மேற்கொள்ளும் என்று கட்சி வட்டாரங்கள் கருத்து வெளியிட்டன.