- by Editor
- 6 months ago
இரகசியம் - பரகசியம் (07.03.2025)
-
- by Editor,
- 1 year ago
- in இரகசியம் பரகசியம்
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக 2023 முற்பகுதியில் தாக்கல் செய்யப்பட்ட பழைய வேட்பு மனுக்களை ஒட்டி மூன்று பிரதேச சபைகளை சம்பந்தப்படுத்தி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் நேற்று மீளப் பெறப்பட்டன.
இதனால் இந்த பிரதேச சபைகளுக்கான தேர்தல்களையும் ஏனைய பிரதேச சபைகளுடன் சேர்த்து நடத்துவதற்கான வாய்ப்புக் கிட்டியுள்ளது.
மன்னார் பிரதேச சபைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும், தெஹியத்தகண்டிய பிரதேச சபைக்கு ஐக்கிய தேசியக் கூட்டமைப்பும், தவிரவும் பூநகரிப் பிரதேச சபைக்கு பிறிதொரு தரப்பும் தாக்கல் செய்த வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமையை ஆட்சேபித்து இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்த வழக்குகள் நிலுவையில் இருந்த காரணத்தினால் மேற்படி மூன்று பிரதேச சபைகளுக்குமான தேர்தல்களுக்கு புதிய வேட்பு மனுக்களை கோருவது இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இந்த மூன்று பிரதேச சபைகள் தொடர்பான உயர் நீதிமன்ற வழக்குகள் நீதியரசர் மஹிந்த சமயவர்த்தன, மேனகா விஜயசுந்தர ஆகியோர் முன்னிலையில் நகர்த்தல் பத்திரம் மூலம் நேற்று முன்னெடுக்கப்பட்டன.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளதால், முன்னைய வேட்பு மனுக்கள் ரத்தாகி, புதிய வேட்பு மனுக்களை ஏற்றுக்கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டிருப்பது நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. அதை அடுத்து அந்த வழக்குகளை மீளப் பெறுவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
வழக்குகள் கை வாங்கப்பட்டுள்ள நிலையில் இந்த மூன்று சபைகளுக்குமான தேர்தல் அறிவிப்பையும் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளும் நாள்கள் பற்றிய அறிவிப்பையும் தேர்தல் ஆணையம் வரும் திங்கட்கிழமையன்று வெளியிடும் என்று தெரிகின்றது.
அந்தத் தினத்தில் இருந்து - அதாவது திங்கட்கிழமை பத்தாம் திகதியிலிருந்து 14 நாள்களின் பின்னர் மூன்றரை நாள்களுக்கு வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் எனப் பெரும்பாலும் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது வரும் 24, 25, 26 மற்றும் 27 ஆகிய திகதிகளில் இந்த மூன்று பிரதேச சபைகளுக்குமான வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கல்முனை மாநகர சபை தொடர்பான விடயத்தில் அந்த உள்ளூராட்சி சபையின் வட்டார எல்லை நிர்ணயம் தொடர்பாக மீள் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று கோரித் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் இருப்பதால் அந்த சபைக்கான தேர்தல் இப்போது நடைபெறாது என சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.
இப்போது புதிதாக வேட்பு மனு கோரப்படும் மூன்று உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தல்கள் ஏனைய அனைத்து உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தல்களுடன் சேர்த்து ஒரே நாளிலேதான் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. பெரும்பாலும் மே முதல் வாரத்தில் தேர்தல் திகதி அமையும் என்று விடயமறிந்த வட்டாரங்கள் உறுதியாகக் கூறின.
+++++++++++++++
'வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும், ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும்' - என்று கூறுவார்கள். அரசியலிலும் இது சகஜம் போலும்.
