Saturday, October 10, 2026

இரகசியம் - பரகசியம் (04.12.2023)


சபாஷ்! சரியான போட்டி!

இலங்கைத் தமிழரசு கட்சியின் தலைவர் தெரிவு பற்றிய விவகாரத்தைத்தான் சொன்னேன்.

இரண்டு பேருக்கு இடையில் - சிறிதரன், சுமந்திரன் எம்.பிக்களுக்கு இடையில் - நேரடிப் போட்டி என்று பார்த்தால், இப்போது மூன்றாவது நபராக கிழக்கில் இருந்து ஒருவர் சத்தம் சந்தடி இன்றி - ஆரவாரம் காட்டாமல் - கடைசி நேரத்தில் 'றேஸுக்குள்' வந்து குதித்திருக்கின்றார்.

இரண்டு தடவைகள் மட்டக்களப்பில் இருந்து நாடாளுமன்றத்துக்கு தெரிவாகி, இம்முறை அந்த வாய்ப்பைக் கோட்டை விட்ட சீனித்தம்பி யோகேஸ்வரன்தான் அவர். சைவ சமயாசார சீலர்.

அவர் அம்சடக்காகப் போட்டிக்குள் நுழைந்த விதம்தான் சந்தேகத்தைக் கிளப்புகின்றது.

இரண்டு தினங்களுக்கு முன்னரே கிழக்கில் முக்கிய செய்தியாளர் சஷி புண்ணியமூர்த்தி தமது முகப்புத்தகத்தில் இது குறித்து விவரம் பதிந்திருந்தார். அந்தத் தகவலை முதலில் அப்படியே தருகிறேன்:-

தமிழரசு தலைமை பதவிக்கு மும்முனைப் போட்டியா?

தமிழரசு கட்சியின் தலைமை பதவிக்கு மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரனும் போட்டியிட இருந்ததாக தெரிய வருகின்றது.

ஆனாலும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் இந்தியாவிற்கு விஜயம் ஒன்று மேற்கொண்டு உள்ளதால் குறித்த தலைமை பதவி போட்டிக்கான காலம் நிறைவடைந்த காரணத்தினால் குறித்த தலைமை பதவி போட்டியிலிருந்து விலக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் பரவிய குறித்த விடயம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரனிடம் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அவ்வாறான ஒரு நிலைப்பாடு இருந்ததாகவும் முக்கிய உறுப்பினர்கள் இந்தியா சென்ற காரணத்தால் போட்டித் தேர்வுக்கான காலம் நிறைவடைந்த நிலையில் போட்டியிடுவது கைவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

- இதுதான் அந்த முகப் புத்தகச் செய்தி. இப்போது புதிய தகவல் வந்திருக்கின்றது. தமிழரசுக் கட்சியின் தலைவர் தேர்தலில் போட்டியிட விரும்புகின்றவர்களின் வேட்பு மனுக்கள் 30-11-2023க்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பது மத்திய குழுவின் முடிவு.

முன்னாள் எம்.பி. யோகேஸ்வரன் ஆறு பேரின் பரிந்துரையுடன் கூடிய தமது வேட்பு மனு விண்ணப்பித்தை 30-11-2023 அன்று மட்டக்களப்பில் இருந்து பதிவுத் தபாலில் பதில் பொதுச் செயலாளருக்கு அனுப்பி இருக்கின்றாராம். அதன் பதிவுச் சான்றிதழை வாட்ஸ் அப்பில் அன்றைய தினமே பொதுச் செயலாளருக்கு அவர் அனுப்பினார் என்றும் ஒரு தகவல்.

அப்படியாயின் தலைவர் தேர்தல் போட்டியில் இப்போது மூன்று பேர் உள்ளனர். நல்லது.

தமது வேட்புமனுவை யோகேஸ்வரன் சத்தம்சந்தடியின்றி அனுப்பியமை ஏன்? அனுப்பிய பின்னரும் அது குறித்து வெளிப்படுத்தாமல் அமுக்கி வாசிப்பது ஏன்? 'யோகேஸ்வரனைப் போட்டியில் நிறுத்த ஆயத்தப்படுத்தினோம், ஆனால் காலதாமதமானமையால் போட்டியிடும் முடிவை கைவிட்டு உள்ளோம்' என்ற சாரப்பட அரியநேத்திரன் கூறியமை ஏன்? - இவை இப்போதைக்கு விடை தெரியாத வினாக்கள்.

ஆக, இரண்டுங்கெட்டான் மனநிலையில்தான் - போட்டியில் இறங்குவதா அல்லது விடுவதா என்ற எண்ணத்துடன்தான் - களத்தில் யோகேஸ்வரன் இறங்கியுள்ளாரா? அதுவும் தெரியவில்லை.

எது, எப்படி என்றாலும் தேர்தலில் நிற்கும் உரிமை அவருக்கும் உண்டு. மும்முனைப் போட்டியாகத்தான் தேர்தல் நடந்து முடியட்டுமே. அதுவும் நல்லதுதானே. உட்கட்சி ஜனநாயகம் உச்சமாக இருக்கின்றது என்றுதானே அதன் அர்த்தம்!

இதையொட்டி கொசுறு தகவல் ஒன்று.

மன்னாரில் கடந்த வெள்ளிக்கிழமை (முதலாம் திகதி) மாலை ஒரு கூட்டத்தில் பேசிய சுமந்திரன் எம்.பி. ''தமிழரசுக் கட்சியில் பலருக்குத் தலைமைப் பதவிக்குத் தகுதி உண்டு. தலைமைப் பதவிக்கு இருவர் மாத்திரம் போட்டியிடவில்லை'' என்று அங்கு கூறியிருந்தார். அது அடுத்த நாள் காலை முரசில் தலைப்புச் செய்தியாகவும் பிரசுரமாகியிருந்தது.

தலைமைப் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கால எல்லை முடிந்து அடுத்த நாள் பகல் அவர் இந்த உரையை நிகழ்த்தி இருந்தார். மட்டக்களப்பு நிலைமை அறிந்துதான் அப்படி அவர் பேசியிருந்தாரோ...என்னவோ...? 

you may also like