- by Editor
- 2 years ago
இரகசியம் - பரகசியம் (04.6.2025)
-
- by Editor,
- 1 year ago
- in இரகசியம் பரகசியம்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உள் விவகார சர்ச்சை தொடர்பான வழக்கு இன்று திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட இருக்கின்றது.
இந்த வழக்கின் எதிராளிகளில் ஒருவராக இருந்த தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அந்தப் பதவியில் இருந்து விலகிய நிலையில் காலமாகிவிட்டார். அவரது இடத்திற்கு மற்றொரு எதிராளியாகக் கட்சியின் தற்போதைய தலைவர் சி.வி.கே.சிவஞானத்தை பதிலீடு செய்வதா என்பது குறித்து இன்று நீதிமன்றம் முடிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்கிடையில், கிளிநொச்சியைச் சேர்ந்த கட்சியின் பொதுச்சபை உறுப்பினர் ஒருவர் தம்மை இந்த வழக்கில் ஓர் எதிராளியாகச் சேர்த்துக் கொள்ளும்படி கோரி இடையீட்டு விண்ணப்பம் ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார். அந்த விடயமும் இன்று நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட இருக்கின்றது.
தமிழரசுக் கட்சியின் சார்பில் வடக்கு மாகாண சபையில் அங்கம் வகித்த பசுபதிப்பிள்ளையின் சகோதரர் சுப்பிரமணியம் சபாரத்தினம் என்பவரே இந்த மனுவை சட்டத்தரணி குருபரன் மூலம் தாக்கல் செய்திருக்கிறார் எனக் கூறப்பட்டது.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு ஒன்றரை வருடங்கள் கடக்கும் நிலையில் இப்போது இடையீட்டு மனுவை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளுமா என்பது தெரியவில்லை. ஏற்கனவே கிளிநொச்சியிலிருந்து தாக்கல் செய்யப்பட்ட இதுபோன்ற பிறிதொரு இடையீட்டு மனு திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் ஏற்கப்படாமல் போனமை தெரிந்ததே.
++++++++++++++++++
'சைக்கிள்' - 'சங்கு' கொள்கைக் கூட்டுத் தொடர்பான ஏற்பாடு சைக்கிள் தரப்பில் சில பிரமுகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பக்கத்தில் அதிருப்தி அலைகளை ஏற்படுத்தியிருக்கும் அதே சமயம், சங்குத் தரப்பிலும் சில குழப்பங்கள் ஏற்பட்டு இருப்பதாகத் தெரிகிறது.
ஜனநாயகத் தமிழ் தேசிய கூட்டணியாக சங்கு சின்னத்தில் தொடர்ந்து செயல்படத் தயார், ஆனால் சைக்கிளோடு கூட்டில் இடம் பெற தயார் இல்லை என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர்கள் சங்குக் கூட்டணித் தலைவர்களிடம் தெரிவித்துவிட்டனர் எனக் கூறப்படுகிறது.
இந்த உடன்பாடு எட்டப்பட்டு பகிரங்கப்படுத்தப்படும் நிகழ்வில் ரெலோ சார்பில் அதன் செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனா கருணாகரன் பங்குபற்றிய போதிலும், ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் இந்த அதிரடி கூட்டு ஏற்பாடு தொடர்பில் மிகுந்த அதிருப்தி கொண்டிருக்கிறார் எனத் தெரிகிறது.
யாழ்ப்பாணத்துக்குள் அடங்கிவிட்ட சைக்கிள் தரப்புடன் கொள்கைக் கூட்டு உடன்பாட்டுக்குத் திடீரென சென்றதன் மூலம் வன்னியிலும் கிழக்கிலும் சங்குக் கட்சி நட்டாற்றில் விடப்படும் ஆபத்து ஏற்பட்டு இருப்பதாக செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. கருதுகிறார் எனத் தெரிகிறது.
சைக்கிள் - சங்கு கொள்கைக் கூட்டை மீறி, வன்னியில் தமிழரசுக் கட்சியை அரவணைத்துப் போக செல்வம் தரப்பும் ஜனநாயக போராளிகள் தரப்பும் விரும்புகின்றன எனவும் தெரிகின்றது.
இதே சமயம் நல்லூர் பிரதேச சபையை முதல் இரண்டு வருடங்களுக்கு மானின் (தமிழ் மக்கள் கூட்டணியின்) நிர்வாகத்திற்கு கையள்ப்பதன் மூலம்,மான் தெரிவு செய்யப்பட்ட இடங்களில் எல்லாம் தமிழரசுக்கு அது ஆதரவு வழங்கும் நிலைமை ஏற்பட்டு இருப்பதாகவும் விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
காரைநகரில் மான் சின்னக் கட்சி ஆட்சி அமைக்க முற்பட்டால், அதற்கு தமிழரசு ஆதரவு வழங்கும் என்றும் தெரிகிறது.
தேசிய மக்கள் சக்தியின் ஆதரவை தமிழ்த் தேசியக் கட்சிகள் எவையும் கோராத இப்போதைய நிலையில், சர்ச்சைக்குரிய சில சபைகளில் தீர்மானிக்கும் தரப்பாக ஈ.பி.டி.பி. மாறக்கூடிய சாத்தியங்கள் உண்டு. ஊர்காவல்துறை பிரதேச சபையில் அதிக ஆசனங்களை (நான்கு) ஈ.பி.டி.பி. பெற்றுள்ளபோதும், அங்கு நிர்வாகத்தை அமைக்கும் எண்ணம் ஈ.பி.டி.பிக்கு அறவே இல்லை என்று தெரிகிறது.
சைக்கிள் - சங்கு கூட்டணியில் சந்திரகுமார் கஜேந்திரகுமார் போன்றோர் இடம்பெற்றிருக்கும் சூழ்நிலையில், அந்தத் தரப்புக்கு டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி. ஆதரவு அளிப்பதற்கான வாய்ப்புகள் ரொம்பவும் குறைவு. ஆயினும் தங்களுக்கு ஆதரவு தராவிடிலும் தமிழரசுக்கு ஆதரவு தராமல் நடுநிலை வகிக்குமாறு ஈ.பி.டி.பியைக் கோருவதற்காகவே புளொட் சித்தார்த்தனும் ஈ.பி.ஆர்.எல்.எவ். சுரேஷ் பிரேமச்சந்திரனும் இன்று ஈ.பி.டி.பி. தலைவர் டக்லஸ் தேவானந்தாவைச் சந்திக்கினர் என்று கூறப்படுகின்றது.
சைக்கிள் கட்சியின் தலைவர் கஜேந்திர குமாருக்குத் தெரியாமல் இன்றைய சந்திப்பு நடக்கவில்லை என சம்பந்தப்பட்ட வட்டாரம் ஒன்று உறுதி செய்தது.
இன்னும் பல திருவிழாக்கள் அடுத்து வரும் நாள்களில் கட்டவிழும். அப்போது அவற்றைப் பார்ப்போம்.