2009 ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்தமையை அடுத்து 2010 ஜனவரியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ பெருவெற்றியீட்டினார். அந்த வெற்றியை அடுத்து அவர் நாடாளுமன்றத்தைக் கலைக்க, 2010 ஏப்ரலில் பொதுத்தேர்தல் வந்தது. அந்தப் பொதுத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் தமது வீணைச் சின்னத்தில் போட்டியிடுவதற்கு ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தா ஒற்றைக் காலில் நின்றார். ஆனால் அப்போது சிறிலங்கா சுதந்திரக் கட்சியைத் தமது முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ராஜபக்ஷக்கள் தங்களுடைய கூட்டணியின் வெற்றிலைச் சின்னத்தில்தான் ஈ.பி.டி.பி. போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்திக் கட்டாயப்படுத்தினர். வேறு வழியின்றி அந்த அழுத்தத்துக்கு அடிபணிய வேண்டியவரானார் டக்லஸ் தேவானந்தா.
இப்போது நிலைமை தலைகீழ்.
ராஜபக்ஷ்க்களின் சிறிலங்கா பொதுஜன பெரமுன (மொட்டுக்) கட்சி வடக்கில் யாருடன் கூட்டுச் சேர்வது என்று தெரியாத இக்கட்டில் உள்ளது. ஈ.பி.டி.பியின் பட்டியலில் சேர்ந்து போட்டியிட மொட்டு விரும்புகின்ற போதிலும் அந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டார் டக்ளஸ் தேவானந்தா என அறிய வந்தது.
டக்ளஸ் தேவானந்தாவைப் பொறுத்தவரை அவரது நிலைப்பாடு ஒருவகையில் சரியானது. 'மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி!' என்பது அவரது கோஷம். மத்தியில் - கொழும்பில் - பெரும்பான்மை இனவாதிகளின் கட்சியில் சேர்ந்து போட்டியிடுவது கூட்டாட்சித் தத்துவம். தமது தாயகத்தில் - உள்ளூர் விடயங்களில் - தனித்துப் போட்டியிடுவது மாநிலத்தில் சுயாட்சி விவகாரம்தான். ஆகவே அதில் மொட்டுவுக்கு இடம் அளிக்க மாட்டேன் என்று அவர் கை விரித்தமையை தவறு என்றும் கூற முடியாதுதானே!
+++++++++++++++
உடலுக்குப் பெரும் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களுடன் யாழ். குடா நாட்டின் காற்று மாசுபாடு உச்சமாக உள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் வழிகாட்டலின் கீழ், மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை தயாரித்த ஒரு மதிப்பீட்டு அறிக்கையில் இந்த விவரம் அம்பலமாகியுள்ளது.
யாழ். குடா நாட்டின் காற்று மாசுபாடு உச்சமாக உள்ளது எனத் தெரிவித்து, அது தொடர்பில் உரிய நடவடிக்கைக்கு உத்தரவிடுமாறு கோரி, கலாநிதி உமாசுகி நடராஜன் என்பவர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த வழக்கை ஒட்டி குடா நாட்டின் காற்றின் தரம் மற்றும் மாசுபாடு குறித்து ஒரு மாத காலத்திற்கு தரவுகளைச் சேகரித்து அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்குமாறு மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அந்த வழக்கு நேற்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைமை நீதியரசர் முகமட் லாபர் தாஹிர் மற்றும் நீதியரசர் சரத் திஸநாயக்க ஆகியோர் முன்னிலையில் எடுக்கப்பட்ட போது மேற்படி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
அந்த அறிக்கையிலேயே மக்களின் உடலுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடிய ஆபத்தான உள்ளடக்கங்கள் பெரும் மாசாகக் குடாநாட்டின் காற்றில் கலந்துள்ளன என்பது வெளிப்படுத்தப்பட்டது.
இதை நிவர்த்தி செய்வதற்கான திட்டங்களை முன்னெடுப்பதாயின் அதற்கு பெரும் நிதிச் செலவு வரும் என்பதால் அது பற்றி ஆராயப்பட்டு வருவதாக நேற்று நீதிமன்றத்திற்குத் தெரியப்படுத்தப்பட்டது.
சர்வதேச நாடுகள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து உதவிகளைப் பெற்று இந்தக் காற்று மாசுபாட்டை நீக்குவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்று சட்டமா அதிபர் தரப்பில் நேற்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதை அடுத்து வழக்கு ஜூலை 5 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.