Wednesday, October 7, 2026

இரகசியம் - பரகசியம் (06.02.2024)


இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னைய மத்திய குழுவின் கூட்டத்தை வரும் ஞாயிற்றுக்கிழமை 11ஆம் திகதி வவுனியாவில் கூட்டி, நிலைமையை ஆராயும் மாவை சேனாதிராஜாவின் முயற்சி பலனளிக்கும் போல் தெரியவில்லை.

சிங்கப்பூரில் மகனின் திருமண நிகழ்வுக்காக புறப்பட்ட மாவை சேனாதிராஜா, அதற்கு முன்னர் கட்சியின் முன்னைய நிர்வாகச் செயலாளருடன் தொடர்பு கொண்டு, தாம் வரும் 10 ஆம் திகதி நாடு திரும்பி விடுவார் என்றும், அதற்கு பின்னர் 11 ஆம் திகதி இந்தக் கூட்டத்தைக் கூட்டலாமா என்பதை இதுவரை காலமும் பொதுச்செயலாளராக இருந்த மருத்துவர் சத்தியலிங்கம், புதிய தலைவராகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் ஸ்ரீதரன் எம்.பி. மற்றும் சுமந்திரன் எம்.பி. ஆகியோருடன் தொடர்பு கொண்டு ஆலோசித்து நடவடிக்கை எடுக்கும்படியும் பணித்திருந்தார் எனத் தெரிகின்றது.

ஆனால் அவர் குறிப்பிட்ட மூவரில் இருவர் - டாக்டர் சத்தியலிங்கமும் சுமந்திரனும் - முடிந்த செயற்குழுவை மீண்டும் கூட்ட முடியாது என்ற உறுதிப்பாட்டை தெரியப்படுத்தி இருப்பதால், அந்தக் கூட்டத்தை அத்தினத்தில் கூட்டுவது சாத்தியமல்ல என்பது இப்போது தெரியவந்துள்ளது.

இதற்கிடையில் கட்சியின் பொதுச் செயலாளர் பதவி மட்டக்களப்பு மாவட்டத்திற்குத் தரப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதத்தில் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்துப் பெறும் ஒரு முயற்சி மட்டக்களப்பில் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அந்த முயற்சிக்குப் போதிய எண்ணிக்கையில் கையெழுத்து ஆதரவு கிட்டுமா, அத்தகைய கையெழுத்துக்கள் மூலம் பொதுச் செயலாளர் பதவி நிலையில் மாற்றங்கள் செய்ய முடியுமா என்பவற்றைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

புதிய தலைவராகத் தெரிவாகி இருக்கும் சிறீதரனுக்கு கட்சியின் முக்கிய பிரமுகர் ஒருவர் சொன்ன அட்வைஸ் என் காதுகளுக்கும் கிடைத்தது.

''மாவையின் தலைமைப் பதவிக்காலம் முடிந்துவிட்டது. இனியும் அவரின் கதையைக் கேட்டு நீங்களும் மாவையாகி விடாதீர்கள்!'' - இதுதான் அவரின் அட்வைஸ்.

எல்லா பக்கங்களையும், தரப்புக்களையும் சமாளிக்க வேண்டும் என்ற நினைப்பில், இழுத்த பக்கம் எல்லாம் சாய்ந்து, இன்னொரு மாவையாகவே உருவாக சிறீதரன் தீவிரமாக முயற்சித்துக் கொண்டிருக்கின்றாரோ என்றுதான் எனக்குத் தோன்றுகின்றது.

***

எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸா தமது கட்சியில் முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்நாயக்கவை சேர்த்துக் கொண்டமையால் மற்றொரு முன்னாள் இராணுவத் தளபதியான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கோபாவேசம் கொண்டு சீறி எழுந்திருக்கின்றார் என்பது தெரிந்ததுதான்.

சஜித்தையும் கட்சியையும் தாக்கும் விதத்தில் சரத் பொன்சேகா கருத்து வெளியிட்டு வருகிறார்.

இப்போது ஐக்கிய மக்கள் சக்தியுடன் கோபித்துக் கொண்டு, தனிக்கட்சி ஆரம்பித்து, மீண்டும் தனி வழி போக சரத் பொன்சேகா தயாராகி வருகின்றார் என்று தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டு இருக்கின்றன. அந்த தகவலில் கூறப்பட்டிருப்பதை வருமாறு:-

ஐக்கிய மக்கள் சக்தியின் துணைத் தலைவரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் தலைமையில் புதிய கட்சி தொடங்கப்பட்டுள்ளது.

அக்கட்சியின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கம் ஜனவரி மூன்றாம் திகதி உருவாக்கப்பட்டது.

இந்த முகநூல் பக்கத்தில் 2024ஆம் ஆண்டிற்கான சரத் பொன்சேகா என்ற பதிவுகள் வெளியாகியுள்ளன.

நாட்டின் முன்னேற்றத்திற்குக் கட்சி பேதமின்றி தேசிய வளர்ச்சிக் கொள்கைகளின்படி நடக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்மையில், முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்நாயக்கவை ஐக்கிய மக்கள் சக்தியில் இணைத்தமைக்கு சரத் பொன்சேகா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

அத்துடன், அக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் சர்ச்சை நிலை உருவாகியுள்ளது.

தயா ரத்நாயக்கவை கட்சியில் இணைத்துக் கொண்டால், கோட்டாபய ராஜபக்‌ஷவையும் கட்சியில் இணைத்துக் கொள்ள முடியும் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ள நிலையில், அந்தக் கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இதனால், கட்சி விரைவில் பிளவுபடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

- இப்படி அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

you may also like