Saturday, October 10, 2026

இரகசியம் - பரகசியம் (05.04.2024)


தேசிய மக்கள் சக்தியின் (ஜே.வி.பியின்) தலைவர் அநுரகுமார திஸநாயக்க யாழ்ப்பாணத்தில் நிற்கின்றார்.

'சோழியன் குடுமி சும்மா ஆடுவதில்லைதானே...!' ஜனாதிபதி தேர்தல் வருகின்றது. தமிழர் தரப்பில் (வாக்குகள்) சுருட்டிய மட்டில் லாபம் என்ற கணக்கில் பிடுங்க முயற்சி எடுத்து வந்திருப்பார் என நினைக்கிறேன்.

தமிழர் தாயகமான வடக்குக் கிழக்கைப் பிரித்த பிரதான பிரகிருதி இவர்தான். இவரது கட்சிதான். இப்போது வாய் சொட்டச் சொட்ட, தமிழர் தேச - தேசிய - ஐக்கியம், தமிழர் பண்பாடு, அவர்களின் அடிப்படை உரிமைகள், கௌரவமான வாழ்வு பற்றியெல்லான் புளுகல் செய்திகள், கதைகளுடன் வந்திருக்கின்றார்.

நேற்று மாலை தமிழரசு பிரமுகர் சுமந்திரனை அவர் சந்திப்பதாக ஏற்பாடு - யாழ்ப்பாணத்தில் தனியார் விடுதி ஒன்றில்.

அங்கு ஒரு பொது நிகழ்வில் உரையாற்றிக் கொண்டிருந்தார் அநுரகுமார. அவரைச் சந்திக்க நேரத்துடன் வந்த சுமந்திரன் அந்த நிகழ்வில் பார்வையாளராக அமர்ந்து கொண்டார்.

தமது கருத்துரையில் அநுரகுமார ஒரு விடயத்தைச் சொன்னார். அதன் சாராம்சம் இதுதான்:-

''இந்தியாவைப் பாருங்கள். ஒரு சீக்கியர் மன்மோகன் சிங் அந்த நாட்டின் பிரதமராக முடிந்தது. ஒரு தமிழ் இஸ்லாமியரான அப்துல் கலாம் ஜனாதிபதியாக முடிந்தது. இப்போது ஒரு சிறுபான்மைப் பழங்குடி இனப்பெண் நாட்டின் ஜனாதிபதி. பல மொழி, பல இன மக்கள் வாழும் நாடு ஒற்றுமையாக இப்படி வாழ்கின்றது. அந்த நிலை எப்போது இலங்கைக்கு வரும்?'' - என்று விசனத்துடன் கேட்டார் அநுரகுமார.

கூட்டத்தின் முடிவில் அநுரகுமாரவைச் சந்தித்த சுமந்திரன், அநுரகுமார குறிப்பிட்ட இந்திய நிலைமையை நினைவூட்டி, அது ஏன் இலங்கையில் சாத்தியமாகவில்லை, இந்தியாவில் சாத்தியமாயிற்று என்று கேட்டாராம்.

பதிலை சுமந்திரனிடமே எதிர்பார்த்தார் அநுரகுமார.

''அந்த நாடு மொழி வாரி மாநிலங்களாக சமஷ்டி அடிப்படையில் தனித்துவமான முறையில் அமைந்தது. அந்த மக்கள் தத்தமது மொழிகளில் காரியமாற்ற - தத்தமது விடயங்களை அணுகவும் ஆற்றவும் - அனுமதித்தனர். அதுதான் ஒற்றுமையான - பலமான - வலிமையான - ஐக்கியமான - நாடாக அது உருப்பெறுவதைச் சாத்தியமாக்கியது. அதை நீங்கள் இங்கு மறுத்தமையால்தான் இந்த நிலைமை'' - என்றார் சுமந்திரன். அநுரகுமார முகத்தில் ஈயாடவில்லை. சுமந்திரன் தொடர்ந்தார்.

''இரண்டு நாடுகளுமே ஒரே சூழ்நிலையில் - ஒரே மாதிரிக் கட்டமைப்பிலேயே - சுதந்திரம் பெற்றன. அந்தச் சமயத்தில் நாங்கள் - தமிழர்கள் - சமஷ்டியைக் கோரவில்லை. ஆனால் சிங்களவர்களாகிய உங்கள் மத்தியில் இருந்துதான் அந்த கோரிக்கை - சமஷ்டி வேண்டுகோள் - அப்போது முதலில் வந்தது. நாங்கள் அதை அப்போது ஏற்கவில்லை. பெரும்பான்மையினரான சிங்களவர்களை நம்பினோம். அதன் விளைவை இன்று அனுபவிக்கிறோம்.

இந்தியாவிலிருப்பது சமஷ்டி என்று பெயர் குறிப்பிடாத ஒரு சமஷ்டி ஆட்சிமுறைதான். அதுதான் நாடு மேலும் ஐக்கியமாக இருப்பதற்கு உயர்ந்த வலிமையான வழி. சமஷ்டி என்பது பிரிவினை அல்ல. மாறாக, நாட்டின் தேசிய ஐக்கியத்தை வலிமையாக்கி உறுதிப்படுத்தும் ஓர் இறுக்கமான கட்டு'' என்று சுமந்திரன் தெளிவுபடுத்தினார்.

பேரினவாதத்தில் மூழ்கிய - ஒரே குட்டையில் உரிய - மட்டையில் அநுரகுமாரவும் வேறல்லர். சுமந்திரன் உரைத்த இந்த வேதம் - உண்மை - அநுர குமாரவின் மனத்தில் உறைத்திருந்தாலும், அதைக் கொள்கை அளவில் தன்னும் அவர் ஏற்க மாட்டார் என்பது தெளிவு.

சிறுபான்மையினரான ஒரு தேசிய இனத்தின் தனித்துவம், வாழ்வியல் உரிமைகள், வாழ்வியல் இருப்பு போன்றவற்றை எல்லாம் அங்கீகரித்து, அதற்காகக் கவலைப்படுபவர் போல நேர்த்தியாக யாழ் கூட்டங்களில் லெக்ஸர் அடித்த அவர், தமிழ் தேசியத்தின் தாயகமான வடக்குக் கிழக்கை தனித்துவமாக ஒன்றித்திருப்பதை அங்கீகரிக்கவோ வலியுறுத்தவோ மாட்டார். ஏனென்றால் அவர் மூளையில் ஓடுவதும் கூட பேரினவாத இரத்தம்தான். வெளியில் அவர் சீருடை போட்டு மூடி வைத்திருக்கும் இடதுசாரி வேடம் மூளை மையத்தை மாற்றாதல்லவா? 

you may also like