- by Editor
- 5 months ago
இரகசியம் பரகசியம் (08.08.2024)
-
- by Editor,
- 2 years ago
- in இரகசியம் பரகசியம்
கோட்டாபயவின் ஆட்சிக்காலத்தில் 'குழப்பாடிக்கார' அமைச்சராக விளங்கிய இளவயது அரசியல்வாதிகளில் ஒருவர் லொஹான் ரத்வத்தை.
சந்திரிகா காலத்தில் பிரதி பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஜெனரல் அனுருத்த ரத்வத்தையின் மகன் இவர்.
அண்மையில் கூட மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டில் நாமல் ராஜபக்ஷவுடன் முரண்பட்டு அடாவடித்தனம் பண்ணினார் என்று ஊடகங்களில் செய்தி வெளியாகிப் பரபரப்பு ஏற்படுத்தியவர்.
கோட்டாவின் காலத்தில் சிறைத்துறை மற்றும் சிறை மறுசீரமைப்பு ராஜாங்க அமைச்சராக இருந்த லொஹான் ரத்வத்தை, 2021 செப்டம்பரில் அநுராதபுரம் சிறைக்குள் இருள் கவியும் நேரம் போதையில் தடாலடியாக நுழைந்து, அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் கைதிகளை சிறைக்குள் பொது இடத்தில் கூட்டி, முட்டுக்காலில் நிறுத்தி, அவர்கள் தலையில் துப்பாக்கி வைத்துஇ அச்சுறுத்தி, அட்டகாசம் புரிந்தமை பற்றிய செய்திகள் அச்சமயத்தில் பரபரப்பாக வெளியாகி இருந்தமை வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.
இது தொடர்பாக சிறைத்துறை விசாரணை, தனி விசாரணை குழுவின் விசாரணை எல்லாம் நடந்து முடிந்து விட்டன. உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு நிலுவையில் உள்ளது. அதே சமயம் இந்த விடயம் தொடர்பாக அநுராதபுரம் நீதிவான் நீதிமன்றத்தில் லொஹான் ரத்வத்தையின் மீது கிரிமினல் வழக்கு ஒன்றும் நிலுவையில் உள்ளது.
அந்த வழக்கு இன்று அநுராதபுரம் நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட உள்ளது.
சம்பவம் நடைபெற்ற போது அநுராதபுரம் சிறையில் இருந்த அரசியல் கைதிகளில் ஒருவர் சூரியபாலன். அவர் தலையில்தான் பிஸ்டலை வைத்து அவரை கொல்வேன் என்று லொஹான் ரத்வத்தை அச்சுறுத்தினார் எனக் கூறப்படுகிறது. அந்த சூரியபாலன் இப்போது கைதி அல்லர். விடுதலையாகி விட்டார்.
வழக்கில் இன்று அவர் சாட்சியமளிக்க வேண்டும்.
அவரது சாட்சியத்தை சட்டத்தரணி கேசவன் சயந்தன், சட்டத்தரணி வென்ஸ்ஸலர்ஸ் துஷாந்தவின் அனுசரணையுடன் நெறிப்படுத்தவிருக்கின்றார்.
அரசியல் கைதியாக சிறையில் இருந்த போது அவருக்கு இருந்த பாதுகாப்பு இப்போது வெளியில் இருக்கும் அவருக்கு உண்டா என்பது கேள்விக்குறியே.
எனினும் உண்மையை அவர் நீதிமன்றத்தில் கூறத்தான் வேண்டும்.
உண்மையைத் துணிச்சலாக எடுத்துக் கூறிவிட்டு, உயிர் வாழ்க்கையை அச்சுறுத்தலோடுதான் எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.
பார்ப்போம் அவர் துணிச்சலை...!