- by Editor
- 1 year ago
இரகசியம் - பரகசியம் (04.09.2024)
எது நடக்கக் கூடும் என்று கோடி காட்டினேனோ அது நடந்து விட்டது.
மாகாண சபை தேர்தல் சட்டமூலம் நிறைவேறும் வரை தமிழரசு கட்சி புத்திசாலித்தனமாக நடந்திருக்க ஆலோசனைகள் இருந்தன. இரண்டு நாள் தாமதித்து இருந்தால், மாகாண சபைச் சட்ட மூலத்தை வெற்றிகரமாக நகர்த்தி இருக்க முடியும். இனிப்பேசி பயனில்லை.
இனி செய்யக்கூடிய - செய்ய வேண்டிய - வாய்ப்பான - நகர்வு குறித்து இன்றைய ஆசிரியர் தலையங்கத்தில் கோடி காட்டப்பட்டுள்ளது. அதற்கு முயற்சிப்பதுதான் நல்லது.
சஜித்தை ஆதரிக்கும் முடிவைத் தமிழரசு கட்சி எடுத்த பின்னர், அன்று மாலையில் சஜித் பிரேமதாஸவைச் சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்திருந்தது.
இந்த முடிவை - சஜித்தை ஆதரிக்கும் தீர்மானத்தை - தமிழரசுக் கட்சி எடுத்து,பகிரங்கமாக அறிவித்த பின்னர், அடுத்த இரண்டு நாள்களில் - அதாவது நேற்று மாகாண சபைகள் சட்டமூலம் நாடாளுமன்றுக்கு வர இருப்பதால் அதனை குழப்புவதற்கு ரணில் முயலுவார் என்ற என் அனுமானத்தை சஜித்திடம் கூறினேன்.
இந்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேறுவதை தடுப்பதற்காக திங்கட்கிழமை இரண்டாம் தேதி இரவு முதல் நாடாளுமன்றத்தை இடை நிறுத்தும் (Prorogue பண்ணும்) முடிவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுக்கலாம் என்ற என் எதிர்பார்ப்பைக் குறிப்பிட்டேன்.
சஜித் ''அப்படி செய்தால் செய்யட்டும். எங்களது புதிய அரசில் இந்தச் சட்டத்தை உடன் கொண்டு வந்து நிறைவேற்றுவோம். யோசிக்காதீர்கள்!'' என்றார் அவர்.
அவருக்குப் பதில் கூற எனக்கு வாயில் வந்தது. ஆயினும் நான் நிறுத்திக் கொண்டேன்.
'நல்லது. நீங்கள் அப்படிச் செய்யலாம். ஆனால் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடந்து, புதிய அரசு உருவாகி, அதன்பின்னர் இந்தச் சட்டத்தை முதலில் இருந்து மீளக் கொண்டு வந்து நிறைவேற்றி, அதன் பின்பு மாகாண சபை தேர்தலை அறிவித்து, அந்தத் தேர்தலை நடத்தி முடிப்பதற்கு இன்னும் ஒரு வருடம் வரை காத்திருக்க வேண்டி நேரும் என்று கூற முற்பட்டேன். ஆயினும் கூறவில்லை. அப்படி அவருடன் விவாதம் நடத்த வேண்டிய தேவை எனக்கு இருக்கவில்லை.
அதனால் அவர் கூறியவற்றை கேட்டு விளங்கிக் கொண்டு அடக்கிக் கொண்டேன்.
சஜித்தை ஆதரிக்கும் முடிவை தமிழரசு அவசரப்பட்டு வெளியிட்டமையால் தமிழினத்திற்கு மாகாண சபை தேர்தலை மீண்டும் நடத்த கேட்பதற்கான கிடைத்த அருமையான வாய்ப்பைத் தாமதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.
***
இலங்கையில் யுத்தத்தின் போது சர்வதேசக் குற்றச் செயல்களில் ஈடுபட்டனர் எனக் கூறப்படும் குற்றவாளிகள் குறித்துப் புலனாய்வு செய்து, விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஐ.நா.மனித உரிமைகள் கவுன்ஸிலின் உறுப்பு நாடுகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை கோரிக்கை விடுத்துள்ளது.
ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் கவுன்ஸிலின் 57ஆவது கூட்டத் தொடருக்கு முன்னதாக வெளியிடப்பட்ட இலங்கை தொடர்பான அறிக்கையில் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் அலுவலகம் இக்கோரிக்கையை முன்வைத்திருக்கின்றது.
மனித உரிமைகள் பேரவை மற்றும் உறுப்பு நாடுகள் இவ்விடயத்தில் குற்றவாளிகள் எனக் கருதப்படுவோரை புலனாய்வு செய்து, விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அங்கத்துவ நாடுகளை அந்த அறிக்கை கோருகின்றது.
இலங்கையில் பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதற்கு ஏனைய சர்வதேச சட்ட வழிவகைகளைப் பயன்படுத்துவதையும் பரிசீலிக்குமாறு உறுப்பு நாடுகளை இந்த அறிக்கை வலியுறுத்தியுள்ளதுள்ளமை குறிப்பிடத் தக்கது.